வேலூர், சலவன்பேட்டை காரிய மண்டபப் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரின் மனைவி கலா. இவர்களின் 18 வயது மகன் ரவீந்தர், நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். நோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதால், ரவீந்தரின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. வேலூரிலுள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் சிறுவன் ரவீந்தருக்கு இதுநாள் வரை 30 முறைக்குமேல் டயாலிசிஸ் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ``சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே ரவீந்தர் உயிர் பிழைக்க முடியும். அதற்காக 12 லட்ச ரூபாய் மருத்துவ செலவாகும்’’ என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியிருக்கிறது.
``நானே அன்றாடங்காய்ச்சி.. அவ்வளவு பணத்துக்கு எங்கப் போவேன். சின்னதாக டிபன் கடைவெச்சிருந்தேன். கொரோனா லாக்டௌனால கடையை மூட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருச்சு. அந்தத் தொழிலை மீண்டும் நடத்த முடியலை. கடந்த ரெண்டு மாசத்துல மட்டும் 4 லட்ச ரூபாய்க்கு மேல மருத்துவச் செலவு பண்ணிட்டேன். வாங்கின கடனுக்கு வட்டியே கட்ட முடியலை. யாராவது உதவி பண்ணி.. என் புள்ளைய உயிரோட காப்பாத்திக் கொடுங்க சாமி. அவனுக்காகத்தான் இந்த உசுரையே வெச்சிருக்கேன்’’ என்று கதறி அழுத சிறுவனுடைய தந்தை மனவலியை முதன் முதலில் பதிவுசெய்தது விகடன்.
Also Read: வேலூர்: `என் புள்ளையக் காப்பாத்திக் கொடுங்க!’ - சிகிச்சைக்கு உதவி கேட்கும் தந்தையின் பரிதாபம்
கடந்த செப்டம்பர் மாதம் 24-ம் தேதி, ``என் புள்ளையக் காப்பாத்திக் கொடுங்க! -சிகிச்சைக்கு உதவி கேட்கும் தந்தையின் பரிதாபம்’’ என்ற தலைப்பில் சிறுவன் ரவீந்தரின் உடல்நிலை குறித்து விகடன் இணையத்தில் விரிவான செய்தியை வெளியிட்டிருந்தோம். இதையடுத்து, விகடன் வாசகர்கள் பலர் சிறுவனின் மருத்துவ உதவிக்குத் தங்களால் முடிந்த பண உதவியை செய்தனர்.
இந்த நிலையில், வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பிலும் ரவீந்தரின் மருத்துவ செலவுக்காக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகையை சிறுவனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவர் ஆர்.வேல்முருகன் வழங்கினார். மேலும், நிதி திரட்டி தேவையான உதவிகளைச் செய்வதாகவும் வேல்முருகன் கூறினார். ஒரு லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்ட சிறுவன் ரவீந்தரின் பெற்றோர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
source https://www.vikatan.com/news/tamilnadu/vellore-vijay-makkal-iyakkam-helps-boys-treatment
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக