Ad

புதன், 28 அக்டோபர், 2020

கொரோனா அதிகம் பாதித்த மாநிலப் பட்டியலிலிருந்து நீங்குகிறதா தமிழகம்?

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடங்கிய நாள்களிலேயே தமிழ்நாடு பெருமளவிலான பாதிப்பைச் சந்திக்கத் தொடங்கிவிட்டது. நாளொன்றுக்கு அதிக பாதிப்புகளைச் சந்திக்கும் மாநிலங்களின் வரிசையில் டெல்லி, மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் இடம்பெற்றிருந்தது. மார்ச் முதலே தொடர்ந்து புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது.

கொரோனா

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாளொன்றுக்கு அதிகபட்சமாக 6,500 முதல் 7,000 வரையிலாக நோய்த்தொற்று எண்ணிக்கை பதிவாகியிருக்கிறது. அதேபோல இறப்பு எண்ணிக்கையும் 120-க்கும் அதிகமாகப் பதிவாகியிருந்தது.

தமிழ்நாட்டின் தற்போதைய நிலை என்ன?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 21.10.2020 அன்றைய கணக்கின்படி, புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 3,086-ஆகப் பதிவாகியிருக்கிறது. குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை 4,301-ஆகப் பதிவாகியிருக்கிறது. அன்றைய தினத்தின் இறப்பு 39. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இருந்த பாதிப்பு விகிதத்தைவிட தற்போது பெருமளவு குறைந்திருக்கிறது.

கொரோனா பரிசோதனை

தமிழ்நாட்டில் 21.10.2020 அன்றைய நிலவரப்படி, மொத்தம் 6,97,116 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 6,50,856 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள். 10,780 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். தற்போதைய நிலையில், 35,480 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலும், கொரோனா கண்காணிப்பு முகாம்களிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

என்ன செய்கிறது தமிழ்நாடு?

இந்திய அளவில் தமிழ்நாடு, பொதுச் சுகாதாரக் கட்டமைப்பில் சிறந்து விளங்கிக்கொண்டிருக்கும் மாநிலம். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை இந்தியாவின் வேறெந்த மாநிலமும் மேற்கொள்ளாத அளவுக்குத் தங்கத்தரம் வாய்ந்த (Golden Standard) ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டுவருகிறது. அதுவும் இன்று நேற்றல்ல... கொரோனா பேரிடர் தொடங்கிய காலத்திலிருந்தே தொடர்ச்சியாகப் பரிசோதனைகளை அதிகரித்துக்கொண்டேவருகிறது.

பி.சி.ஆர் பரிசோதனை

தொடக்க காலத்தில் 1,000 பரிசோதனைகள் செய்யவே திணறிக்கொண்டிருந்த அரசு, தற்போது நாளொன்றுக்கு 90,000+ பரிசோதனைகளை மேற்கொண்டுவருகிறது. 192 ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்கின்றன. இவற்றில், 66 அரசு ஆய்வகங்கள், 126 தனியார் ஆய்வகங்கள். இந்தியாவில் பல மாநிலங்கள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகளை மேற்கொள்கின்றன. ஆனால், அதில் சொற்பமான எண்ணிக்கையே ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை; பெரும்பாலும் டெஸ்ட் கிட்களில்தான் பரிசோதனையை மேற்கொண்டுவருகின்றன.

தமிழ்நாட்டில் 19.10.2020 அன்றைய நிலவரப்படி 90,31,696 ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டிருக்கிறது தமிழக சுகாதாரத்துறை.

டெஸ்ட் கிட்களைப் பொறுத்தமட்டில், பரிசோதனைக்கான நேரமும், செலவும் குறைவு என்பது ஒருபுறமும் இருந்தாலும், இதில் தவறான முடிவுகள் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம் என்று கூறப்படுகிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறியப் பரிந்துரை செய்யப்படுவது ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைதான். ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறிவது 70 சதவிகிதம்தான் பலனளிக்கும் என்று கூறப்படுகிறது. வைரஸ், தொண்டையிலிருந்து நுரையீரலுக்குள் இறங்கிவிட்டாலோ அல்லது சரியாக மாதிரிகளைச் சேகரிக்கத் தவறிவிட்டாலோ, பரிசோதனை முடிவுகள் தவறாக வர வாய்ப்பிருக்கிறது. இருந்தபோதிலும், இன்றுவரை கொரோனாவைக் கண்டறிய மிகச்சிறந்த முறையாகக் கருதப்படுவது ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை முறைதான்.

இந்தியாவில் தமிழ்நாட்டின் நிலை என்ன?

தினந்தோறும் புதிய பாதிப்புகள் அதிகரித்துக் காணப்படும் மாநிலங்களின் பட்டியலிலிருந்த தமிழ்நாட்டில், தற்போது குறைந்த எண்ணிக்கையிலான புதிய தொற்றுகளே பதிவாகிவருகின்றன. தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு

மகாராஷ்டிராவில் 8,142,

கேரளாவில் 8,369,

கர்நாடகாவில் 5,872,

ஆந்திரப்பிரதேசத்தில் 3,746,

மேற்குவங்கத்தில் 4,069,

தமிழகத்தில் 3,086,

டெல்லியில் 3,686 எனப் புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியிருக்கின்றன.

கொரோனா நிலவரம்

பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையையும், தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையையும் மேற்காணும் படத்தில் காணலாம்.

(குறிப்பு: தமிழ்நாட்டின் புல்லட்டின் எண்ணிக்கையிலும் ஐ.சி.எம்.ஆர் எண்ணிக்கையிலும் வேறுபாடு இருக்கலாம். இரண்டு எண்ணிக்கையும் வெளியாகும் நேர வித்தியாசம் காரணமாக இந்த வேறுபாடு இருப்பதாகத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.)

கொரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறியிருக்கிறதா என்பதைக் கண்டறிய, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இந்தியா முழுவதும் பரிசோதனையை மேற்கொண்டது. இதன் ஒரு பகுதியாகத் தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை உள்ளிட சில இடங்களில் இரண்டு கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், கொரோனா தொற்று பாதித்த சிலருக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்திருப்பது தெரியவருகிறது.

மேலும், தமிழக சுகாதாரத்துறை சார்பிலும் 'நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்திருக்கிறதா' என்பதைக் கண்டறிய, தமிழ்நாடு முழுவதும் 30,000 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்றுவருகின்றன. இந்த ஆய்வின் முடிவில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கிறதா, தமிழ்நாடு எந்த நிலையில் இருக்கிறது என்பது போன்ற கேள்விகளுக்கான விடை தெளிவாகத் தெரிந்துவிடும்!



source https://www.vikatan.com/government-and-politics/healthy/is-tamil-nadu-being-coming-out-from-the-list-of-states-most-affected-by-corona-virus

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக