அமுல் என்கிற பிராண்ட்டைப் பற்றி நம்மில் தெரியாமல் யாரும் இருக்க முடியாது. `கொளு கொளு' என்றிருப்பவர்களை நாம் அமுல் பேபி என்று அழைக்கும் அளவுக்கு இந்நிறுவனத்தின் கார்ட்டூனும் மிகப்பிரபலம். இந்த அமுல் பிராண்டின் வரலாறு நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்து தொடங்குகிறது.
அமுலின் வரலாறு
1946-ல் ஆரம்பிக்கிறது அமுலின் கதை. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு 20 மாதங்களுக்கு முன்பாக சர்தார் வல்லபாய் படேல் குஜராத் மாநிலத்தில் கெய்ரா மாவட்டத்தில் இருக்கும் சமர்கா (Samarkha) என்கிற இடத்தில் நடைபெற்ற விவசாயிகளின் கூட்டத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கென்று ஒரு கூட்டுறவு அமைப்பை ஆரம்பிக்க வேண்டுமென நினைத்தார். இந்த அமைப்பின் மூலம் இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் பால் உற்பத்தியாளர்களிடம் பாலை வாங்கி, பதப்படுத்தி விற்கும்பட்சத்தில் அவர்கள் அதிக வருமானம் ஈட்ட முடியும் என நம்பினார்.
இந்தக் கூட்டத்தின் முடிவில், கிராமங்களில் கூட்டுறவு அமைப்பை ஆரம்பிப்பது என்றும் அதன் மூலம் சேகரிக்கப்படும் பாலை அரசாங்கத்தின் `பாம்பே பால் திட்ட’த்துக்கு விற்பனை செய்வது எனவும் முடிவாயிற்று. இதுவே பின்னாளில் `ஆனந்த் கூட்டுறவு முறை (Anand Pattern of Cooperatives)’ என நாடு முழுவதும் அறியப்பட்டது.
குரியன் வருகை...
கூட்டுறவு அமைப்புத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல சர்தார் படேல், மொரார்ஜி தேசாயை நியமித்தார். அதன்பின் நடந்த கூட்டமொன்றில், ``கூட்டுறவு அமைப்பின் சேர்மனாகப் பணிபுரிய யாரேனும் முன் வருகிறீர்களா’’ எனக் கேட்டபோது சிலர் முன்வந்தனர். ஆனால், அமைதியாக இருந்த திரிபுவன்தாஸ் படேல் மீது மொரார்ஜியின் பார்வை சென்றது. அப்போது அவர் விடுதலை இயக்கத்தில் சேர்ந்து தீவிரமாகச் செயலாற்றி வந்ததோடு கெய்ரா மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். மொரார்ஜி அவரின் விருப்பத்தைக் கேட்க, அவர் தயக்கத்துடன் சம்மதித்தார்.
அதன்பின் அவரோடு இணைந்தவர் இந்தியாவின் வெள்ளைப் புரட்சிக்குக் (White Revolution or Operation Flood) காரணமான வர்கீஸ் குரியன். `அமுல்’ என்கிற பெயருக்கு சூத்ரதாரி, ஏதும் விளம்பர நிறுவனமோ அல்லது சந்தைப்படுத்தல் நிபுணர்களோ இல்லை. இந்தப் பெயரைப் பரிந்துரைத்தவர் ஆனந்தில் கூட்டுறவு பால் பண்ணையில் வேலை பார்த்து வந்த ஒரு டெக்னீஷீயன். சம்ஸ்கிருதத்தில் `அமூல்யா’ எனில், விலை மதிப்பற்றது’ எனப் பொருள். ஆக, 1955-ம் ஆண்டு `அமுல்’ என்கிற பிராண்டின்கீழ் பால் பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
நம் நாட்டில் 1980-கள் வரை பாலுக்கான பற்றாக்குறை சொல்லிமாளாத அளவில் இருந்தது. குறிப்பாக, தென் இந்தியாவிலும், கிழக்கு இந்தியாவிலும் பாலுக்கான பற்றாக்குறை மிகப்பெரிய அளவில் இருந்தது. இதை வாய்ப்பாகக் கொண்டு ஹார்லிக்ஸ், காம்ப்ளான் போன்ற பிராண்டுகளின் விற்பனை அதிகரிக்க ஆரம்பித்தது.
ஆபரேஷன் ஃப்ளட்
குரியன் அளித்த `ஆபரேஷன் ஃப்ளட்’டுக்கான முன்மொழிவு பல ஆண்டுகளாக சிலரின் தனிப்பட்ட விருப்புவெறுப்புகளுக்காக கேட்பாரற்றுக் கிடந்தது. அதன்பின் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தில் செயலாளராகப் பணியாற்றிவந்த எல்.பி.சிங்கின் முயற்சியால் இந்தத் திட்டம் குரியனின் தலைமையில் நாடெங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு பால் உற்பத்தியில் புரட்சி காண ஆரம்பித்தது.
அமுல்தான் முதன்முதலாக நீண்ட நாளைக்கு பால் கெட்டுப்போகாமல் இருப்பதற்கான யு.ஹெச்.டி (UHT) பேக்கேஜிங்கை அறிமுகப்படுத்தியது. பால் அறிமுகப்படுத்தப்பட்டபின், பாலை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கக்கூடிய பொருள்களை ஒவ்வொன்றாக சந்தையில் அறிமுகப்படுத்த ஆரம்பித்தது. இதில் வெண்ணையும் (Butter) ஒன்று. இதற்கான விளம்பரங்கள் மிக சுவாரஸ்யமானவை.
நாட்டில் நடக்கும் முக்கியமான விஷயங்கள் குறித்து நகைச்சுவையுடன் மக்களுக்குச் சொல்வதாக அமுலின் கார்ட்டூன்கள் அமைந்திருக்கும். இவையே அமுலின் விளம்பரங்கள். இந்தப் `பாரம்பர்யம்’ இன்றும் தொடர்கிறது. பி.சி.சி.ஐ-யின் தலைமைப் பொறுப்பிலிருந்த டால்மியா மீது ஊழல் என வதந்தி பரவியபோது, கீழ்க்கண்ட வாசகத்துடன் அமுல் கார்ட்டூன் வெளியிட்டிருந்தது.
``வெண்ணெய் சாப்பிடுங்கள், பைசாவை சாப்பிட வேண்டாம்”
- இதை எதிர்த்து டால்மியா, குரியன் மீது ரூ. 500 கோடிக்கு மானநஷ்ட வழங்கு தொடர்ந்தார். ஆனால், அதற்கு அவர் பிணையாக ரூ.50 கோடி நீதிமன்றத்தில் கட்ட வேண்டுமென்பதால், வழக்கு மேற்கொண்டு நடக்கவில்லை!
இதேபோல சத்யம் கம்ப்யூட்டர் பிரச்னையின்போது வெளியான விளம்பரம் சர்ச்சையாகவே, இதை விரும்பாத சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் தன்னுடைய பணியாளர்களிடம் அமுல் நிறுவனப் பொருள்களைப் புறக்கணிக்கும்படி கேட்டுக் கொண்டது.
இந்த விளம்பரங்களின் பிதாமகன் ஏ.எஸ்.பி (ASP) விளம்பர நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரான சில்வஸ்டர் டாகுனாவும் அவர் மகன் ராகுல் டாகுனாவும்தான். இந்த நிறுவனத்துக்கும் அமுலுக்குமான உறவு சுமார் 40 வருடங்களாகும். 1996-ம் ஆண்டு அமுல் பெயரில் ஐஸ்க்ரீம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஐஸ்க்ரீம் நுகர்வு
இந்தியாவில் ஆண்டொன்றுக்கு தனிநபர் ஐஸ்க்ரீம் நுகர்வு 250 மில்லி லிட்டர்தான். ஆனால், அமெரிக்காவில் தனிநபர் உட்கொள்ளும் ஐஸ்க்ரீமின் அளவு சுமார் 23 லிட்டர், ஆஸ்திரேலியாவில் 18 லிட்டர், பாகிஸ்தானில் 800 மில்லி லிட்டர்.
இந்தியாவில் அப்போது ஐஸ்க்ரீம் சந்தையின் அளவு ரூ.1,000 கோடிதான். ஐஸ்க்ரீம் ஒரு `மேற்கத்திய பண்டமாக’க் கருதப்பட்டு வந்ததால், இந்தியப் பெயர்களில் அப்போது சந்தையில் இருந்த பிராண்டுகளின் விற்பனை மிகவும் குறைவாகவே இருந்தது.
இந்தியாவில் ஒப்பீட்டளவில் அதிக ஐஸ்க்ரீம் உட்கொள்ளும் மாநிலமாக குஜராத் இருந்தது. அதோடு அமுல் பிராண்டைச் சந்தைப்படுத்தும் குஜராத் பால் விநியோகக் கூட்டுறவுக் கூட்டமைப்பின் GCMMF (Gujarat Co-operative Milk Marketing Federation) பிரிவின் தலைமையகமும் குஜராத்தில் இருந்ததால், முதன்முதலாக அங்கு மட்டும் அமுல் ஐஸ்க்ரீம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது அங்கு வாடிலால், ஹேவ்மோர் (Havmor) ஆகிய பிராண்டுகள் மிகவும் பிரபலமாக இருந்தன.
ஆனால், இந்தியப் பெயராக இருந்ததால் பாம்பேயின் செல்வ செழிப்பான தென்பகுதியில் (கஃப் பரேட்) வாடிலால் விற்பனை மிகவும் மந்தமாகவும் குவாலிட்டி ஐஸ்க்ரீம் முன்னணியிலும் இருந்தது. அதன்பின் வாடிலால் சந்தைப்படுத்தலில் தீவிரமாகி மாதமொரு ஃப்ளேவரை அறிமுகப்படுத்த ஆரம்பித்தது.
1989-ம் ஆண்டு காட்பரீஸ் நிறுவனம் `டாலப்ஸ்' என்கிற பெயரில் ஐஸ்க்ரீம் சந்தைக்குள் அடியெடுத்து வைத்ததுடன், `லாப் ஸ்டாப்ஸ்’ என்கிற பெயரில் ஐஸ்க்ரீம் பார்லர்களையும் அறிமுகப்படுத்தியது. ஆனால், விற்பனை சரியில்லை என்பதால், இந்த பிராண்டை யுனிலீவர் நிறுவனத்திடம் 1992-ம் ஆண்டு விற்றது. அதன்பின் 1995-ம் ஆண்டு `மில்க்ஃபூட் 100%’ என்கிற பிராண்டையும் வாங்கியது. அந்தக் காலகட்டத்தில் 1950-களில் ஆரம்பிக்கப்பட்ட குவாலிட்டி ஐஸ்க்ரீம் சந்தையில் கோலோச்சியது. 1994-ம் ஆண்டு யுனிலீவர் `வால்ஸ் ' ஐஸ்க்ரீமை அறிமுகப்படுத்தியதோடு குவாலிட்டி, டாலப்ஸ், கேலார்ட்ஸ், மில்க்ஃபூட் 100% ஆகிய பிராண்டுகளையும் வாங்கி குவாலிட்டி வால்ஸ்” என்கிற பெயரில் விற்பனை செய்ய ஆரம்பித்தது. ஐஸ்க்ரீம் சந்தையில் இதன் பங்கு சுமார் 80% ஆகும்.
இப்படியான காலகட்டத்தில் பால் பொருள்களுக்குப் பெயர் பெற்ற அமுல், ஐஸ்க்ரீம் பிரிவில் அமைதியாக நுழைய ஆரம்பித்தது. 2001-ம் ஆண்டில், அதாவது ஐந்தே ஆண்டுகளில், இந்தியாவின் முன்னணி ஐஸ்க்ரீம் பிராண்டாக வளர்ச்சியடைந்தது. அன்றிலிருந்து இன்று வரை அமுலை அசைக்க யாராலும் முடியவில்லை.
இன்றைக்கு ஐஸ்க்ரீம் சந்தையின் அளவு சுமார் ரூ.9,000 கோடியாகும். இதில் அமுலின் பங்கு சுமார் 40%. ஆக, `டேஸ்ட் ஆஃப் இண்டியா’ என அமுல் கூறிக் கொள்வதில் ஆச்சர்யமில்லை.
அமுல் பிராண்டை சந்தைப்படுத்தும் குஜராத் பால் விநியோகக் கூட்டுறவுக் கூட்டமைப்பு அளிக்கும் சில முக்கிய புள்ளிவிவரங்கள்:
* அமுல் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1973
* நிறுவனர் - சேர்மனாக 33 ஆண்டுகள் இருந்தவர் வர்கீஸ் குரியன். இப்போதைய மேலாண்மை இயக்குநர் ஆர்.எஸ்.சோதி (R.S. Sodhi)
* இதன் விற்பனை (2019-20) சுமார் ரூ.38,500 கோடி.
* நாளொன்றுக்கு பால் சேகரிப்பு சுமார் 23 மில்லியன் லிட்டர்
* தற்போது 18,600 கிராமக் கூட்டுறவு அமைப்பைச் சேர்ந்த 36 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்படுகிறது.
source https://www.vikatan.com/business/news/the-success-story-of-amul
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக