Ad

சனி, 10 அக்டோபர், 2020

தொழில்முனைவோர்கள் செய்யக்கூடாத விஷயங்கள் என்ன? - வழிகாட்டிய முன்னோடிகள் #TiECONChennai

ஜிஆர்டி குழுமத்தின் நிர்வாக இயக்குநர்கள் ஜி.ஆர்.அனந்த பத்மநாபன் மற்றும் ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இவர்களுடன் கார் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைவர் மாறன் நாகராஜன் உரையாடினார்.

ஜி.ஆர்.டி குழுமம் ஜூவல்லரி, ஹோட்டல், சோலார் எனப் பலதுறைகளில் செயல்பட்டு வருகிறது. தொழில்முனைவோர்கள் பல துறைகளில் களம் இறங்கலாமா என்னும் கேள்வியில் இருந்து உரையாடலைத் தொடங்கினார். இதற்கு, ``பல துறைகளில் களம் இறங்குவது தவறில்லை. ஒரே இடத்தில் அனைத்து முதலீடும் இருக்கக் கூடாது என்பது சரிதான். ஆனால், அதற்கு முன்பாக உங்களது தாய் நிறுவனம் சிறப்பாகச் செயல்பட வேண்டும். உதாரணத்துக்கு ஜி.ஆர்.டி ஜுவல்லரி சிறப்பாகச் செயலபட்டால்தான் அடுத்தகட்ட நடவடிக்கையை நாங்கள் எடுக்க முடியும். அதேபோல பிற தொழில் விரிவாக்கத்துக்கு அதிக கடன் வாங்கக் கூடாது. குறைந்தபட்சம் 70 முதல் 80 சதவீதம் வரை சொந்த முதலீடு இருந்தால் மட்டுமே விரிவாக்கம் செய்ய வேண்டும். இல்லை எனில் புதிய தொழில் எப்படி இருக்கும் எனத் தெரியாது. அதனால் வட்டி கட்டுவதிலே நேரம் வீணாகும்." என்றனர்.

அடுத்ததாக பயிற்சி குறித்த கேள்வியை மாறன் கேட்டார். ``பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் பயிற்சி என்பது முக்கியமானது. கிரிக்கெட்டில் ஒருவர் கேட்ச் விட்டாலும் டீம்தான் தோற்கும். அதனால் ஒவ்வொரு பிரிவுக்கும் பயிற்சி அளிப்பதை முக்கிய இலக்காக வைத்திருக்கிறோம். எங்களிடம் அடிப்படை ஊழியர்களாகச் சேர்ந்த சிலர் இன்று பொதுமேலாளராக உள்ளனர். 1,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அவருக்கு கீழே பணிபுரிகின்றனர்." என பதில் அளித்தனர்.

``நீங்கள் இருவரும் சகோதரர்கள்? நிறுவனத்தை எப்படி நடத்துகிறீர்கள்?" என்னும் கேள்விக்கு, ``நாங்கள் சகோதரர்கள். ஆனால், நிறுவனத்துக்குள் நாங்கள் இருவரும் பங்குதாரர்கள். நான் சில விஷயங்களைப் பார்த்துக்கொள்கிறேன். தம்பி சில விஷயங்களைப் பார்த்துக்கொள்கிறார். பெரும்பாலும் கருத்து வேறுபாடு வராது. ஒருவேளை வந்தால் அப்பாவிடம் செல்வோம். அப்பா சொல்வதே இறுதியான முடிவு.

GRT

இதுபோன்ற சமயங்களில் பல தொழில்முனைவோர்களுக்கு நாங்கள் சொல்வது இதுதான். நீங்கள் படிப்படியாக உயரும்போது உங்கள் தவறுகளை யாரும் சுட்டிக்காட்ட மாட்டார்கள். அப்படியானால் நீங்கள் உயர உயர பணிவைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதே சமயத்தில் உங்கள் கருத்துகளை எதிர்த்து உங்களுக்கு ஆலோசனை சொல்லும் நபர்களை அருகில் வைத்துக்கொள்ள வேண்டும்" என்றார் ஜி.ஆர்.அனந்த பத்மநாபன்.

தொழில்நுட்பம் குறித்து பேசும்போது, ``நாங்கள் ரீடெய்ல் துறையில் இருக்கிறோம். முடிந்தவரையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். உதாரணத்துக்கு லைவ் டிவி என்னும் ஆப்ஷன் எங்களிடம் உள்ளது. எங்களிடம் 50 கடைகள் உள்ளன. ஆனால், இந்த அனைத்து கடைகளும் ஒரே அளவு கிடையாது. உதாரணத்துக்கு திருப்பதியில் உள்ள வாடிக்கையாளர்கள் ஒரு நெக்லஸ் எடுக்க வருகிறார். திருப்பதியில் உள்ள டிசைன் போதுமானதாக இல்லை. அதனால் லைவ் டிவி ஆப்ஷன் மூலம் தி.நகரில் உள்ள கடையில் அனைத்து வாய்ப்புகளையும் நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்கிறோம். இதுபோல முடிந்தவரை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம்." என்றனர்.

இறுதியாகத் தொழில்முனைவோர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன என்னும் கேள்விக்கு, ``Create Surplus" எனப் பதில் அளித்தார் அனந்தபத்மநாபன். நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்முனைவோர்களின் பங்கு முக்கியமானது. தொழில்முனைவோர்கள் அதிக பணம் சம்பாதித்தால்தான் மற்றவர்களுக்கு கொடுக்க முடியும். நம்முடைய செலவுதான் மற்றவர்களுக்கு வருமானம். இதுபோல ஒவ்வொருவரும் மற்றவர்களைச் சார்ந்துதான் இருக்க வேண்டும். இதற்கு தொழில் முனைவோர்கள் அதிக நிதியை உருவாக்கி வைத்திருப்பது அவசியம். இப்போதைக்கு 7,500 நபர்கள் எங்கள் குழுமத்தில் பணியாற்றுகிறார்கள். இதனை ஒரு லட்சம் பணியாளர்கள் என்னும் இலக்குடன் நாங்கள் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம் என ஜி.ஆர்.டி சகோதரர்கள் தெரிவித்தனர்.

மாநாட்டின் இறுதிநாளில் மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் வி.கே.டி பாலன், `யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்னும் தலைப்பில் உரையாற்றினார். அவர் பேசும்போது, ``சிக்கல்கள், சோதனைகள், சவால்களைச் சந்திக்க பயப்படுபவர்கள் தொழில்முனைவோராக மட்டுமல்ல; வேலைக்கே தகுதியானவர்கள் அல்லர். சவால்களைக் கடந்தால்தான் அடுத்தகட்டத்துக்குச் செல்ல முடியும். எனக்கு கிடைத்த 2 ரூபாய் ஊதியத்தில்தான் இந்த நிறுவனத்தை உருவாக்கினேன். எனக்கும் தோல்வி வரும். ஆனால், எப்போது என்னிடம் இருக்கும் இரண்டு ரூபாயும் காணாமல் போகுமோ அப்போதுதான் தோல்வி என ஒப்புக்கொள்வேன். அதுவரை நான் போராடிக்கொண்டே இருப்பேன்.

Representational Image

என்னுடைய ஆரம்பகாலகட்டத்தில் சில ஆண்டுகள் எந்த பிரச்னையும் இல்லாமல் அனைத்தும் சரியாக நடந்துகொண்டு இருக்கும். அப்போது எனக்கு உருவாகும் கவலையே `என்ன எந்த சிக்கலும் இல்லாமல் சீராக இருக்கிறதே’ என நினைப்பேன். காரணம் சிக்கல்கள்தான் நம்மை விழிப்புடன் வைத்திருக்கின்றன.

தற்போதைய சூழலில் அனைவருக்கும் ஒருவித பயம் இருக்கிறது. 1918-ம் ஆண்டு ஸ்பானிஷ் காய்ச்சல் வந்தபோது 5 கோடி நபர்கள் மரணம் அடைந்தனர். ஆனால், தற்போதைய மருத்துவ முன்னேற்றங்களால் 10 லட்சம் நபர்கள் மரணம் அடைந்திருக்கின்றனர். ஒவ்வொரு மரணமும் ஏற்றுக்கொள்ள முடியாததுதான். ஆனால், அதற்காக எந்த வேலையும் செய்யாமல் எப்படி இருக்க முடியும். கொரானாவால் மரணம் அடைவது போல பசி, நிதி நெருக்கடியால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. அதனால் உழைத்தால் மட்டுமே உணவு கிடைக்கும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்" எனக் கூறினார்.

இறுதியாக மேலா வென்ச்சர்ஸ் நிறுவனர் (மற்றும் மைண்ட்ட்ரீயின் நிறுவனர்) கிருஷ்ணகுமார் நடராஜனுடன் டை சென்னை தலைவர் சி.கே.ரங்கநாதன் உரையாற்றினார்.

நிறுவனத்தின் கலாசாரம் குறித்த உரையாடலில் கிருஷ்ணகுமார் கூறியதாவது: ``நிறுவனத்தின் கலாசாரத்தை ஆரம்பத்தில் இருந்து உருவாக்க வேண்டும். பணியாளர்களின் சாதனையைத் தொடர்ந்து கவனித்து ஊக்குவித்து அங்கீகரிக்கும்பட்சத்தில் பரஸ்பர மரியாதை உருவாகும். நிறுவனத்தில் வெளிப்படைத்தன்மை உருவாகும். மைண்ட்ட்ரீ நிறுவனத்தில் முதல் 500 நபர்களில் 5 சதவீத நபர்கள்கூட நிறுவனத்தில் இருந்து வெளியேறி இருக்க மாட்டார்கள்" எனக் கிருஷ்ணகுமார் கூறினார்.

இப்படி, இன்றைய தொழில்முனைவோர்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை, அவர்கள் செய்யக்கூடாதவை எனப் பல விஷயங்களுக்கு விளக்கம் தரும்விதமாக டைகான் அமைந்திருந்தது. இந்த நிகழ்வில் பேசப்பட்ட இன்னும் சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள தகவல்களுக்கு நாணயம் விகடனில் வெளியாகியுள்ள கட்டுரையைப் படியுங்கள். கட்டுரையைப் படிக்க இங்கே க்ளிக் செய்க.



source https://www.vikatan.com/business/news/entrepreneurship-lessons-shared-by-industry-veterans-in-tiecon-chennai-conference

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக