Ad

ஞாயிறு, 11 அக்டோபர், 2020

கரூர்: `அந்த மேம்பாலங்களை கொண்டு வந்தது யார்..?!' - எம்.ஆர்.விஜயபாஸ்கரை சாடும் ஜோதிமணி

`"என்னோட முயற்சியில் தேசிய நெடுஞ்சாலை எண் 44 ல் ஐந்து மேம்பாலங்களை கொண்டு வந்துள்ளேன். ஆனால், செயல்படாத போக்குவரத்து மந்திரியான எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் எம்.பி தம்பிதுரையும், தானும் அந்த மேம்பாலங்களை கொண்டு வந்ததாக வாய்கூசாமல் பொய்சொல்றார். ஒரு மணி நேரத்துக்குள் அதற்குரிய ஆதாரங்களை அவர் காட்டினால், நான் அரசியலைவிட்டே ஒதுங்கிவிடுகிறேன்" என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அதிரடியாக பேசியுள்ளார்.

ஜோதிமணி

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி, "கரூர் வழியாக போகும் தேசிய நெடுஞ்சாலை எண் 44 ல் புதிதாக கட்டப்படவுள்ள 3 மேம்பாலங்களை, தம்பிதுரையும், தானும் சேர்ந்து கொண்டுவந்தததாக, செயல்படாத போக்குவரத்துத்துறை மந்திரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். எப்போதும், அவங்க அவங்க பெத்த குழந்தைக்கு அவங்க அவங்க பேர் வைப்பதுதான் நாகரிகமானது. இன்னொருத்தர் பெத்த குழந்தைக்கு நாம பேர் வைக்ககூடாது. அதுக்கு பெயர், அரசியல் அநாகரிகம். செம்மடை, பெரிச்சிப்பாளையம் பிரிவு, பெரியார் வளைவு ஆகிய மூன்று இடங்களில் மேம்பாலம் கட்ட வேலை தொடங்கப்பட இருக்கிறது. கடந்த, 18.07.2019 ல் நாடாளுமன்றத்தில், அவசரப் பிரச்னைகளை எழுப்ப உதவும் விதி எண் 377 ன் கீழ் இந்தப் பிரச்னையை எழுப்பினேன். அந்த விதியைப் பற்றி தெரியாத அமைச்சர், 'வெறுமனே பேசினா மட்டும் திட்டம் வந்திருமா?'னு கேட்கிறார்.

கடிதத்தைக் காட்டும் ஜோதிமணி

அவருக்கு என்ன அளவுக்கு சிந்தனை இருக்குமோ, அதோட நிறுத்திக்கொள்ள வேண்டும். அவருக்கு தெரியாத நாடாளுமன்ற நடைமுறைகள் பல இருக்கிறது. அதைஎல்லாம் தெளிவாக தெரிந்துவைத்துக்கொண்டு பயன்படுத்துகிற எம்.பி நான். கடந்த, 18.07.2019 ல் நாடாளுமன்றத்தில் இதுபற்றி குரல் எழுப்பினேன். மறுநாள், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரை சந்தித்து, கரூரில் மேம்பாலம் அமைப்பது பற்றி நீண்ட விவாதம் நடத்தினேன். தொடர்ந்து, 23.07.2019 அன்று நாடாளுமன்றத்தில் பேசினேன். 377 விதி முக்கியமானது என்பதால், போக்குவரத்து மற்றும் தேசிய நெஞ்சாலைத்துறை மந்திரி விஐயகுமார்சிங், எனக்கு ஒரு லெட்டர் கொடுத்தார்.

Also Read: கரூர்:`4 தொகுதி; 50,000 வாக்குகள் வித்தியாசம்!' - அ.தி.மு.க-வுக்கு செந்தில் பாலாஜி சவால்

கரூர் தேசிய நெடுஞ்சாலை எண் 44 ல் உள்ள செம்மடை, பெரியார் வளைவு, பெரிச்சிப்பாளையம் பிரிவு பகுதிகளில் பிளாக் ஸ்பாட் அடையாளம் காணப்பட்டு, பாலம் கட்ட எஸ்டிமேட் போட்டு, 3 மாதங்களில் வேலை தொடங்கும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், எம்.ஆர்.விஜயபாஸ்கர், 'தம்பிதுரையும், நானும் அந்த மேம்பாலங்களை கொண்டு வந்தோம்' என்று சொல்வது, எவ்வளவு கேவலமான செயல். இன்னும் ஒரு மணி நேரத்தில், அந்த மேம்பாலங்களை அவர்கள் இருவரும்தான் கொண்டு வந்தார்கள் என்பதற்காக ஏதேனும் ஆதாரத்தைக் கொண்டு வந்து காட்டினால், நான் அரசியலை விட்டே போய்விடுகிறேன். அப்படி அவங்க சொல்றது பொய் என்றால், அதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, அமைச்சர் அரசியலை விட்டு போக தயாரா?.

மந்திய அமைச்சர் கொடுத்த கடிதம்

கரூரில் ஒரு மந்திரியாக செயல்பட அவருக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கிறது. இவருக்கு முன்னாடி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அம்மா குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தார். மினிபஸ் சேவையைத் தொடங்கினார். செந்தில் பாலாஜியைப் போல் இவர் ஏதேனும் செய்திருக்கிறாரா?. கரூரில் கமிஷன் வசூல் மட்டுமே செய்கிறார். செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது, மேலப்பாளையம், செல்லிப்பாளையம் மேம்பாலத்தை 15 கோடியில் அமைத்தார். ஆனால், ஐந்து வருடம் அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரால் அதை திறக்ககூடமுடியவில்லை.

செந்தில் பாலாஜி கொண்டு வந்த மருத்துவக் கல்லூரியை, மக்கள் நிறைந்த பகுதியில் கட்டி, மக்களுக்கு இடைஞ்சல் கொடுத்திருக்கிறார் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அதேபோல், செந்தில் பாலாஜி ரிங் ரோடு கொண்டு வந்தார். பேருந்து நிலையம் திட்டம் கொண்டு வந்தார். எக்ஸ்லேட்டர் நடைபாதை அமைக்க முயன்றார். ஆனால், அவருக்கு பின் அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கர், அத்தனை திட்டங்களையும் செயல்படுத்தவிடாமல் கிடப்பில் போடவைத்துவிட்டார். பத்து வருஷம் தொடர்ச்சியாக தம்பிதுரை எம்.பியாக இருந்தார். நான்கரை ஆண்டுகளாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் அமைச்சராக இருக்கிறார். ஆனால், அவர்களால் ஒரு திட்டத்தைக்கூட கொண்டுவரமுடியவில்லை.

கடிதத்தைக் காட்டும் ஜோதிமணி

நான் ஒன்றரை வருடங்களில் 5 மேம்பாலங்களை அமைக்கும் திட்டங்களை செயல்படுத்த வைத்திருக்கிறேன். கரூரில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் என்று பார்த்தால், ஒன்று செந்தில் பாலாஜி கொண்டு வந்ததாக இருக்கும். இல்லை என்றால், என் முயற்சியில் வந்ததாக இருக்கும். ஆனால், எந்த திட்டத்தையும் செயல்படுத்தாத எம்.ஆர்.விஜயபாஸ்கர், தான் மட்டும் கோடிகளாக குவித்து, தன்னை வளர்த்துகொண்டார். பத்தாதற்கு, எம்.ஆர்.வி டிரஸ்ட் என்று ஆரம்பித்து, அதற்கு கரூர் தொழிலதிபர்களை பணம் கேட்டு, கசக்கிப் பிழிகிறார். அமைச்சர் நடத்துவது கேவலமான அரசியல்" என்று ஆவேசமாக பேசி முடித்தார்.



source https://www.vikatan.com/news/controversy/karur-mp-jothimani-slams-transport-minister-mrvijayabaskar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக