Ad

செவ்வாய், 20 அக்டோபர், 2020

சென்னை: ரூ.2 கோடி தங்கம், வைரம், வெள்ளி திருட்டு - தி.நகரைக் குறிவைக்கும் கொள்ளையர்கள்

சென்னை தி.நகர், மூசா தெருவில் மொத்தமாக தங்க நகைகளை வியாபாரம் செய்யும் ஜூவல்லரி உள்ளது. குடியிருப்புப் பகுதியில் வீடு ஒன்றில், இந்தக் கடையை ராஜேந்திர குமார், தருண், பரிஸ் ஆகியோர் நடத்திவருகின்றனர். வழக்கம் போல நேற்று ( 20-ம் தேதி) இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு அவர்கள் சென்றனர். 21-ம்தேதி காலையில் கடையைத் திறக்க ஊழியர்களும் கடையின் உரிமையாளர்களும் வந்தனர். அப்போது கிரில் கேட் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள், தங்கக் கட்டிகள், வெள்ளிக் கட்டிகள், வைர நகைகள் ஆகியவை கொள்ளைப் போயிருந்தன.

தங்க நகை

இதுகுறித்து கடையின் உரிமையாளர்கள், மாம்பலம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொள்ளை நடந்த இடத்துக்கு வரவழைக்கப்பட்ட கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகிய ரேகைகளைப் பதிவு செய்தனர். மேலும், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராப் பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில், இரவில் கொள்ளையர்கள் பூட்டை உடைத்து தங்க நகைகளை அள்ளிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாம்பலம் போலீஸார் கூறுகையில், ``கொள்ளை நடந்த நகைக்கடையில் ஆர்டரின் பேரில் ஜூவல்லரிகளுக்கு தங்க நகைகள், வைர நகைகள் செய்து கொடுக்கப்படும். அதனால், அந்தக் கடையில் எப்போதும் கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி ஆகியவை லாக்கரில் இருக்கும். தினமும் கடையை மூடிச் செல்லும்போது பாதுகாப்பாக தங்கம், வெள்ளி, வைரம் ஆகியவற்றை வைத்துவிட்டு செல்வது வழக்கம். இந்தக் கடையில் திட்டம்போட்டு கொள்ளைச் சம்பவத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். அதற்கான சிசிடிவி காட்சிகளும் கிடைத்துள்ளன.

Also Read: சிவகங்கை: 175 சவரன் நகை கொள்ளை வழக்கு! - 11 மாதங்களுக்குப் பிறகு சிக்கிய கொள்ளையர்கள்

தி.நகரில் கொள்ளை நடந்த இடம்

இந்தக் கடையிலிருந்து 2.125 கிலோ எடையுள்ள வைர நகைகள், 2 கிலோ எடையுள்ள தங்க நகைகள், அரை கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள், வெள்ளிக் கட்டிகள் 15 ஆகியவை கொள்ளைப் போனதாக புகாரில் குறிப்பிட்டுள்ளது. மேலும், கொள்ளைபோன நகைகளின் மதிப்பு 2 கோடி ரூபாய் என கடையின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்அடிப்படையில் விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் தி.நகர் காவல் மாவட்டத்தில் சீனியர் சிட்டிசன்களை கட்டிப்போட்டு விட்டு 250 சவரன் தங்க நகைகள், பணம், கார் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது. இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் வீட்டின் உரிமையாளர்களின் உறவினர்களே ஈடுபட்டது தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் உருக்கப்பட்டு பிஸ்கட்டாக மாற்றப்பட்டதை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து தி.நகர் பகுதியில் கொள்ளைச் சம்பவங்கள் நடப்பதால் பொது மக்கள், வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/rs-2-crore-gold-diamond-silver-jewels-robbed-from-chennai-store

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக