Ad

ஞாயிறு, 11 அக்டோபர், 2020

இந்தியா: எல்லையில் தொடரும் பதற்றம்... 35 நாள்களில் 10 ஏவுகணைகள் பரிசோதனை!

இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்னை பல காலமாக இருந்துவந்தாலும், கடந்த ஜூன் மாதத்தில் லடாக் எல்லையில் பெரும் மோதலாக வெடித்தது. இரு நாடுகளின் பக்கமும் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது. இரு நாடுகளுக்கிடையே பதற்றத்தைத் தணிக்க, ஒருபுறம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவந்தாலும், இரு நாடுகளும் எல்லைப் பகுதியில் தங்களின் கண்காணிப்பை அதிகரித்திருக்கின்றன.

சீன ராணுவம் தொடர்ந்து எல்லைப் பகுதியிலிருந்து படைகளைப் பின்வாங்க மறுப்பதால், இந்தியாவும் எல்லையில் ராணுவப் படைகளை அதிகரித்திருக்கிறது. இதனால் பதற்றம் தொடர்கதையாகிவருகிறது. சீனாவின் திட்டங்களை முறியடிக்க, இந்தியாவும் தொடர்ந்து பல்வேறுவிதங்களில் ஆயத்தமாகிவருகிறது. சமீபத்தில், இந்தியா வந்தடைந்த ரஃபேல் போர் விமானம், இந்திய விமானப்படையின் பலத்தை அதிகரித்திருக்கிறது.

ரஃபேல்

இந்தநிலையில், கடந்த சில நாள்களாக இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ., ஏவுகணைச் சோதனைகளை அடுத்தடுத்து நிகழ்த்திவருவதை அவ்வப்போது செய்திகளில் பார்த்திருப்போம். அடுத்து வரும் சில நாள்களில் சப்-சோனிக் ஏவுகணையாna நிர்பயையும் (Nirbhay) சோதிக்கவிருக்கிறது இந்த அமைப்பு. இந்த ஏவுகணையையும் சேர்த்தால் 35 நாள்களில் மட்டும் 10 ஏவுகணைகளைச் சோதித்திருக்கிறது டி.ஆர்.டி.ஓ.

`மேக் இன் இந்தியா’ திட்டத்தில் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் ஏவுகணைகள், பிற சக்திவாய்ந்த மற்றும் சாதாரண ஏவுகணைகள் என தற்போது உள்நாட்டிலேயே ராணுவத் தளவாடங்களை தயாரித்துவரும் டி.ஆர்.டி.ஓ., அடிக்கடி ஏவுகணைகள் சோதனை நடத்துவது இயல்புதான். ஆனாலும், `குறைந்த கால அவகாசத்தில் இத்தனை பரிசோதனைகள் தற்செயலானது அல்ல’ என்கிறார் டி.ஆர்.டி.ஓ அதிகாரி ஒருவர். லடாக் எல்லைப் பகுதியிலிருந்து தொடர்ந்து வெளியேற மறுக்கும் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டால், அதற்கு பதிலடி கொடுப்பதற்காகவே டி.ஆர்.டி.ஓ இந்தப் பரிசோதனைகளை வேகப்படுத்தியிருப்பதாக, அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

பிரம்மோஸ்

சீனாவின் செயல்பாடுகளால் இந்தியாவுக்குச் சந்தேகம் வலுத்துவந்ததால், எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவின் ஏவுகணைத் திட்டங்களை வேகப்படுத்துமாறு டி.ஆர்.டி.ஓ-வை மத்திய அரசு கேட்டுக்கொண்டதாகவும், கொரோனா ஊரடங்கு நாள்களிலேயே, சீனாவை வெளியேற்றுவதற்காக நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்புகளை மேம்படுத்துமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். அதனாலேயே, பரிசோதனைகள் வேகம்பெற்றிருக்கின்றன. இந்தச் சோதனை முயற்சிகளை, சீனாவுக்குச் சொல்லும் செய்தியாகப் பார்க்கிறார்கள் வல்லுநர்கள். `எல்லா வகையிலும் இந்தியா, தன் எல்லையைப் பாதுகாக்கத் தயாராக இருப்பதாக சீனாவுக்கு இதன் மூலம் செய்தி சொல்கிறது’ என்கிறார்கள் அவர்கள்.

மேலும், விரைவில் பரிசோதிக்கவிருக்கும் நிர்பய் ஏவுகணை, லடாக்கின் மலைப் பகுதிகளுக்கு மிகுந்த பலனளிக்கும் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. அதேபோல, சவுரியா ஏவுகணை சுமார் 200 கிலோ வரையிலான அணு ஆயுதங்களைச் சுமந்து, விநாடிக்கு 2.4 கி.மீ வேகத்தில் பறக்கும் திறன்கொண்டது. இதுவரை நடந்திருக்கும் பரிசோதனைகளில் பிரமோஸ் (BrahMos) ஏவுகணை, சவுரியா சூப்பர்சோனிக் ஏவுகணை, நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணை, பிரித்வி-2 போன்ற ஏவுகணைகள் முக்கியமானவை. இந்த ஏவுகணைகளைப் படைகளில் சேர்க்க மத்திய அரசும் அனுமதி வழங்கியிருக்கிறது

ஏவுகணை

சமீபத்தில் நடைபெற்ற குவாட் மாநாட்டில் இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்க்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேசினார்கள். இந்தச் சந்திப்பின்போதும் சீனா குறித்துத்தான் விவாதிக்கப்பட்டது. சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்கா இந்த நாடுகளுக்கு உதவும் என அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: `எல்லை கோடு அருகே 60,000 சீன ராணுவ வீரர்கள்!’- அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்



source https://www.vikatan.com/news/general-news/india-tests-10-missiles-in-35-days-amid-of-border-issue-with-china

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக