அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு பட்டமளிப்பு விழா குறித்த சர்ச்சை பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. சர்ச்சையில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும், `என் மீது தப்பு இல்லை இவர்தான் காரணம்’ என இன்னொருவரை நோக்கிக் கை காட்டி வரும் நிலையில், சர்ச்சையின் தொடக்கப்புள்ளி யார்? பட்டமளிப்பு விழாவை நடத்திய ஹரிஷ் அவ்வளவு கச்சிதமாக அனைவரையும் ஏமாற்றி விட்டாரா? என்ற கேள்விகளுக்கு விடை தேடிப் பயணித்தோம்.
சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை அமைப்பு சார்பில் கடந்த 26-ம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்பட்ட கௌரவ டாக்டர் பட்டமளிப்பு விழா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு, சின்னத்திரை பிரபலம் ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்களான 'பரிதாபங்கள் கோபி', சுதாகர் உள்ளிட்டோருக்கு கெளரவ டாக்டர் பட்டத்தை ஒய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் வழங்கினார். விழாவுக்கான அழைப்பிதழில் இந்திய அரசின் முத்திரை அச்சிடப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் பெயர் இருந்ததால், எங்கள் டீனும் கடிதத்தைப் பார்த்தவுடன் அனுமதி வழங்கிவிட்டார். வள்ளிநாயகம் வருவதாக எங்களிடம் சொன்னதால் நாங்கள் இடம் கொடுத்திருக்கிறோம். காவல்துறையில் இது குறித்து புகாரளித்திருக்கிறோம். அண்ணா பல்கலைக்கழகம் புனிதமான இடம். அதிலும் விவேகானந்தா அரங்கம் பழைமைவாய்ந்த, பெருமையான அரங்கம். இந்த அரங்கத்தில் வைத்து இப்படி ஒரு தவறான செயல் நடந்ததற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்" என்றார்.
ஓய்வுபெற்ற நீதியரசர் வள்ளிநாயகம், ``இந்த நிகழ்ச்சிக்காக அனுமதி கேட்டு நான் கையெழுத்து போடவில்லை. உண்மையாகவே எனக்கு என்ன நடந்தது என்பது தெரியாது. நான் ஒரு சிறப்பு விருந்தினராக மட்டுமே பங்கேற்றேன். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்ததால் நான் நிகழ்வில் பங்கேற்றேன்" என்று விளக்கமளித்திருக்கும் நிலையில் விழா அமைப்பாளர்களின் மொபைல் போன்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கின்றன.
இது தொடர்பாக நிகழ்வில் கலந்து கொண்டு பட்டம் பெற்ற பிரபலங்களிடம் பேசினோம்.
``என்னடா எல்லாரும் கூப்பிட்டாங்க. நம்ம விகடன்ல இருந்து யாரும் கூப்பிடலயேன்னு நினைச்சேன்.." என கலகலப்பாக தொடங்கினார் ஈரோடு மகேஷ், "வடிவேலு சார் சொல்லுவார்ல. காக்கா இம்புட்டுக்காண்டு எச்சம் விட்டதுக்காக டீக்கடையையே கொளுத்திட்டீங்கலேன்னு.., அந்த மாதிரி ஒரு டாக்டர் பட்டத்த வாங்கப் போய் நாங்க ரொம்ப பட்டுட்டோம் தலைவா. விழா ஏற்பாட்டாளர் ஹரீஷ் நிகழ்வுக்கு ஒரு 15 நாள் முன்னாடி ஃபோன் பண்ணினார். வாட்ஸ்அப்-ல அவரோட PROFILE-ஐ அனுப்பினார். பல முக்கிய ஆளுமைகளுக்கு விருது கொடுத்த புகைப்படங்கள் அதில் இருந்தது. அதனால் நிகழ்வுக்கு ஒப்புக் கொண்டேன். மேலும், நீதியரசர் வள்ளி நாயகம் விருது கொடுக்கிறார்னு சொல்லும் போது நமக்கே ஒரு பெருமையான ஃபீல் வரும்ல. அதனாலதான் விழாவுக்கு போனேன். ஏதோ தப்பா பட்டதால இதை சமூக வலைதளங்கள் எதுலயும் பகிர்ந்துக்கல. இப்ப இந்த பட்டம் போலின்னு தெரியுது. இதனால எனக்கு பெருமையும் இல்ல. சிறுமையும் இல்ல. ஆனா அவிங்கள மட்டும் சும்மா விடக் கூடாது தலைவா..," என்றார்.
"சார், வைகாசி பொறந்தாச்சு படம் வந்தப்பவே எனக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வந்தாங்க.., இவன் அப்படி என்ன சாதிச்சுட்டான்னு டாக்டர் பட்டம் கொடுக்குறீங்கன்னு எங்க அப்பா விரட்டி விட்டார். அப்புறம் தான் தெரிஞ்சது. அது விஜிபி, கோல்டன் பீச்ல சுத்திட்ருக்குற வெள்ளைக்காரங்கள செட் பிராப்பர்ட்டியா கூட்டி வந்து, 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தா டாக்டர் பட்டம் கொடுக்குற குரூப்புன்னு..," ரகளையான ஃபிளாஷ்பேக்குடன் தொடங்கினார் இசையமைப்பாளர் தேவா. "நான் இயல் இசை மன்றத்தின் தலைவரா இருந்தப்ப ஒரு சம்பவம் நடந்துச்சு. அப்ப உள்ள விலைவாசிக்கு டாக்டர் பட்டத்தோட ரேட்டு.., 40 ஆயிரம் ரூபா... அதுவும் எப்படி தெரியுமா?
ஒருத்தருக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு டாக்டர் பட்டம் கொடுத்துட்டு, கொஞ்ச நாள் கழிச்சு அவருக்கு ஃபோன் பண்ணி சார் உங்க திறமைக்கு நாங்க காசு வாங்கி இருக்கக் கூடாதுன்னு சொல்லிட்டு, நீங்க ஒரு மூணு பேரை எங்க கிட்ட கொண்டு வாங்க. உங்ககிட்ட வாங்குன 40 ஆயிரத்த கொடுத்துகுறோம்னு MLM மாதிரி ஏஜெண்ட் புடிச்சு டாக்டர் பட்டம் கொடுத்துகிட்டு இருந்தாங்க. எனக்கு சத்தியபாமா பல்கலைக்கழகம் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இருந்தெல்லாம் இதற்கு முன்னரே டாக்டர் பட்டம் கொடுத்துருக்காங்க. ஆனா நான் அதை எங்கையும் பயன்படுத்தியதில்லை. கௌரவ டாக்டர் பட்டம் தொடர்பா இவ்வளவு அனுபவம் இருந்தும், நான் நிகழ்வுக்கு போனதுக்கு ஒரே காரணம் ஓய்வு பெற்ற நீதியரசர் வள்ளிநாயகம் தான்.
நிகழ்ச்சிக்குப் போனதும் பின்னாடி திரும்பி பார்த்தா ஒன்னு கூட தெரிஞ்ச முகமா இல்ல... பூரா ஜோசியக்காரங்க, ரியல் எஸ்டேட் அதிபர்களா இருந்தாங்க. அப்பவே ஏதோ ஒண்ணு தப்பா பட்டுச்சு. இதெல்லாம் விட பெரிய கொடுமை என்ன தெரியுமா சார். விழா மேடையில இந்த ஹரிஷ் இருக்காப்லயே, "ஒரு வேளை நீங்க யாராவது லஞ்சம் வாங்குறதோ இல்ல இந்த பட்டத்த வச்சி மோசடி ஏதாவது செய்றதோ எங்களுக்கு தெரிஞ்சா, உங்களுக்கு கொடுத்த டாக்டர் பட்டத்தை திரும்ப வாங்கிக்குவோம்" அப்படின்னு சொன்னார் பாருங்க. அத நினைச்சு நினைச்சு சிரிக்கிறேன் சார். எனக்கு டிவி பார்த்துதான் இந்த விஷயமே தெரியும் உடனே ஹரிஷ்க்கு ஃபோன் செய்தேன். `சார் நான் நீதியரசர் வள்ளி நாயகம் வீட்டிலதான் சார் இருக்கேன். என் மேல அபாண்டமா ஊடகங்கள் பொய் சொல்லுது சார்’ என்றார். நான் என்ன சொல்றது.., தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்" எனக் கூறினார்.
ஓய்வு பெற்ற நீதியரசர் வள்ளி நாயகத்திடமிருந்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நிகழ்வுக்கு இடம் கேட்டு அனுப்பப்பட்ட கடிதம்தான் இந்த விவகாரத்தின் தொடக்கப்புள்ளி.
அது தன்னுடைய லெட்டர்ஹெட் இல்லை. தன் கையெழுத்து இல்லை என மறுத்து வரும் ஓய்வு பெற்ற நீதியரசர் வள்ளிநாயகத்திடம் பேசினோம், முதலில் ஹரிஷ் உங்களை எப்படி தொடர்பு கொண்டார் என்ற கேள்விக்கு, "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்னை தொடர்பு கொண்டு சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நடக்கும் விருது வழங்கும் விழாவுக்காக அழைப்பு விடுத்தனர். நானும் கலந்து கொண்டேன். அதற்குப் பிறகு அண்மையில் நடந்த இந்த பட்டமளிப்பு விழாவுக்காக அழைத்தனர்" என்றார்.
ஓய்வு பெற்ற நீதியரசரான தங்களுக்கு மனித உரிமை அமைப்பை தனியார் ஒருவர் நடத்தக் கூடாது என்பதும், பல்கலைக்கழகமாக இல்லாத ஒரு அமைப்பு எப்படி பட்டமளிக்கலாம் என்ற எளிமையான கேள்வி எழவில்லையா? என்று கேட்டோம்.
"முதலில், அவர்கள் என்னிடம் ஊழலுக்கு எதிரான இயக்கம் என்றுதான் அறிமுகமானார்கள். அதனால் தான் 2 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டேன். அதற்குப் பின் என்னை இந்த நிகழ்ச்சிக்காகத்தான் அழைத்தனர். செல்லும் ஒவ்வொரு விழாவிலும் அதை நடத்துபவர்களின் பின்னணி குறித்து என்னால் ஆய்வு செய்ய முடியாது. மேலும் வெளிநாடுகளில் செயல்படும் 'உலக தமிழ் பல்கலைக்கழகம்' என்ற பெயரில் எல்லாம் இதற்கு முன்னால் விருது கொடுத்திருக்கிறார்கள். அந்த பல்கலைக்கழகம் எங்கே இருக்கிறது என்று யாருக்காவது தெரியுமா?. அவர்கள் மத்திய அரசின் லஞ்ச ஒழிப்பு துறையின் கீழ் பதிவு செய்திருந்த BY LAW-வை கையில் வைத்திருந்தனர். அதில் அரசு முத்திரை இருந்தது. ஒரு வேளை அவர்கள் தனியார் தொண்டு நிறுவனம் என்ற பிரிவில் தங்கள் அமைப்பை பதிவு செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இது தொடர்பாக மாம்பலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்" என்றார்.
யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர் போன்றவர்களுக்கு விருதளித்தது குறித்து கேட்கும் போது, "அது இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் சொன்ன தனியார் விருது நிகழ்வில் கொடுத்தது" என்றார். விருது விழா என்றுதானே சொன்னீர்கள். ஆனால், பட்டமளிப்பு விழா போல் உள்ளதே என்ற கேள்விக்கு, "முதலில் என்னை பேச சொல்லித் தான் அழைத்தார்கள். பின் விருது கொடுக்க வைத்தார்கள். மேடையில் இருந்து கீழே இறங்கினால் தவறாக இருக்கும் என்பதால் அவர்கள் சொன்னது போல் செய்தேன். அது விருதா டாக்டர் பட்டமா என்பது எல்லாம் எனக்கு நியாபகம் இல்லை" என்றார்.
விருது கொடுத்த அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான, www.iachrc.com, புகாரையடுத்து முடக்கப்பட்டுள்ளது. இது தவிர இன்னொரு இணையதளத்திலும் இவர்கள் இயங்கி வந்தனர். அந்த இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் நிறுவன சட்டம் 2013ன் படி 2021ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களது பதிவு குறித்த விவரத்தில் தங்களது நிறுவனத்திற்கு நிதி எப்படித் திரட்டப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ள முறைதான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதின் மூலம் நிதி திரட்டப்படும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மனித உரிமைகள் என்ற வார்த்தையை அரசு சாரா தொண்டு நிறுவனம் தனது பெயரில் பயன்படுத்தக் கூடாது எனச் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை 2011-ம் ஆண்டு கூறியுள்ளது.
மேலும், மனித உரிமைகள் என்ற பெயரைத் தனியார் அமைப்புகள் பயன்படுத்தினாலோ, வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டினாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.
லஞ்ச ஒழிப்பு என்பதை ஊழல் தடுப்பு என்று இவர்கள் போட்டுக் கொள்வது ஏன்? சர்வதேச அமைப்பு என்று கூறிக் கொள்ளும் இவர்கள் வேறு எந்த நாடுகளில் தங்கள் அலுவலகங்களை வைத்திருக்கிறார்கள்? வெறும் தன்னார்வ அமைப்பாக பதிவு செய்து கொண்டு இவர்கள் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முடியுமா? என பல கேள்விகள் எழுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் ராகவா லாரன்ஸ், இசையமைப்பாளர் டி.இமான், நடிகர் யோகி பாபு,குக் வித் கோமாளி புகழ் செஃப் தாமு உட்பட பல பேருக்கு இந்த அமைப்பு கௌரவ டாக்டர் பட்டங்களை வாரி வழங்கியிருப்பதாகவும், பிரபலங்கள் மூலமாக மேலும் சில பிரபலங்களிடம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு பலருக்கு பட்டம் அளித்திருப்பதாகவும், இதற்காக பட்டம் பெறுபவர்களிடம் பணம் பெற்றுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த அமைப்பு பட்டங்களை வழங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது எல்லாவற்றுக்கும் மேலாக அண்ணா பல்கலைக்கழக டீன் வசந்தி இதற்கு எப்படி அனுமதி கொடுத்தார். ஓய்வு பெற்ற நீதியரசரின் கையெழுத்து இருந்தால் என்ன மாதிரியான நிகழ்ச்சி என்று கூட கேட்காமல் அனுமதி கொடுத்து விடுவார்களா? இந்த கேள்விகளுக்கு அண்ணா பல்கலைக்கழக தரப்பில் தெளிவான பதில் இல்லை.
இந்த நிலையில் இந்த விழா ஏற்பாட்டாளரான ஹரிஷ், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தான் முறைப்படி மத்திய அரசில் தன் அமைப்பை பதிவு செய்துள்ளதாகவும்(CERTIFICATE OF INCORPORATION) அதன்படி, கௌரவ டாக்டர் பட்டம் வழங்கலாம் என மத்திய அரசு தங்கள் அமைப்பிற்கு அனுமதி அளித்துள்ளதாகவும், பட்டம் பெற்றவர்கள் யாரும் பதட்டப்படத் தேவை இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் தன் மீது எழுந்துள்ள புகார்களை சட்ட நிபுணர்களின் உதவியோடு எதிர்கொள்ள உள்ளதாகவும் ஹரிஷ் தெரிவித்துள்ளார்.
இது ஒரு புறமிருக்க, காவல்துறையினர் legal opinion கேட்டுள்ளனர். இன்னும் நடவடிக்கை தொடங்கவில்லை. முதல் தகவலறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை. சான்றிதழ் மற்றும் அங்கீகாரம் தொடர்பான புகார் என்பதால் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி விடவே வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.!
source https://www.vikatan.com/crime/full-detail-on-controversy-over-doctorate-event-happened-in-anna-university
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக