பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகராசா. இவரின் மனைவி சரஸ்வதி. இந்தத் தம்பதியினரின் 2-வது மகன் சஞ்சய் (17). பிளஸ் 2 படித்த சஞ்சய் வேலைத் தேடி சென்னை வந்தார். சென்னை கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி 1-வது தெருவில் உள்ள வீட்டில் தங்கி ஹோட்டலில் வேலைப்பார்த்தார்.
சம்பத்தன்று சஞ்சய்யுடன் தங்கியிருந்தவர்கள் வேலைக்குச் சென்றுவிட்டனர். அதனால் அவர் மட்டும் தனியாக வீட்டில் இருந்தார். அப்போது சஞ்சய், தன்னுடைய செல்போனை சார்ஜரில் போட்டுவிட்டு குளிக்கச் சென்றார். அப்போது அவரின் செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. உடனே குளித்துக் கொண்டிருந்த சஞ்சய், செல்போனை எடுத்துள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. அதனால் தூக்கி வீசப்பட்ட சஞ்சய் மூச்சு பேச்சு இல்லாமல் மயங்கிக் கிடந்தார்.
சிறுவன் சஞ்சய் விழுந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். உடனடியாக சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், சஞ்சய் மின்சாரம் தாக்கி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சிறுவனின் நண்பர்கள், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் அவரின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர்.
இதற்கிடையில் தனியார் மருத்துவமனையில் கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குபதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். சார்ஜரில் போடப்பட்டிருந்த செல்போனை ஈரக்கையால் சஞ்சய் எடுத்தபோதுதான் மின்சாரம் அவரைத் தாக்கியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
source https://www.vikatan.com/news/accident/17-years-old-boy-died-because-of-electric-shock
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக