தனியார் பள்ளியில் படித்த மாணவியின் குடும்பத்தினரிடம் பேசி, அந்த மாணவியின் வீட்டுக்கே சென்று மாணவிக்கு சால்வை அணிவித்து, அவரை அரசுப் பள்ளியில் சேர்க்க வைத்த தலைமை ஆசிரியைக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கிறது, எழுதியாம்பட்டி. மிகவும் பின்தங்கிய கிராமம் இது. இங்கு, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 23 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வரும் கலா, பள்ளிச் சூழலை சிறப்பாக மாற்றி வைத்திருக்கிறார். கொரோனா காலம் என்பதால், மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்திவருகிறார். மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் ஏழ்மை நிலையில் இருப்பவர்களாக உள்ளதால், மாணவர்களுக்கு சிலேட்டு மற்றும் வாய்ப்பாடு புத்தகத்தைச் சொந்த செலவில் வாங்கிக் கொடுத்து வருகிறார்.
Also Read: தமிழகத்தின் மாதிரிப்பள்ளியாக தேர்வான பஞ்சப்பட்டி அரசுப் பள்ளி... என்ன சிறப்பு?
ஆனால், ஊரில் சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்துப் படித்து வைக்க, அவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்க வைக்க, கலா பெரும் முயற்சி எடுத்து வருகிறார். அந்த வகையில், தனியார் பள்ளியில் யு.கே.ஜி படித்த யாசினி என்ற மாணவியின் பெற்றோரிடம் பேசி, யாசினியை அரசுப் பள்ளியில் சேர வைத்திருக்கிறார். இதற்காக, கலா யாசினி வீட்டுக்கே சென்று, யாசினிக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்து, அரசுப் பள்ளியில் சேர்த்திருக்கிறார். அதோடு, யாசினியை வைத்து பள்ளி வளாகத்தில் ஒரு மரக்கன்றையும் நட வைத்திருக்கிறார்.
இதுகுறித்து, தலைமை ஆசிரியை கலாவிடம் பேசினோம்.
"எழுதியாம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியை எல்லா வகையிலும் சிறப்பா மாற்றி வெச்சிருக்கோம். ஆனால், சிலர் தங்கள் பிள்ளைகளை இங்கே சேர்க்கத் தயங்குறாங்க. அரசுப் பள்ளி மேல மக்களுக்கு இருக்கிற மனத்தடைதான் அதுக்குக் காரணம். வட்டிக்குக் கடன் வாங்கி, தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கிறாங்க. அவர்களிடம் தொடர்ந்து பேசி, 'அரசுப் பள்ளியில் எல்லா வசதிகளும் இருக்கு. இலவசமா சிறப்பா கல்வி போதிக்கிறோம். இங்கே உங்க பிள்ளைகளைச் சேருங்க'னு தொடர்ந்து சொல்லிட்டு வர்றேன்.
கொரோனா ஊரடங்கால் வீடுகளில் இருக்கும் மாணவர்களைத் தேடிப்போய், நான் பாடம் நடத்திக்கிட்டு இருக்கேன். அந்த வகையில், நான் அவர்களுக்குப் பாடம் நடத்தும் விதத்தைப் பார்த்து இன்ஸ்பயர் ஆன ரெண்டு பெற்றோர்கள், தனியார் பள்ளிகளில் படித்துக்கொண்டிருந்த தங்கள் பிள்ளைகளை எங்க பள்ளியில் சேர்த்தாங்க. அதேபோல்தான், கேசவமூர்த்தி, சத்யா தம்பதியும், தனியார் பள்ளியில் யு.கே.ஜி முடித்த தங்கள் மகள் யாசினியை, எங்க பள்ளியில் சேர்க்க முன்வந்தாங்க.
அதனால், மாணவியை ஆர்வப்படுத்த, நான் அவர் வீட்டுக்கே சென்று, யாசினிக்கு சால்வை அணிவித்து, அவரை பள்ளிக்கு அழைத்து வந்து, ஒன்றாம் வகுப்பில் சேர்த்தேன். அதோடு, என் செலவில் அவருக்கு சிலேட், வாய்ப்பாடு புத்தகம் வழங்கினேன். யாசினியை எழுத வைத்தேன். தவிர,யாசினிக்கு இயற்கை மீது ஆர்வம் வர ஏதுவா, அவரை வைத்து பள்ளி வளாகத்தில் மலைவேம்பு மரக்கன்று ஒன்றை நட வைத்தேன்.
தனியார் பள்ளிகளைவிட, அரசுப் பள்ளியில் எல்லாவகையிலும் சிறப்பா கல்வி போதிக்கிறோம். ஆனால், அது பல பெற்றோர்களுக்குப் புரிவதில்லை. 'தனியார் பள்ளிகள் கட்டணத்திலேயே குறியாக இருப்பார்கள். அரசுப் பள்ளிகளில் அதே கல்வியை இலவசமா கற்கலாம்'னு அவங்களுக்குப் புரிந்துணர்வு ஏற்படுத்தத்தான், இப்படி மாணவிக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்து, பள்ளியில் சேர்த்தேன்" என்றார்.
source https://www.vikatan.com/news/education/karur-village-school-headmaster-kala-special-efforts-to-increase-school-admission
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக