கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ். இந்தாண்டு ஜனவரி மாதத்தில் ஐரோப்பிய நகரங்களில் வேகமாக பரவத் துவங்கியது. ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளில் கட்டுக்குள் வந்த கொரோனா பரவலானது மீண்டும் கடந்த சில வாரங்களாக வேகமெடுத்துள்ளது. இது கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தாக்குதல் என்று கூறப்படுகிறது.
பிரான்ஸ்:
கடந்த புதன்கிழமை நிலவரப்படி, பிரான்ஸில் மட்டும் 34,437 நபர்களுக்கு கொரோனா தொற்றானது உறுதிசெய்யப்பட்டதோடு 244 பேர் கொரோனாவால் உயிரிளந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அந்நாட்டு அரசு இன்று (30.10.2020) முதல் மீண்டும் சில கட்டுப்பாடுகளுடன் கூடிய தேசிய அளவிலான ஊரடங்கினை அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை வெளியிட்ட அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பேசுகையில், ``கொரோனா வைரஸின் தாக்குதலானது முதல் அலையைவிட இரண்டாம் அலை அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அபாயம் உள்ளது. வைரஸ் பரவலைப் பொருத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். அத்தோடு 2 வாரங்களில் நிலைமை சீரானால், அதற்கேற்றாா்போல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.
பொதுமுடக்கத்தின் விதிமுறைகளின்படி, மக்கள் அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே உரிய ஆவணங்களுடன் வீட்டை விட்டு வெளியேற வேண்டும். உணவகங்கள், பார்கள், மற்றும் உடற்பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டிருக்கும். பள்ளிகள், மற்றும் தொழிற்சாலைகள் மூடப்படுவதில் அதிக சிரமங்கள் உள்ளதால், அவை திறக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுமுடக்கமானது டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டில் பெரும்பாலான நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளால் நிரம்பியிருப்பதால் தற்பொழுது, போர் விமானங்கள் மூலம் பாதிப்பு குறைவாக இருக்கும் பகுதிகளுக்கு அவசரஅவசரமாக மாற்றப்பட்டு வருகின்றனர்.
Also Read: கோவிட்-19: இரண்டாம் அலை ஏன் இன்னும் ஆபத்தாக இருக்கலாம்? விளக்கும் மருத்துவர்
ஜெர்மனி:
பிரான்ஸைப் போலவே ஜெர்மனியிலும் கொரோனா வைரஸின், இரண்டாவது அலை தாக்கத்தால் நேற்று ஒரே நாளில் மட்டும் 14,964 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 4,49,275 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பரவலானது மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், பிரான்ஸைப் போலவே சில கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கானது வரும் நவம்பர் 2-ஆம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை அமல்படுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கல், "இக்கொள்ளை நோயானது சுதந்திரம் குறித்த கேள்வியை நம்முடைய எழுப்பியுள்ளது. சுதந்திரம் என்பது ஒவ்வொருக்குமான தனிப்பட்ட விஷயமல்ல. இது ஒவ்வொருவரின் குடும்பத்தினரையும், பணியிடத்தையும் சாா்ந்தே இருக்கும். அதனால் அனைவரும் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், ஊரடங்கு விதிமுறைகளின்படி பள்ளிகள், மழலையர் பள்ளிகள், அத்தியாவசியக்கடைகள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் செயல்படும். அத்தியாவசியமற்ற இடங்களான பார்கள், திரையரங்குகள் தங்கும் விடுதிகள் முதலானவை மூடப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பிரிட்டனிலும் கொரானாவின் இரண்டாம் அலை தாக்கத்தால் அதிக அளவில் புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனால், அந்நாட்டில் தேசிய அளவில் இல்லாமல், பிராந்திய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மற்றவை
ஐரோப்பியாவின் மற்ற பகுதிகளான பெல்ஜியம், இத்தாலி, ஸ்பெயின், செக் குடியரசு, அயர்லாந்து போன்ற இடங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்திருப்பதால் பொதுமுடக்கமானது அறிவிக்கப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/health/international/european-countries-announced-lock-down-over-corona-second-wave
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக