சென்னை ஆவடி அருகேயுள்ள திருமுல்லைவாயல், பொத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை (44). இவர் கொத்தனாராக வேலை பார்த்துவருகிறார். இவரின் மகள் காயத்ரி (15). சின்னதுரையின் தம்பி தட்சிணாமூர்த்தி (45). இவர், லாரி டிரைவராக வேலை பார்த்துவருகிறார். இவரின் மகள் ரதிமீனா (13). சின்னதுரையும் தட்சிணாமூர்த்தியும் ஒரே தெருவில் அடுத்தடுத்த வீட்டில் வசித்துவருகின்றனர்.
அக்காள், தங்கையான காயத்ரி, ரதிமீனா இருவரும் கொரோனா காரணமாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தனர். அதனால் வீட்டின் அருகிலுள்ள காலி இடத்தில் இருவரும் அடிக்கடி விளையாடச் செல்வார்கள். காலி இடத்திலுள்ள பள்ளத்தில் சமீபத்தில் பெய்த மழை நீர் தேங்கி குட்டைபோலக் காட்சியளித்தது. விளையாடிக்கொண்டிருந்த காயத்ரியும் ரதிமீனாவும் அடுத்தடுத்து குட்டையில் விழுந்தனர். ஆழம் அதிகமாக இருந்ததால் இருவரும் நீரில் மூழ்கத் தொடங்கினர்.
இருவரும் தங்களைக் காப்பாற்றும்படி சத்தம் போட்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு காயத்ரி, ரதிமீனா வீட்டில் இருந்தவர்களும் அந்தப் பகுதியிலுள்ளவர்களும் உடனடியாக அங்கு வந்தனர். தண்ணீரில் தத்தளித்த இரண்டு சிறுமிகளையும் காப்பாற்றினார். பின்னர் இருவரையும் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சிறுமிகளைப் பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
Also Read: குட்டையில் குளிக்கச் சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு - திருப்பூர் அருகே சோகம்!
அதைக் கேட்டு இரண்டு சிறுமிகளின் பெற்றோர்களும் கதறி அழுதனர். சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஆவடி டேங்க் பேட்டரி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் இரண்டு சிறுமிகளின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு இருவரின் சடலங்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
source https://www.vikatan.com/news/crime/chennai-girls-drowned-in-pond-near-avadi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக