Ad

வியாழன், 29 அக்டோபர், 2020

`கல்லூரிகளில் இறுதிப் பருவத் தேர்வுகள் கட்டாயம்!’ - உயர் நீதிமன்றத்தில் யு.ஜி.சி

கொரோனா பெருந்தொற்றால் தமிழகத்தில் கல்லூரிகள் கடந்த மார்ச் முதல் மூடப்பட்டிருக்கின்றன. இதனால், கல்லூரிகளில் தேர்வு நடத்துவது கேள்விக்குறியானது. இதையடுத்து, கலை அறிவியல், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் இறுதிப் பருவத் தேர்வுகள் நடத்தாமல், அரியர் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகத் தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாலகுருசாமி

`அரியர் தேர்வு ரத்து’ என்று அறிவித்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, ராம்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். `அரியர் தேர்வு ரத்து’ என்ற அரசின் அறிவிப்பால் கல்வியின் தரம் குறையும் எனவும் மனுதாரர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இந்த வழக்கில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் தாக்கல் செய்த பதில் மனுவில், `அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்திருப்பது யு.ஜி.சி விதிகளுக்கு எதிரானது. இறுதிப் பருவத் தேர்வுகள் கட்டாயம் நடத்த வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தோம். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ஏ.ஐ.சி.டி.இ விதிகளுக்கு முரணானது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Also Read: அரியர் ஆல்பாஸ்: கேள்வியெழுப்பிய ஏ.ஐ.சி.டி.இ; கொதிக்கும் கல்வியாளர்கள்! - நெருக்கடியில் அரசு?

இந்தநிலையில், வழக்கில் யு.ஜி.சி சார்பில் தற்போது பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. யு.ஜி.சி தரப்பில்,``இறுதிப் பருவத் தேர்வு நடத்துவது அவசியம் என்று ஏற்கெனவே சுட்டிக்காட்டியிருக்கிறோம். இறுதிப் பருவத் தேர்வை ரத்து செய்வது சாத்தியமில்லை. இது தொடர்பாகக் கல்லூரிகளுக்குக் கடந்த ஏப்ரல் மாதமே கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இறுதிப் பருவத் தேர்வை நடத்த அவகாசம் கோரலாம். இறுதிப் பருவத் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தோம்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சர்ச்சையான யு.ஜி.சி

மேலும், அரியர் தேர்வு ரத்து, இறுதிப் பருவத் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவையும் யு.ஜி.சி தனது பதில் மனுவில் சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது. அப்போது, யு.ஜி.சி தரப்பில் கூடுதல் தகவல்களையும் கேட்டு நீதிமன்றம் பதிவு செய்துகொள்ளும் என்கிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/ugc-files-new-petition-in-madras-hc-in-tn-governments-all-pass-announcement-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக