Ad

சனி, 31 அக்டோபர், 2020

`திருமணத்துக்காக மட்டும் மதம் மாறுவதை ஏற்க முடியாது!’ - அலகாபாத் உயர் நீதிமன்றம்

லக்னோவைச் சேர்ந்த பெண் ஒருவர், இஸ்லாம் மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறி, அதன் பிறகு இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார். அவர்கள் இருவருக்கும் திருமணமாகி மூன்று மாதங்கள் கழித்து, தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர திரிபாதி, `திருமண நோக்கத்துக்காக மட்டுமே மதம் மாறுவது ஏற்கத்தக்கதல்ல’ என்று தெரிவித்தார்.

அலகாபாத் நீதிமன்றம்

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில், ``மனுவைத் தாக்கல் செய்த பெண் பிறப்பால் ஓர் இஸ்லாமியர். ஆனால், இந்து ஆணுடன் திருமணம் செய்துகொள்வதற்காக, திருமணத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பு இந்து மதத்துக்கு மாறியிருக்கிறார். பதிவுகளை ஆராய்ந்து பார்க்கும்போது, மனுதாரர் 29.6.2020 அன்று மதம் மாறியிருக்கிறார். ஒரு மாதத்துக்குப் பிறகு, அவர்கள் 31.7.2020 அன்று தங்கள் திருமணத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். இந்த மதமாற்றம், திருமணத்துக்காக மட்டுமே என்று நீதிமன்றத்துக்குத் தெளிவாகத் தெரிகிறது" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Also Read: கேரளா: ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று சகோதரிகளுக்கு ஒரே நாளில் திருமணம்!

கடந்த 2014-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் இதே போன்ற வழக்கில் பிறப்பித்த உத்தரவை நீதிபதி, தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறார். நூர்ஜஹான் பேகம், அஞ்சலி மிஸ்ரா வழக்கில், நூர்ஜஹான் பேகம் என்ற பெண், இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறி, இஸ்லாமியர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு இருவரும் பாதுகாப்பு கேட்டு, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், ``இஸ்லாமியரைத் திருமணம் செய்துகொள்ள இந்துப் பெண் ஒருவர், இஸ்லாம் குறித்த எந்தக் கொள்கையையும் தெரிந்துகொள்ளாமல், திருமணத்துக்காக மட்டும் மதம் மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.

தீர்ப்பு

மேலும், `இவ்வாறு மதத்தை இஸ்லாமுக்கு மாற்றுவது, திருமண நோக்கத்துக்காக மட்டுமே என்பது இஸ்லாம் மதத்துக்கு மாறுவதற்கு சரியான காரணமாக இருக்காது. இந்தத் திருமணங்கள் புனித குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் கட்டளைக்கு எதிரானது’ என்று கூறி அலகாபாத் உயர் நீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

நூர்ஜகான் பேகம் வழக்கை மேற்கோள் காட்டிய நீதிபதி மகேஷ்சந்திர திரிபாதி, `அந்தப் பெண் பிறப்பால் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர், கடந்த ஜூன் மாதம், தனது திருமணத்துக்கு சரியாக ஒரு மாதத்துக் முன்னர் இஸ்லாமிய மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறியிருக்கிறார். இதுபோல் திருமணத்துக்காக மதம் மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்.



source https://www.vikatan.com/social-affairs/judiciary/conversion-for-sake-of-marriage-not-acceptable-allahabad-high-court

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக