ஒரு கொலையை மறைக்க, 9 பேர் கொலைசெய்யப்பட்ட பரபரப்பான கொலை வழக்கின் விசாரணையை வாரங்கல் நீதிமன்றம் 36 நாள்களுக்குள் முடித்துள்ளது வாரங்கல் நீதிமன்றம்.
தெலங்கானா மாநிலம், வாரங்கல் கோரிகுண்டாவில் கோணிப்பை தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களான மசூத் என்பவரும் அவரது மனைவி நிஷாவும் 20 வருடங்களாகப் பணியாற்றி வந்துள்ளனர்.
கடந்த 5 வருடங்களுக்கு முன்பு, மசூத் குடும்பத்தினருக்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியான சஞ்சய் குமார் என்ற 24 வயது இளைஞர் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில், நிஷாவின், உறவினர் மகள் ரபிகா என்பவர் பிழைப்பு தேடி வாரங்கல்லுக்கு வந்து கூலி வேலைசெய்யத் தொடங்கினார். ரபிகாவிற்கு ஏற்கனவே திருமணமாகி, 16 வயதில் ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர்.
வாரங்கல் பகுதியில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்த ரபிகா, சஞ்சய் குமார் யாதவுக்கு சமையல் செய்து கொடுத்து, அதற்கான பணத்தைப் பெற்று வந்துள்ளார். இதில் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் இருவருக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, மூன்று பிள்ளைகளுடன் ரபிகா, சஞ்சய்குமாரை திருமணம் செய்துகொள்ளாமல், அவருடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தத் தொடங்கினார். இந்நிலையில், ரபிகாவின் மகளுடன் சஞ்சய்குமாருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கவனித்த ரபிகா, தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, தற்பொழுது தனது மகளுடன் நெருங்கிப் பழகுவது முறையானது அல்ல என்று சஞ்சய் குமாரை எச்சரித்திருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் குமார், தன் காதலுக்கு இடையூறாக உள்ள ரபிகாவை கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறார். ரபிகாவைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, கடந்த மார்ச் 7-ம் தேதி மேற்குவங்கத்துக்கு ரயிலில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, மோரில் தூக்க மாத்திரை கலந்து ரபிகாவுக்குக் கொடுத்திருக்கிறார். அவர் தூங்கியபிறகு, அதிகாலை 3 மணியளவில் ராஜமகேந்திரவரம் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது, ரபிகாவின் கழுத்தை நெறித்துக் கொலைசெய்திருக்கிறார். பின்னர், ரயிலில் இருந்து அவரைக் கீழே தள்ளிவிட்டு, அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி, மீண்டும் வாரங்கல்லுக்கு வந்துவிட்டார் சஞ்சய் குமார்.
Also Read: தெலங்கானா: 18 முறை போன்; ரூ.45 லட்சம்; 9 வயது சிறுவன் கொலை!- ஸ்கைப் காலில் சிக்கிய மெக்கானிக்
ரபிகாவை அழைத்துச் சென்ற விஷயம் தெரிந்த நிஷா, சஞ்சய்குமாரிடம், ரபீகா எங்கே எனக் கேட்டுள்ளார். இதற்கு சஞ்சய்குமார், பீகாரில் உள்ள தனது வீட்டிற்கு ரபிகாவை அனுப்பி வைத்திருப்பதாக சமாளிக்க, சஞ்சய்குமாரின் பேச்சில் நம்பிக்கை இல்லாத நிஷா, உண்மையைக் கூறாவிட்டால் போலீஸில் புகார் அளித்துவிடுவதாக எச்சரித்துள்ளார்.
இந்த சம்பவத்தில், ரபிகாவை தான் அழைத்து சென்ற விவரம் தெரிந்த மசூத் - நிஷா குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரையும் மொத்தமாகக் கொலை செய்து விட்டால், தனக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை சஞ்சய்குமார் நினைத்து, அவர்கள் அனைவரையும் கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறார். மசூதின் மூத்த மகனுக்கு மார்ச் 21-ம் தேதி பிறந்த நாள் கொண்டாடப்பட்டபோது, தூக்க மாத்திரைகளுடன் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார். அங்கு தூக்க மாத்திரைகளைக் குளிர்பானத்தில் கலந்து அனைவருக்கும் கொடுத்துள்ளார்.
இரவு 12.30 மணியளவில், அனைவரும் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த நிலையில், தனியாளாக ஒவ்வொரு நபரையும் கோணிப் பையில் வைத்துக் கட்டி, அருகில் உள்ள கிணற்றில் தள்ளிவிட்டு, கொலை செய்துள்ளார் சஞ்சய்குமார்.
9 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிசிடிவி கேமரா காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு, மே மாதம் 25-ம் தேதி வாரங்கல் போலீஸார் சஞ்சய் குமாரைக் கைது செய்தனர். மேலும், ரபிகா கொலை செய்யப்பட்டது உறுதியானதைத் தொடர்ந்து, தாடேப்பள்ளி ரயில்வே போலீஸார், சஞ்சய்குமார் மீது தனியாகக் கொலை வழக்கும் பதிவு செய்தனர்.
ஒரு கொலையை மறைக்க, 9 பேர் கொலைசெய்யப்பட்ட பரபரப்பான கொலை வழக்கின் விசாரணையை வாரங்கல் நீதிமன்றம் 36 நாள்களுக்குள் விசாரித்து முடித்துள்ளது. வாரங்கல், கூடுதல் அமர்வு மாவட்ட நீதிபதி, `இந்திய தண்டனை சட்டம் பிரிவு 302, 404, 449, 380 மற்றும் 328 ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரின் குற்றத்தை அரசு தரப்பு நிரூபித்துள்ளது’ என்று தீர்ப்பளித்தார். குற்றவாளி சஞ்சய் குமாருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது வாரங்கல் நீதிமன்றம்.
source https://www.vikatan.com/news/crime/death-sentence-for-warangal-mass-murderer
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக