Ad

புதன், 28 அக்டோபர், 2020

வலுக்கட்டாயமாக சிரித்தாலும் ஆரோக்கியம்தானா... மருத்துவம் என்ன சொல்கிறது?

குழந்தைகள் குட்டி குட்டி விஷயங்களுக்கும் குதூகலிக்கிறார்கள். கும்மாளம் இடுகிறார்கள். கடகடவென்று சிரிக்கிறார்கள். அழகான அந்தச் சிரிப்பைப் பார்த்தாலே நமக்குள் சந்தோஷம் ஒட்டிக்கொள்ளும்.

என்னதான் காய்ச்சலாக இருந்தாலும் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். பல நேரங்களில் நாம் எதற்காகவாவது தொட்டுப்பார்க்கும்போதுதான் காய்ச்சல் இருப்பதையே கண்டுபிடிப்போம். தூக்கத்தில்கூட குழந்தைகள் நடுநடுவே புன்னகைப்பதைக் காணலாம். இதுதான் மனித இயல்பு.

smile

எங்கே தேடுவேன் என் சிரிப்பை?

ஒரு மனிதன் தன் குழந்தைப் பருவத்தில் பள்ளிக்குச் செல்கிறான். விளையாடுகிறான். கல்லூரிக்குச் செல்கிறான். பிறகு, வேலைக்கும் செல்கிறான். ஒவ்வொரு கட்டத்திலும் அவனுடைய அறிவும் வளர்ந்துகொண்டே போகிறது. இந்த வளர்ச்சியில் குறைந்துகொண்டேபோவது, மகிழ்ச்சி மட்டும்தான். எதைத் தொலைக்கக் கூடாதோ, அதைத் தொலைத்துவிடுகிறான்... அதாவது மகிழ்ச்சியையும் சிரிப்பையும்.

கவலைகளின் சங்கமம் மன அழுத்தத்தின் முதிர்வுப்புள்ளி என்கிறது மருத்துவ அறிவியல். தன்னைத் தானே நொந்து கொள்வது பல நேரங்களில் அழுகையுடன் முடியும். ஒரு பிரச்னையை எடுத்தால் சங்கிலித் தொடராக இது இப்படி வரலாம், அப்படி ஆகலாம், எப்படிப் போகலாம் என்று கற்பனைச் சங்கிலிகள் கைகோத்துக்கொண்டு கிலியை உண்டாக்கும். முடிவில் புன்னகை என்பதையே மறந்துவிடுவோம்.

Representational Image

சிரிக்கும்போது என்ன நடக்கிறது?

முகத்தசைகள் அசைவதால்தான் சிரிப்பு என்ற ரசத்தை நம் முகத்தில் கொண்டு வர முடிகிறது. முகத்துக்கான பயிற்சி சிரிப்பு. அப்போது சுரக்கக்கூடிய நல்ல வேதிப்பொருள்களான எண்டார்பின், டோபமைன், செரட்டோனின் போன்றவை மகிழ்ச்சிக்கான தூதுவர்கள். நன்றாக வாய்விட்டு சிரிக்கும்போது குறைந்தது 20 நிமிடங்களுக்காவது அந்த மகிழ்ச்சித் தூதுவர்கள் நீடிப்பார்கள். அந்த நேரத்தில் நம்மால் மிகவும் இயல்பாகவும் தெளிவாகவும் சிந்திக்க முடியும்.

சிரிப்பு சக மனிதர்களுக்கிடையே ஒற்றுமையையும் பாதுகாப்பு உணர்வையும் சந்தோஷத்தையும் கொடுக்கிறது. சொல்லப்போனால் போதை வஸ்துக்களுக்கு இணையான அதே அளவு சந்தோஷத்தை எந்த விதமான பக்கவிளைவுகளும் கெடுதலும் இல்லாமல் சிரிப்பு தருகிறது. மனச்சோர்வு மனஅழுத்தம் போன்ற மனநோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

இதயத்தசை, ரத்த நாளங்களில் உண்டாகும் வீக்கங்களைக் குறைத்து இதய நோய் வருவதற்கான சாத்தியங்களைக் குறைக்கிறது. வயிற்றில் அமிலம் சுரப்பதை ஒழுங்குபடுத்துகிறது. நுரையீரலில் ஆக்ஸிஜன் பகிர்தலை அதிகப்படுத்துவதால் மூளை உள்பட உடலில் எல்லா பாகங்களுக்கும் அதிக அளவு ஆக்ஸிஜன் கிடைப்பதற்கு வழி வகுக்கிறது.

இந்தச் சிரிப்பின் அருமை உணர்ந்துதான் இப்போது சிரிப்பதற்காக சங்கங்கள் (Humor Clubs) ஆரம்பிக்கின்றார்கள். அங்கு போய் வலிய சிரிப்பை வருவித்துக்கொண்டு கஷ்டப்பட்டு சிரிக்கிறார்கள். அதையும் நாம் நேர்மறையாகத்தான் பார்க்க வேண்டி இருக்கிறது. சிரிப்பின் முக்கியத்துவம் இவர்களுக்கு தெரிந்திருக்கிறது, சிரிப்பதற்கு முயற்சி செய்கிறார்கள் என்று. ஆனால், செயற்கையாகச் சிரிக்கும்போது முகத்தில் உள்ள தசைகள் அதே பயிற்சியைப் பெற்றாலும், மகிழ்ச்சிக்கான வேதிப்பொருள்கள் சுரக்காது என்பதே உண்மை.

சிரிப்பை நம் சுபாவமாக மாற்ற முடியுமா?

முதலில் எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, தொலைபேசியில் உங்கள் நண்பரை அழைக்கிறீர்கள். நண்பர் உங்கள் அழைப்பைத் துண்டிக்கிறார். உடனே உங்கள் மனம் என்ன நினைக்கும்? ``என்ன திமிரு? என்னோட போன் வருது. ஒரு வார்த்தை எடுத்துப் பேசாம போன கட் பண்றான். ஒரு மெசேஜாவது அனுப்பலாம் இல்ல. இனிமே அவனுக்கு போனே பண்ணக்கூடாது" என்று கொந்தளிப்பீர்கள்தானே. இந்த மனநிலை நம் வயிற்றில் அமிலச் சுரப்பை அதிகப்படுத்தும். மனதை வருத்தப்படுத்தும்.

Dr.jayashree Sharma

உண்மையில் அவர் ஒரு மருத்துவமனையில் இருக்கலாம். அவருடைய மேலதிகாரியோடு முக்கியமான உரையாடலில் ஈடுபட்டு இருக்கலாம். இப்படிப் பல விஷயங்கள் இருக்கும். ஏதோ ஒரு முக்கியமான வேலையில் இருக்கிறார். அவரே நம்மை திரும்ப அழைப்பார் என்று அந்த விஷயத்தை எளிதாக எடுத்துக்கொள்ளும்போது மனம் லேசாக இருக்கும்.

சுற்றுப்புறம் முக்கியம்!

நம்மைச் சுற்றி பாசிட்டிவ் மனிதர்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். எதிர்மறை சிந்தனையாளர்களிடமிருந்து ஓடிவிடுங்கள். நகைச்சுவை உணர்வோடு இருக்கும் எளிய மனிதர்களை நண்பர்களாகக் கொள்ளுங்கள். காலையில் நீங்கள் அனுப்பும் வாட்ஸ்அப் செய்திகூட ஹாஸ்யத்துடன் இருக்கட்டும். பார்த்தவுடன் குபீரென்று சிரிக்கக்கூடிய நகைச்சுவை செய்திகளை எல்லோருடனும் பகிர்ந்துகொள்ளலாம். பிரச்னைகள் முடிந்த பிறகுதான் சிரிப்பேன் என்று ஒருவர் சொன்னால் சிரிக்கும் சந்தர்ப்பமே வராது.

Smiley

Also Read: “எலே... பண்டிகைய கொண்டாடுங்கலே!” - அதிரி புதிரி சிரிப்பு வெடி!

வாங்க சிரிக்கலாம்!

இந்த கொரோனா காலத்தில் எந்த மாத்திரையைச் சாப்பிட்டால் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும் என்று சிலர் மாத்திரைகளையே உணவாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். கபசுரக் குடிநீரையே குடிநீர் போல அருந்துகிறார்கள். வைட்டமின் சி மாத்திரை சாப்பிட்டால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று தேடித்தேடி சாப்பிடுகிறார்கள். நாம் தேடும் வைட்டமின் சி- சிரிப்புதான். அந்தச் சிரிப்பை உங்கள் வசமாக்கிக்கொள்ளுங்கள்.

மனஅழுத்தம் தவிர்த்து உற்சாகமாக இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தியுடனும், இளமையுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ்வது மட்டுமல்லாமல் நம்மைச் சுற்றி நல்ல நேர்மறை ஆற்றலையும் கொண்டிருப்போம். சிரிக்கும் கலையும், சிரிக்க வைக்கும் கலையுமே இப்போது தேவை. எவ்வளவு கடினமான விஷயமாக இருந்தாலும் கோபப்படாமல், அதையே ஒரு சிரிப்பு ராக்கெட்டாக மாற்றி எதிராளிகள் மேல் ஏவுங்கள்!



source https://www.vikatan.com/health/healthy/why-smiling-is-good-for-our-health-doctor-explains

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக