Ad

செவ்வாய், 27 அக்டோபர், 2020

ஒரு நாள்... ஒரு வார்னர்... ஒரு சாஹா... பல ஆஹா... தேன் எப்படி கிடைச்சதுன்னா..?! #SRHvDC

ஒரே ஒரு திராட்சை கொத்தைப் பறிக்க, இரண்டு மேட்ச்களாக தவ்விக்கொண்டிருக்கும் டெல்லி நரி, கையில் இருந்த வடையை பஞ்சாப் நரியிடம் இழந்த ஐதராபாத் காகம்... இரண்டும், துபாயில் நடந்த 2020 ஐபிஎல்லின் 47வது மேட்சில் மோதின. நரிக்கு திராட்சை கிட்டுமா? அல்லது `ச்சீ... இந்த பழம் புளிக்கும்' என திட்டுமா? காகம் மீண்டும் வடையைத் தூக்குமா? அல்லது கடையை சாத்திவிட்டு கிளம்புமா... எனும் ஆர்வத்தில் எல்லோரும் கதை கேட்க அமர்ந்தோம்.

டாஸ் வென்ற ஷ்ரேயாஸ், பனியைக் காரணம் காட்டி பௌலிங்கைத் தேர்ந்தெடுத்தார். அவரது அணியில் எந்த மாற்றமும் இல்லை. சன்ரைசர்ஸ் அணியில், 'சித்தன்' பேர்ஸ்டோவுக்கு பதில் கேன் வில்லியம்சனும், ப்ரியம் கார்குக்கு பதிலாக விரித்மான் சாஹாவும், கலீலுக்குப் பதிலாக நதீமும் இடம்பிடித்தனர். பலவீனமாக இருக்கும் சன்ரைசர்ஸின் மிடில் ஆர்டரை வலுப்படுத்த வில்லியம்சனைக் கூட்டிவந்தார் வார்னர். ஆனாலும், பேர்ஸ்டோவைக் கழற்றிவிட்டதில் கேஸ் ஸ்டவ் போல் எரிந்தது ரசிகர்களின் வயிறு!

#SRHvDC

வார்னரும் சாஹாவும் ஹைதராபாத்தின் இன்னிங்ஸை ஓப்பன் செய்ய, முதல் ஓவரை வீசவந்தார் நார்க்கியா. ஓவரின் 4-வது பந்தை, ஃபைன் லெக் திசையில் பவுண்டரிக்கு புல் செய்தார் சாஹா. ரபாடா வீசிய அடுத்த ஓவரில், இன்சைட் எட்ஜில் ஒரு பவுண்டரியும் ஸ்கொயர் லெக் திசையில் ஃப்ளிக் செய்து பவுண்டரியும் அள்ளினார் சாஹா. 3-வது ஓவரை வீசவந்தார் ரவிச்சந்திரன் அஷ்வின். ஸ்கொயர் லெக் திசையில் வார்னர் ஒரு சிக்ஸரை வெளுக்க, பேக்வார்ட் ஸ்கொயர் திசையில் சாஹா ஒரு பவுண்டரியை விரட்டினார்.

மீண்டும், 4-வது ஓவரை வீசவந்தார் நார்க்கியா. அந்த ஓவரில், அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை துவம்சம் செய்தார் வார்னர். 5-வது ஓவருக்கு வந்த அக்ஸர் பட்டேலை, மிட் ஆஃப் திசையில் ஒரு பவுண்டரியை ஊமைக் குத்தாக குத்திவிட்டார் வார்னர். கடுப்பான ஷ்ரேயாஸ் ரபடாவைக் கூட்டிவந்தார். ஆனால், வார்னர் அதைவிட பெருங்கடுப்பில் இருந்திருப்பார் போல. மிட் ஆனில் ஒரு பவுண்டரி, எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரி, லாங் ஆனில் ஒரு சிக்ஸர், பின்பக்கமாக ஒரு பவுண்டரி, ஷார்ட் தேர்ட் மேன் திசையில் இன்னொரு பவுண்டரி, 'து.பருப்பு கால் கிலோ, உ.பருப்பு இரண்டு கிலோ' என மளிகைக்கடை லிஸ்ட் போட்டு, பந்துகளைப் பொட்டலம் போட்டு கொடுத்தார் வார்னர். அப்படியே, தனது அரைசதத்தையும் நிறைவு செய்தார். பவர்ப்ளேயின் முடிவில், 77/0 என ஆந்திர மீல்ஸைப் போல் காரசாரமாக விளையாடிக்கொண்டிருந்தது சன்ரைசர்ஸ்.

#SRHvDC

7-வது ஓவர் வீசவந்த அக்ஸார் படேலுக்கு, டீப் ஸ்கொயரில் ஒரு பவுண்டரியை பரிசாக கொடுத்த சாஹா. 8வது ஓவரை வீசவந்த அஷ்வினுக்கு, பௌலரின் தலைக்கு மேல் ஒரு பவுண்டரியை பரிசாகக் கொடுத்தார். `சாஹா அடிப்பதுபோல் சோகம் உண்டோ' என நொந்துப்போனார்கள் டெல்லி ரசிகர்கள். அடுத்த ஓவரை வீசவந்தார் துஷார் பாண்டே. அதிசயமாக, அதுதான் அந்த இன்னிங்ஸில் பவுண்டரிகளைக் காணாத முதல் ஓவர். `என்னணே சொல்றீங்க...' என துஷாருக்கே பேரதிர்ச்சி.

எப்படியாவது விக்கெட்டைத் தூக்குவது என மீண்டும் 10-வது ஓவரை வீசவந்தார் அஷ்வின். லாங் ஆஃப் திசையில் ஒரு பவுண்டரியை விரட்டிவிட்டு `புட்டபொம்மா' ஆடிக்கொண்டிருந்த வார்னரை, `புட்டுகிச்சு போமா' என பெவிலியனுக்கு அனுப்பிவைத்தார் அஷ்வின். பெருமூச்சு விட்டது டெல்லி அணி. அதே ஓவரில், லாங் லெக் திசையில் ஒற்றை கையில் ஒரு பவுண்டரியைத் தட்டிவிட்டார் சாஹா. மீண்டும் மூச்சு திணறல் ஆரம்பித்தது. பத்து ஓவர்களின் முடிவில், 113/1 எனும் வலுவான நிலையில் இருந்தது சன்ரைசர்ஸ்.

மீண்டும், துஷார் வந்தார். டீப் ஸ்கொயரில் ஒரு பவுண்டரி, பாயின்ட் திசையில் ஒரு பவுண்டரி என 2 பவுண்டரிகளை விரட்டிய சாஹா, அப்படியே அரைசதத்தையும் கடந்தார். துஷாரோ, அதிர்ச்சியில் இருந்து மீண்டு வந்தார். பேர்ஸ்டோ ரசிகர்களின் வயிறு குளிர்ந்தது. அடுத்த ஓவரிலும், மிட் விக்கெட் திசையில் ஒரு சிக்ஸர், டீப் கவரில் ஒரு பவுண்டரியை வார்த்தார்.

13-வது ஓவரை வீசவந்தார் ரபாடா. `பர்பிள் கேப்புக்கு ஓனர்னா, ஓரமா போயா' என மிட்விக்கெட்டில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார் சாஹா. ஸ்டாய்னிஸ் வந்தார். அவர் ஓவரிலும் ஒரு பவுண்டரி. `பேசாம, ரிஷப் பன்ட்டை ஒரு ஓவர் போட சொல்லிடலாமா?' என ஆழந்த சிந்தனையில் இறங்கினார் ஷ்ரேயாஸ். கடைசியில், `கனெக்டிங் பீப்புள்' நார்க்கியா வந்து, சாஹாவை இன்னிங்ஸில் இருந்து டிஸ்கனெக்ட் செய்தார். மிட் ஆஃப் திசையில் கடைசியாக ஒரு பவுண்டரியை அடித்துவிட்டு, அதே மிட் ஆஃப் திசையில் கேட்சும் கொடுத்து கிளம்பினார் சாஹா. 45 பந்துகளில் 87 ரன்கள். வெறும் 13 ரன்களில், சதம் மிஸ்ஸிங்! ப்ச்ச்ச்...

#SRHvDC

அதே ஓவரில், மணிஷ் பாண்டே ஒரு பவுண்டரியைத் தட்டிவிட்டார். அக்ஸார் வீசிய 16-வது ஓவரில், பவுண்டரி ஏதும் கிட்டவில்லை. அந்த ஆத்திரத்தை, அடுத்த ஓவர் வீசவந்த அப்பாவி துஷாரின் மீது இறக்கிவைத்தது சன்ரைசர்ஸ். பெளலருக்கு நேராக ஒன்று, டீப் மிட்விக்கெட் மற்றும் லாங் ஆன் இடையில் ஒன்று என இரண்டு பவுண்டரிகள். டீப் மிட் விக்கெட் திசையின் மேல் ஒரு சிக்ஸர் என பொளந்தார் பாண்டே. ஸ்டாய்னிஸ் வீசிய, 18-வது ஓவரிலும் பவுண்டரிகள் ஏதும் கிட்டவில்லை. நார்க்கியா வீசிய 19-வது ஓவரில், ஒரே ஒரு பவுண்டரி கிடைத்தது பாண்டேவுக்கு. ரபடா வீசிய கடைசி ஓவரில், வில்லியம்சன் தன் பங்குக்கு ஒரு பவுண்டரியை விரட்ட, 219/2 என கெத்தாக இன்னிங்ஸை முடித்தது சன்ரைசர்ஸ்.

220 ரன்கள் எடுத்தால் வெற்றி, எனும் கடினமான இலக்கோடு இன்னிங்ஸைத் தொடங்கியது தவான் - ரஹானே இணை. சந்தீப் ஷர்மா முதல் ஓவரை வீசவந்தார். டெல்லி அணியைப் போட்டு பொளந்ததில், டயர்டாகிப்போன சாஹாவுக்கு பதிலாக சப்ஸ்டிட்யூட் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி விக்கெட் கீப்பிங்கைப் பார்த்துக்கொண்டார். `அடிச்ச சாஹாவுக்கு இவ்ளோ காயம்னா, அடிவாங்கின டெல்லி கேப்பிடல்ஸ் என்ன நிலைமையில் இருக்கும்?' என யோசிக்கத் துவங்கியபோதே டக் அவுட்டானார் தவான். அதுவும் கோல்டன் டக்! டெல்லி ரசிகர்களின் நெஞ்சுகளில் பலத்த இடியுடன் கூடிய கண்ணீர் மழை பெய்தது.

#SRHvDC

ஒன்டவுனில் இறங்கினார் ஸ்டாய்னிஸ். இறங்கியதும், மிட் ஆன் திசையில் ஒரு பவுண்டரியை விரட்டினார். 2-வது ஓவரை வீசவந்தார் நதீம். முதல் பந்தையே, பவுண்டரிக்கு விரட்டினார் ரஹானே. ஆனால், ஆறாவது பந்தில், ஸ்டாய்னிஸ் அவுட். மிட் ஆஃபில் நின்றுக்கொண்டிருந்த வார்னரின் கையில் கேட்சைக் கொடுத்துவிட்டு கிளம்பினார். சந்தீப் ஷர்மா வீசிய 3-வது ஓவரில், 4 ரன்கள் மட்டுமே கிடைத்தது. ஹோல்டர் வீசிய, 4-வது ஓவரில், அவுட் சைட் எட்ஜாகி ரஹானே கணக்கில் ஒரு பவுண்டரி சேர்ந்தது. சந்தீப் வீசிய 5-வது ஓவரில், கவர் திசையில் ரஹானே ஒரு பவுண்டரியும் மிட் ஆஃப் திசையில் ஹெட்மெயர் ஒரு பவுண்டரியும் விரட்டினர். ஹோல்டர் வீசிய பவர்ப்ளேயின் கடைசி ஓவரில், உண்மையிலேயே பவராக ப்ளே செய்தது டெல்லி. பேக்வார்ட் பாயின்ட் திசையில் ஒன்று, மிட் விக்கெட் திசையில் ஒன்று என 2 பவுண்டரிகளை விரட்டினார் ஹெட்மெயர். ரஹானே, அதே மிட்விக்கெட் திசையில் ஒரு சிக்ஸரைப் போட்டார். `நீங்க மட்டும்தான் அடிப்பீங்களா பவுண்டரி' என ஹோல்டரும் லெக் பைஸில் ஒரு பவுண்டரியை விரட்டினார்.

பவர்ப்ளேயின் முடிவில், 54/2 என ஒருமாதிரியான நிலையில் இருந்தது டெல்லி. 74 ரன்கள் வித்தியாசத்துக்கு மேல் தோற்றால், ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் நெட் ரன் ரேட் குறைந்துவிடும் என்பதால், `தோற்றாலும் பருவாயில்லை. ஜெயிச்சாலும் பருவாயில்லை. அப்படியே அவுட்டும் ஆனால் பருவா இல்லை. ரன் மட்டும் சேர்ப்போம்' என உதித் நாராயணன் வாய்ஸில் பாடிக்கொண்டு உக்கிரமான ஆட்டத்திற்கு தயாரானது டெல்லி.

அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ஹெட்மெயர் அவுட். டெல்லியின் பல வீடுகளில் சேனல் மாறியது. வந்ததும் வேலையைக் காட்டினார் ரஷீத் கான். அதே ஓவரில், ரஹானேவும் அவுட். 1 ரன் மட்டுமே கொடுத்து, 2 விக்கெட்களை அள்ளினார் ரஷீத். டெல்லி கேப்பிடல்ஸ், துவண்டுபோனது. ஷ்ரேயாஸ் - பன்ட் ஜோடி களத்தில் இருக்க, சிலருக்கு மட்டும் நம்பிக்கை மிச்சமிருந்தது.

#SRHvDC

யார்க்கர் நடராஜன் வந்தார். ஸ்கொயர் லெக் திசையில் ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டார் பன்ட். அடுத்த ஓவரை வீச ரஷீத் கான் வந்தார். 2 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார். 10-வது ஓவரை வீச விஜய் ஷங்கர் வந்தார். பன்ட் ஒரு பவுண்டரியை வெளுத்தார். மீண்டும் ரஷீத் கான் வந்தார். 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 12-வது ஓவரை வீச விஜய் ஷங்கர் வந்தார். 3வது பந்தில், கேப்டன் ஸ்ரேயாஸின் விக்கெட்டைக் கழட்டினார். வைடு அவுட் சைடு ஆஃப் விலகிச்சென்ற பந்தை விரட்டிச்சென்று அடித்து, எக்ஸ்ட்ரா கவரில் நின்றுக்கொண்டிருந்த வில்லியம்சனின் கையில் கேட்ச் ஆனார் ஷ்ரேயாஸ். மீண்டும் ரஷீத் வந்தார். அக்ஸார் பட்டேலின் விக்கெட்டைத் தூக்கினார். வடிவேலுவின் கிணறு வெட்டிய ரசீதை விட, ஆபத்தான ரசீது இந்த உலகத்தில் உள்ளதெனில், அது இந்த ஆப்கானிஸ்தான் ரஷீத் மட்டுமே!

Also Read: வார்னர், சாஹா அதிரடி; சூறாவளியாய் சுழன்ற ரஷீத்... பிளேஆஃப்புக்கு மல்லுக்கட்டும் ஐதராபாத்! #SRHvDC

ஹோல்டர் வீசிய, 15-வது ஓவரில் ஒரு பவுண்டரியை விரட்டினார் பன்ட். நடராஜன் வீசிய 16-வது ஓவரிலும் அப்படியே. ஆனால், கூடுதலாக ரபாடாவின் விக்கெட்டை கழட்டினார் நட்டு. சந்தீப் வீசிய 17-வது ஓவரில், பன்ட்டும் காலி. ஹோல்டர் வீசிய 18-வது ஓவரில், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை வெளுத்துக்கொண்டிருந்தார் துஷார். அதைப் பார்த்த அதிர்ச்சியில், அதே ஓவரில் அவுட்டானார் அஷ்வின். 19-வது ஓவரை வீசிய நட்டு, நார்க்கியாவின் விக்கெட்டைக் கழற்ற, 131 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி சுருண்டது டெல்லி. 88 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியடைந்தது சன்ரைசர்ஸ்.

#SRHvDC

''ஒரே ஒரு மேட்சை ஜெயிக்க, நாங்களும் மூணு மேட்சா போராடிக்கிட்டு இருக்கோம். ச்சைக்! ஆனா, இதை எல்லாம் எங்க மனசுல இருந்து எடுத்துக்கவே மாட்டோம். கடைசி, மூணு மேட்சுக்கு முன்னாடி ரெக்கார்ட்ஸ் எடுத்து பாருங்க. நாங்க கலக்கியிருக்கோம். நிச்சயமா, பழைய டெல்லியா புது டெல்லி மீண்டும் வருவோம்" என்றார் ஷ்ரேயாஸ். "போன மேட்ச், எவ்ளோ கேவலமா ஆடினோம்னு ஊர், உலகத்துக்கே தெரியும். நான் தனியா சொல்லணும்னு அவசியம் இல்லை. ஆனா, இன்னைக்கு கலக்கிப்புட்டோம்ல. டாஸ் ஜெயிச்சுருந்தாலும் பேட்டிங்கைத்தான் தேர்ந்தெடுத்திருப்பேன். டாஸ் ஜெயிக்கலை. இருந்தாலும், அவங்க எடுத்த முடிவு எங்களுக்கு சாதகமா அமைஞ்சுடுச்சு. சாஹா கலக்கிட்டாப்ல. அடுத்த இரண்டு மேட்சும் இதே மாதிரி ஆடி, வேற மாதிரி கலக்குவோம்'' என்றார் வார்னர். ஆட்டநாயகன் விருது, சாஹாவுக்கு வழங்கப்பட்டது.



source https://sports.vikatan.com/ipl/ipl-2020-sunrisers-hyderabad-vs-delhi-capitals-match-report

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக