Ad

செவ்வாய், 27 அக்டோபர், 2020

பா.ஜ.க - வி.சி.க மோதல்: தொடரும் மனுதர்ம சர்ச்சை... எப்போது முடிவுக்கு வரும்?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், இணையவழியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் முன்வைத்த கருத்துகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு சர்ச்சையானது. திருமாவளவனின் பேச்சுக்கு தமிழக பா.ஜ.க-வினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

குஷ்பு

கடந்த சில நாள்களுக்கு முன்பாக காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க-வில் சேர்ந்த நடிகை குஷ்பு, ''‘மனுஸ்மிருதியில் உள்ளதாக திருமாவளவன், பெண்கள் குறித்து பேசிய கருத்துகள் கண்டனத்துக்கு உரியவை. அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்றார். பெண்களை இழிவுபடுத்திப் பேசியதாக பா.ஜ.க நிர்வாகி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருமாவளவன்மீது 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், திருமாவளவன் தான் பேசிய கருத்துக்கு மறுப்போ மன்னிப்போ தெரிவிக்கவில்லை. மாறாக. 'மனுஸ்மிருதி நூலைத் தடை செய்ய வேண்டும்' என தமிழகம் முழுவதும் போராட்டத்தை அறிவித்தார். அவருக்கு காங்கிரஸ், ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் உள்ளிட்ட பல அரசியல் கட்சியினரும் பல்வேறு இயக்கத்தினரும் ஆதரவு தெரிவித்தனர். அவர் அறிவித்தபடி, கடந்த சனிக்கிழமை சென்னையில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

அதில் பேசிய திருமாவளவன், ''கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி, ஸ்வீடனில் இயங்கிவரும் 'ஐரோப்பிய பெரியாரிய உணர்வாளர்கள்' அமைப்பு நடத்திய கருத்தரங்கில், 'பெரியாரும் இந்திய அரசியலும்' என்கிற தலைப்பில் நான் பேசினேன். அதில் 40 நிமிடம் நான் பேசிய மொத்த உரையிலிருந்து குறிப்பிட்ட நொடிகள் மட்டும் வெட்டி பரப்பப்படுகிறது. மனு தர்மத்தில் பெண்கள் குறித்து சொல்லப்பட்டிருக்கிற விஷயங்களின் சாராம்சத்தை எடுத்துக்கொண்டு, மற்றவர்களுக்கு நான் என்னுடைய வார்த்தைகளைக் கொண்டு விளக்கினேன். நான் மன்னிப்பெல்லாம் கேட்கப் போவதில்லை. வழக்குகளைக் கண்டும் பின்வாங்கப்போவதில்லை'' எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.

குஷ்பு

தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த எல்லீஸ் பேட்டை என்ற இடத்தில் ஒரு திருமண நிகழ்வுக்கு வந்திருந்த திருமாவளவனின் காரை பா.ஜ.க-வினர் முற்றுகையிட முயன்றனர். அப்போது, பா.ஜ.க-வினருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, திருமாவளவனைக் கண்டித்து பா.ஜ.க மகளிரணி சார்பில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், சிதம்பரத்தில் நடக்கவிருந்த இந்தப் போராட்டத்துக்கு போலீஸார் தடை விதித்தனர். இருப்பினும், தடையை மீறி போராட்டம் நடத்துவதற்காக நடிகை குஷ்பு உள்பட பா.ஜ.க-வினர் காரில் புறப்பட்டு சென்றனர். ஆனால், செங்கல்பட்டு அருகே அவர்களை போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில், குஷ்பு மற்றும் பா.ஜ.க-வினரைக் கண்டித்து, அவர்களைத் தங்க வைத்திருக்கும் கேளம்பாக்கம் விடுதியின் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பா.ஜ.க மற்றும் வி.சி.க-வினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து பா.ஜ.க - வி.சி.க-வினருக்கு இடையே பல இடங்களில் மோதல் வெடித்து வருகிறது.

இந்தநிலையில், ''இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் பா.ஜ.க-வினர்தான். பெரியார் குறித்துப்பேசும்போது மனுதர்மம் குறித்து எப்படிப் பேசாமல் இருக்க முடியும். தவிர, ஒருமாதத்துக்கு முன்பாக பேசிய விஷயத்தை, அதிலும் குறிப்பிட்ட நிமிடங்களை மட்டும் வெட்டி சமூக வலைதளங்களில் பரப்பி, திட்டமிட்டு அரசியல் செய்து வருகின்றனர்'' என திருமாவளவனை ஆதரிப்பவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து, பா.ஜ.கவின் மாநிலப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசனிடம் பேசினோம்,

''எப்போது பேசினால் என்ன... பேசிய விஷயங்கள் சரியா, தவறா என்றுதான் பார்க்கவேண்டும். ஈ.வெ.ரா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி கிடையாது. ஆனால், திருமாவளவன் இந்து மக்களின் வாக்குகளைப் பெற்று எம்.பி-யான ஒரு மக்கள் பிரதிநிதி. அவர் இப்படிப் பேசக்கூடாது. அனைத்து மதங்களிலும் குறைபாடு இருக்கிறது. ஆனால், இவர்கள் இந்து மதத்தை மட்டும் திட்டமிட்டுத் தாக்கிப் பேசி வருகிறார்கள்.

சீனிவாசன்

இந்து மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தி பேசி வருகிறார்கள். தாங்கள் இருக்கும் மதத்தைத்தான் முதலில் சீர்திருத்த முடியும். இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் பின்பற்றும் மதத்தில் உள்ள குறைபாடுகள் குறித்துத்தான் விமர்சிக்கமுடியும் என்கிற கருத்து சரி அல்ல. தங்களை இந்துக்கள் அல்ல என அறிவித்துக்கொண்டு, இந்துக்களுக்கு எதிராகப் பேசுவதை எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும்? கருத்துரிமை அனைவருக்கும் உண்டுதான். ஆனால், அது யாரையும் காயப்படுத்தக் கூடாது. பெண்களைப் பற்றிப் பேசும்போது ஜாக்கிரதையாகப் பேசவேண்டும். மனுஸ்மிருதியில் பெண்களைப் பற்றி உயர்வாகவும்தான் சொல்லப்பட்டிருக்கிறது. அதுகுறித்து ஏன் திருமாவளவன் பேசுவதில்லை.

தவிர, இன்று மனுநீதி எங்கும் இல்லை. அது வழக்கொழிந்துவிட்டது. வெள்ளைக்காரர்கள் தவறாக மொழிபெயர்த்த மனுஸ்மிருதி பிரதிகளை வைத்துக்கொண்டு சிலர் திரித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மனுஸ்மிருதியை பல இடங்களில் ஏற்றுக்கொள்ளவில்லை என ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்க்கரே சொல்லியிருக்கிறார். வி.ஹெச்.பி தலைவர் அஷோக் சிங்கால், இடைச்செறுகல் மனுஸ்மிருதிதான் இருக்கிறது. அது குறித்து அறிக்கை வெளியிடவேண்டும் என அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார். அம்பேத்கரும் கூட நாகரிகமான முறையில்தான் விமர்சனம் செய்தார். ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வே மனுஸ்மிருதியைத் தாண்டி வந்துவிட்டது. இன்றைக்கு அம்பேத்கர் ஸ்மிருதியைத்தான் (அரசியலமைப்பு) பார்க்கவேண்டும்'' என்கிறார் அவர்.

''ஒரு மக்கள் பிரநிதி இப்படிப் பொதுவெளியில் பேசுவது சரியல்ல'' எனும் திருமாவளவன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து வி.சி.க-வின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசுவிடம் பேசினோம்,

''சாதாரண மனிதனோ மக்கள் பிரதிநிதியோ அனைவருக்கும் சட்டம் ஒன்றுதான். மக்கள் பிரதிநிதி இப்படிப் பேசக்கூடாது என சட்டத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. அதனால் அந்தக் குற்றச்சாட்டே தவறானது. சொல்லப்போனால் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் ஒருவர் பேசும்போதுதான் அது மக்களிடம் இன்னும் வீரியமாக எடுத்துச்செல்லப்படும், கவனிக்கப்படும்.

அடுத்ததாக, மனுதர்மத்தை எதிர்த்து நாங்கள் இப்போது பேசவில்லை, தொடர்ச்சியாகப் பேசிவருகிறோம். நாங்கள் திருச்சியில் நடத்திய 'தேசம் காப்போம்' மாநாட்டிலும் எங்கள் தலைவர் மனுதர்மம் குறித்துப் பேசியிருக்கிறார். ஆனால், இணையத்தில் போன மாதம் பேசியதை அரசியல் உள்நோக்கத்துடன் இப்போது சர்ச்சையாக்கி வருகின்றனர்.

வன்னி அரசு

மனுஸ்மிருதியில் ஒரு கருத்து இப்படி இருக்கிறது எனச் சொன்னால், அதுகுறித்து விவாதிக்கலாம். அது சரியான அரசியல். ஆனால், அதைவிடுத்து அது குறித்துப் பேசவே கூடாது என்பது எப்படிச் சரியாகும். அதில் பெண்கள் குறித்து நல்ல கருத்துகளும் சொல்லப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் நாங்கள் பெண்களுக்கு எதிராக உள்ள கருத்துகளுக்காக மட்டும் மனுஸ்மிருதியை எதிர்க்கவில்லை. பார்ப்பனரல்லாத அனைவருக்கும் எதிராக, சாதிக்கொரு நீதியைப் போதிப்பதாலும்தான் எதிர்க்கிறோம். அம்பேத்கர் பௌத்தத்தை தழுவியதே மனுஸ்மிருதிக்கு எதிரான ஒரு செயல்பாடுதான். அவர் எளிதாக அதைக் கடந்துவிட்டார் என்பதே தவறான தகவல்.

மனுஸ்மிருதி குறித்து பா.ஜ.க தலைவர் முருகன், குஷ்பு என ஆளாளுக்கு ஒரு கருத்தைச் சொல்லிவருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் 'மனுதர்மமே வாழ்வியல் நெறி' எனச் சொல்லியிருக்கிறார். முன்னாள் தலைவர் வேதாந்தி, 'மனுதர்மம் உச்சகட்டமான சட்டம். அதுதான் மக்களுக்குத் தேவை' எனச் சொல்லியிருக்கிறார். பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், சங் பரிவார் அமைப்புகள் அவர்களுடைய உறுதியான நிலைப்பாட்டை ஒருமித்து இதுவரை அறிவித்ததில்லை. சமத்துவத்துக்கு எதிராக மனுதர்மம்தான் இருக்கிறது, அதில்தான் அறிவியலுக்குப் பொருந்தாத, நாகரிக சமூகத்துக்கு எதிரான, பெண்களுக்கு எதிரான கருத்துகள் இருக்கின்றன. மற்ற மதங்களில் அப்படிப்பட்ட கருத்துகள் இருந்தால் காண்பிக்கச் சொல்லுங்கள் அதுகுறித்து விவாதிக்கலாம்.

Also Read: ``மனுதர்ம கருத்துகளுக்கும் பி.ஜே.பி-க்கும் என்ன சம்பந்தம்?" - வானதி சீனிவாசன்

பா.ஜ.க-வினரிடம் நேர்மறையான அரசியல் செயல்பாடுகள் இல்லை. பெண்களுக்கு எதிராக நாங்கள் பேசுகிறோம் எனத் திசைதிருப்புவது கோழைத்தனமான செயல். மருத்துவக் கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு, ஓ.பி.சி மாணவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீடு ஆகியவற்றின் மீதான கவனத்தைத் திசைதிருப்பவே தற்போது இந்த விஷயத்தைக் கையிலெடுத்திருக்கிறது பா.ஜ.க'' என்றார்.

குஷ்பு

அவரிடம், 'கற்பு குறித்து குஷ்பு முன்பொருமுறை தெரிவித்த கருத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் காட்டிய எதிர்வினைக்கு பழி வாங்கத்தான் குஷ்பு தற்போது இந்த விஷயத்தில் தீவிரம் காட்டிவருவதாக சொல்லப்படுவது' குறித்துக் கேட்க,

''கற்பு குறித்து குஷ்பு சொன்ன கருத்துகளுக்காக விடுதலைச் சிறுத்தைகள் அவரை எதிர்க்கவில்லை. 'தமிழ்நாட்டில் எல்லாப் பெண்களும் யோக்கியமா?' என்கிற வகையில் பெண்களை இழிவுபடுத்தும்விதமாக அவர் சொன்ன கருத்துகளை எதிர்த்துதான் விடுதலைச் சிறுத்தைகள் அவருக்கு எதிராக வழக்குத் தொடுத்தது. நாங்கள் மட்டுமே வழக்குத் தொடுக்கவில்லை. பா.ம.க-வும்தான் வழக்குத் தொடுத்தது. தேவையில்லாமல் சிலர் திசை திருப்புகிறார்கள். மனுஸ்மிருதியைப் படிக்காமல், அதில் அப்படிச் சொல்லவில்லை என குஷ்பு சொல்லும் கருத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். யாரோ எழுதிக்கொடுக்கும் ஸ்கிரிப்டைத்தான் அவர் தற்போது பேசிவருகிறார். தவிர, 'திருமணத்துக்கு முன்பு பெண்கள் உடலுறவு கொள்வதில் தவறில்லை' என அன்று சொன்ன கருத்தில் இப்போதும் உறுதியாக இருக்கிறாரா என்பதை குஷ்புதான் தெளிவுபடுத்தவேண்டும்'' என்றார் அவர்.

இறுதியாக, அரசியல் விமர்சகர் ராமசுப்பிரமணியனிடம் பேசினோம்,

''இரண்டு பக்கமுமே இது தேவையில்லாத சர்ச்சையாகவே நான் நினைக்கிறேன். திருமாவளவன் சொன்ன வார்த்தைகள் அந்தப் புத்தகத்தில் நேரடியாக இல்லையே தவிர, பெண்கள் குறித்து மனு சாஸ்திரத்தில் இருப்பதாக அவர் சொன்ன விஷயங்கள் சரியானதுதான். பெண்கள் குறித்து அவமரியாதையாக அதில் சொல்லப்பட்ட கருத்துகளை நாம் ஏற்றுக்கொள்ளவும் முடியாது. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் தவறாகச் செய்துவிட்டனர் என்பதெல்லாம் ஏற்கக்கூடியதாக இல்லை. ஒரிஜினலாக இருக்கக்கூடியதுதான். காலம்காலமாக கடத்தப்பட்டுவருகிறது. இடையில் ஏதாவது இடைச்செருகல் நிகழ்ந்திருக்கலாம்.

பெண்களைப் பற்றி மோசமாக இருப்பது மட்டுமல்ல, ஐந்தாவது வர்ணமாக இருக்கும் மக்கள் நாய், கழுதைதான் வைத்துக்கொள்ள வேண்டும், ஊருக்கு வெளியே தனியாக வாழவேண்டும் என்கிற கருத்தெல்லாம் இருக்கிறதுதான். அதுவும் மறுப்பதற்கில்லை. ஆனால், அதைத்தாண்டி பெண்கள் குறித்து நல்ல விஷயங்களும் அதில் சொல்லப்பட்டிருக்கின்றன. அதேபோல, பிராமணர்கள் தவறு செய்தால் மிகப்பெரிய தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என்றும் அதில் இருக்கிறது. இவற்றையெல்லாம் திருமாவளவன் உள்பட யாரும் படித்திருக்க மாட்டார்கள்.

ராமசுப்பிரமணியன்

ஆனால், திருமாவளவன் நாற்பது நிமிடம் பேசியதை நாற்பது நொடிகள் கட் செய்து பரப்புவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அரசியல் நோக்கத்துக்காக பா.ஜ.க வழக்குத் தொடுத்ததும் தவறு. நீதிமன்றத்துக்குச் சென்றால், வழக்கு தள்ளுபடியாகி திருமாவளவன்தான் வெற்றி பெறுவார். ஆனாலும், ஒரு எம்.பி-யாக, கட்சியின் தலைவராக இருக்கும் திருமாவளவன் இதுபோன்ற கருத்துகளைப் பேசுவதைத் தவிர்ப்பதே நல்லது. மனுஸ்மிருதியை சட்டமாக்க பா.ஜ.க முயற்சி செய்கிறார்கள் என்பதெல்லாம் சாத்தியமில்லாதது. திருமாவளவன் அப்படிப் பேசுவதைத் தவிர்க்கவேண்டும்.

பா.ஜ.கவும் இதோடு இந்த விஷயத்தைக் கைவிடுவது நல்லது. 'ஸ்டாலின், திருமாவளவன் தெருவில் நடமாட முடியாது' என்று பா.ஜ.க தலைவர் எல்.முருகன் பேசுவதெல்லாம் மிகவும் தவறு. தவிர பா.ஜ.க-வினர், 'மனுஸ்மிருதியில் அப்படி இல்லை, வெள்ளையர்கள் திரித்து எழுதினார்கள்' என்று சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவர்களுக்கு மனுஸ்மிருதி குறித்து ஒன்றும் தெரியாது. அரசியல் ஆதாயத்துக்காக, பா.ஜ.க-வினர் இதுபோன்ற விஷயங்களை பெரிதுபடுத்துவது சமூகத்தில் மிகப்பெரிய பதற்றத்தை உண்டாக்கும். அது நல்லதற்கல்ல. அது ஆரோக்கியமான் அரசியலும் கிடையாது என்பதே என் கருத்து'' என்கிறார் அவர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-vcks-reaction-over-manusmriti-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக