Ad

திங்கள், 20 ஜூலை, 2020

மைக்கேல் பெவன்... இந்த ஆங்கர்தான் அம்மாம்பெரிய ஆஸ்திரேலியாவையே தாங்குச்சு! அண்டர் ஆர்ம்ஸ் - 7

செந்தில், குணா, வேலு, சந்திரா... இவங்க எல்லோரையும் அன்பு வாழ்க்கையோட இணைக்கிறது ராஜன்தான்ற மாதிரி... மார்க் வாக், ஸ்டீவ் வாக், ரிக்கி பான்ட்டிங், மார்க் டெய்லர் என 90'ஸின் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியையும் வெற்றியோடு இணைத்தவர் மைக்கேல் பெவன். கிரிக்கெட் உலகம் பார்த்து, ரசித்து, வியந்த முதல் ஃபினிஷர். ஆஸ்திரேலியாவின் ஆட்டம் அவ்வளவுதான்... எல்லாம் முடிந்தது என எதிரணியினர் மட்டுமல்ல ரசிகர்களும் நினைக்கும்போது களத்துக்கு வருவார் மைக்கேல் பெவன். எப்போது வந்தார், எப்படி இவ்வளவு ரன்கள் அடித்தார் என்றே தெரியாத அளவுக்கு திடீரெனப் பார்த்தால் பேட்டை உயர்த்துவார். 55 அல்லது 58 பந்துகளில் அரை சதம் அடித்திருப்பார். மார்க் வாக், மைக்கேல் கில்கிறிஸ்ட், ரிக்கி பான்ட்டிங் என நீங்கள் யாரை வேண்டுமானாலும் அவுட் ஆக்கலாம். ஆனால், மைக்கேல் பெவனை அவுட் ஆக்கும்வரை அந்த மேட்ச் முடியவில்லை என்றுதான் அர்த்தம். பிற வீரர்கள் ரன் எடுக்க முடியாமல் திணறிய பிட்ச்களில் எல்லாம் இவர் ஆடிய ஆங்கர் இன்னிங்ஸால்தான் வெற்றிபெற்றிருக்கிறது ஆஸ்திரேலியா. தோல்வியின் விளம்புக்கு போன பல மேட்ச்களில் இருந்து ஆஸ்திரேலியாவை மீட்டவர் மைக்கேல் பெவன். 90'ஸின் கிரிக்கெட் ரசிகர்கள் ஒவ்வொருவருக்குள்ளுமே மைக்கேல் பெவன் பற்றி சொல்ல பல கதைகள் இருக்கும். இன்றைக்கும் கிரிக்கெட் வீரனாகத்துடிக்கும் ஒவ்வொருவருக்குமே மிகப்பெரிய ரோல்மாடல் மைக்கேல் பெவன்.

கால்குலேட்டட் ரிஸ்க் என்பதை கிரிக்கெட்டர்களுக்கு கற்றுக்கொடுத்தவர். கடைசி 10 ஓவர்களில் வெற்றிக்கு 100 ரன்கள் தேவை என வைத்துக்கொள்வோம். ஒரு சராசரி பேட்ஸ்மேன் களத்தில் நின்றால் `ஓவருக்கு ஒரு சிக்ஸர் - 1 பவுண்டரி, அல்லது இரண்டு பவுண்டரி - 2 ரன்... எப்படியும் ஒரு ஓவரில் இரண்டு லூஸ் பால்கள் வரும் அதை பவுண்டரி அல்லது சிக்ஸர் ஆக்கலாம். 10 ரன் அடித்துவிடலாம்' என்றுதான் கணக்குப்போடுவார். ஆனால், மைக்கேல் பெவன் இந்த சராசரிகளில் ஒருவர் அல்ல. ஒவ்வொரு பந்திலும் இரண்டு இரண்டு ரன்கள் அடித்தால் 5வது பந்திலேயே 10 ரன்னைத்தொட்டுவிடலாம் என்பதுதான் மைக்கேல் பெவனின் கணக்காக இருக்கும். இப்படித்தான் பலவெற்றிகளைப் பெற்றுத்தந்திருக்கிறார் பெவன். சிக்ஸர்கள், பவுண்டரிகள் எல்லாம் இவரின் இன்னிங்ஸில் பெரிதாக இருக்காது. சென்சுரி அடித்திருப்பார். ஆனால், அவரின் ஸ்கோர் கார்டைப் பார்த்தால் அதிகபட்சம் 8-10 பவுண்டரி, எப்போதாவது ஒரு சிக்ஸர் என இருக்கும். ஒரே இன்னிங்ஸில் 2 சிக்ஸர்களுக்கு மேல் எல்லாம் அவர் அடித்து யாரும் பார்த்திருக்கமுடியாது. எல்லாமே சிங்கிள்ஸ், டபுள்ஸ்தான். மூச்சிரைக்க ஓடி ஓடி ரன்கள் எடுப்பதுதான் பெவனுக்குப் பிடிக்கும்.

Michael Bevan

ஆஸ்திரேலிய அணிக்குள் 1994-ல் உள்ளே வந்தவர் பெவன். யார் இடத்தை நிரப்புவதற்காக அணிக்குள் வந்தவர் தெரியுமா? ஆலன் பார்டர் ஓய்வுபெற அவர் இடத்துக்கு வந்தவர்தான் பெவன். இடது கை பேட்ஸ்மேன். மூன்றாவது டவுன் அல்லது நான்காவது டவுனில் இறங்குவார். பேட்டிங் ஆல் ரவுண்டர். எப்போதாவது பெளலிங்கும் போடுவார், விக்கெட்டுகளும் விழும்.

முதன்முதலில் மைக்கேல் பெவன் என்கிற பெயர் கிரிக்கெட் உலகில் பிரபலமானது 1996 ஜனவரி 1 அன்றுதான். அந்த புத்தாண்டின் முதல் நாளில்தான் மைக்கேல் பெவன் ஸ்டாராக உதயமானார். சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அந்தப்போட்டி மழையின் காரணமாக 43 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடந்தது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸின் ஸ்கோர் 173. ஆனால், மழையின் காரணமாக இந்த ரன்களை அடிக்கவே ஆஸ்திரேலியா திணறியது. மைக்கேல் ஸ்லேட்டர், மார்க் வாக், மார்க் டெய்லர், ரிக்கி பான்ட்டிங், ஸ்டூவர்ட் லா, ஷேன் லீ, இயான் ஹீலீ என இந்த 7 பேட்ஸ்மேன்களும் சேர்ந்து அடித்தது 48 ரன்கள்தான். 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றிக்கு இன்னும் 100 ரன்கள் தேவை என்கிற நிலையில் இருக்கும் ஆஸ்திரேலியா. பால் ரீஃபலுடன் பார்ட்னர்ஷிப் போட்டு ஆஸ்திரேலியாவுக்கான தனது முதல் ஆங்கர் இன்னிங்ஸை ஆடியிருப்பார் மைக்கேல் பெவன். 89 பந்துகளில் 78 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் நிற்பார். ஆஸ்திரேலியா வெற்றிபெறும். இந்தப் போட்டி இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடனான வேர்ல்டு சீரிஸ் தொடரில்தான் நடந்தது. இதில் 10 போட்டிகளில் 8 போட்டிகளில் நாட் அவுட் பேட்ஸ்மேன் மைக்கேல் பெவன். 3 அரை சதங்கள். இந்தத்தொடரில் மைக்கேல் பெவனின் பேட்டிங் ஆவரேஜ் கிட்டத்தட்ட 200. பெளலிங்கிலும் 5 விக்கெட்டுகள் என மைக்கேல் பெவனின் எழுச்சி இந்த வேர்ல்டு சீரிஸ் தொடரில் இருந்துதான் தொடங்கியது.

1997-ல் தென்னாப்பிரிக்காவின் சென்சூரியனில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடித்த சென்சுரிதான் மைக்கேல் பெவனின் முதல் சதம். தென்னாப்பிரிக்காவின் டார்கெட்டான 284 ரன்களை ஸ்டீவ் வாகுடன் இணைந்து சேஸ் செய்திருப்பார் பெவன். 95 பந்துகளில் 103 ரன்கள் அடித்து ஆஸ்திரேலியாவை வெற்றிபெறவைத்திருப்பார்.

Michael Bevan Andy Flower

இந்தியாவுக்கு எதிராக பல முக்கியமான இன்னிஸ்கள் ஆடியிருக்கிறார் பெவன். சச்சின் டெண்டுல்கரின் கரியரில் மிக முக்கியமான இன்னிங்ஸான டெஸர்ட் ஸ்டார்ம் போட்டியில் சதம் அடித்தவர் மைக்கேல் பெவன். ஆரம்பத்தில் 87 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்துவிடும். பயமுறுத்திகொண்டிருந்த பான்ட்டிங்கும், டேமியன் மார்ட்டினும் அவுட் ஆகியிருப்பார்கள். ஆனால், பெவன் மட்டும் அப்படியே நங்கூரம்போல நின்றுவிடுவார். இந்தப்போட்டியில் கடைசி வரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக நின்று 103 பந்துகளில் 101 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை 284 ரன்களுக்குக் கொண்டுபோய்விடுவார் பெவன். இந்த ஸ்கோரால்தான் சச்சின் டெண்டுல்கர் அப்படி ஒரு ருத்ரதாண்டவ இன்னிங்ஸ் ஆடவேண்டிய நிலை உருவாகியிருக்கும்.

இதே போல் 2001-ல் கோவாவில் இந்தியாவின் 265 ரன்கள் டார்கெட்டை பெவன் கடைசிவரை களத்தில் நின்று முடித்துவைத்திருப்பார். இந்தப்போட்டியில் இவர் அடித்த 87 ரன்கள்தான் இந்தியாவின் வெற்றியைப் பறித்தது.

2002-ல் நியூஸிலாந்துக்கு எதிராக மெல்போர்னில் நடைபெற்ற போட்டியும் மைக்கேல் பெவனின் தரமான இன்னிங்ஸ்களில் ஒன்று. நியூஸிலாந்து ஆஸ்திரேலியாவுக்கு கொடுத்த டார்கெட் 245. இந்தப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே ஆஸ்திரேலியாவால் இறுதிப்போட்டிகளுக்குள் நுழையமுடியும் என்கிற சூழல். ஆனால், 82 ரன்களுக்குள் அத்தனை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களையும் ஆஸ்திரேலியா இழந்துவிடும். ஆனால், பெவன் மட்டும் களத்தில் நிற்பார். ஷேன் வார்னே, அடுத்து பிரட் லீ-யை துணைக்கு வைத்துக்கொண்டு அற்புதமான ஆட்டம் ஆடியிருப்பார் மைக்கேல் பெவன்.

22-வது ஓவரில் டெய்ல் எண்டரான ஷேன் வார்னேவுடன் பெவன் களத்தில் நிற்கும்போது 172 பந்துகளில் 164 ரன்கள் அடிக்கவேண்டும் என்பதுதான் டார்கெட். ஒருபக்கம் ரன்ரேட்டை பெவன் சமன்செய்துகொண்டேவர, அந்தப்பக்கம் ஷேன் வார்னே ஒவ்வொரு பந்தையும் மீட் செய்யமுடியாமல் திணறி டாட் பால் ஆக்குவார். கடைசியாக 54 பந்துகளில் 29 ரன்கள் அடித்து அவுட் ஆவார் வார்னே. அப்போது 81 பந்துகளில் 103 ரன்கள் டார்கெட்டாக இருக்கும். பிரட் லீ வருவார். ரிக்வயர்டு ரன்ரேட் இன்னும் உயரும். ஆனால், கொஞ்சம்கூட பதற்றம் இல்லாமல் பெரிய ஷாட்ஸ்களுக்கு பேராசைப்படாமல் ஃபீல்டர்களுக்கு இடையே மட்டும் பந்தை தட்டிவிட்டு டபுள், டபுள் ரன்களாக ஓடிக்கொண்டேயிருப்பர் பெவன்.

Michael Bevan

49-வது ஓவர். 12 பந்துகளில் 16 ரன்கள் டார்கெட். 92 ரன்களில் களத்தில் நிற்பார் பெவன். இந்த ஓவரின் முதல் 5 பந்துகளிலும் தொடர்ந்து இரண்டு, இரண்டு ரன்களாக ஓடி சென்சுரியும் அடித்து 10 ரன்கள் எடுப்பார் பெவன். மொத்தமாக மைக்கேல் பெவன் இந்த இன்னிங்ஸில் 95 பந்துகளில் 102 ரன்கள் அடித்திருப்பார். இதில் பவுண்டரிகளால் வந்தவை வெறும் 28 ரன்கள் மட்டுமே. மற்றவையெல்லாம் ஓடி ஓடி எடுத்த ரன்கள்தான்.

இப்போது பெஸ்ட் ஃபினிஷராகப் போற்றப்படும் மகேந்திர சிங் தோனிக்கு, மைக்கேல் பெவன்தான் இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்க முடியும். ஏனென்றால் தோனியின் ஆட்டத்தில் பெவனின் தாக்கத்தை உணரமுடியும். பெவனைப்போலவே கால்குலேட்டட் ரிஸ்க்தான் எடுப்பார் தோனி. இருவருக்குமே உள்ள ஒற்றுமை பதற்றப்படாமல் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பது. பவுண்டரிகளுக்கும், சிக்ஸர்களுக்கு மட்டுமே முயற்சி செய்யாமல் இரண்டு, இரண்டு ரன்களாக எடுப்பது.

எப்படி ஆட்டத்தின் கடைசி ஓவர் வரை பதற்றம் இல்லாமல் ஆடுகிறார் என்ற கேள்விக்கு பெவனே ஒருமுறை பதில் சொல்லியிருப்பார். ``எவ்வளவு சிறப்பாக ஆடினாலும் எப்படியும் ஒன்றிரண்டு போட்டிகளில் தோல்வி என்பது நிச்சயம் தவிர்க்க முடியாததாகத்தான் இருக்கும். அதனால் தோற்றாலும் ஒன்றுமில்லை என்கிற மனநிலையில்தான் எல்லா போட்டிகளிலுமே ஆடுவேன். எனக்குள் கூடுதல் பிரஷரை ஏற்படுத்திக்கொண்டதில்லை. அதனால் பதற்றம் வந்ததேயில்லை'' என்று சொல்லியிருக்கிறார் பெவன். தோனியின் ஸ்பெஷல் ஷாட்டான ஹெலிகாப்டர் ஷாட்டை 90'ஸில் அடித்துக்காட்டியவர் மைக்கேல் பெவன்தான்.

2003 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டே வரும். ஆனால், கடைசியில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவவேண்டிய சூழல் உருவாகும். சேஸிங்கில் 8 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில் வெற்றிக்கு இன்னும் 80 ரன்கள் தேவையிருக்கும். ஆண்டி பிக்கலோடு இணைந்து ஒன்பதாவது விக்கெட்டுக்கு 83 ரன்கள் பார்ட்னர்ஷிப்போட்டு ஆஸ்திரேலியாவை வெற்றிபெற வைத்திருப்பார் பெவன். இதில் பெவன் அடித்த ரன்கள் மட்டும் 74.

2003 உலகக் கோப்பையின்போது மைக்கேல் பெவனுக்கு 33 வயதுதான். ஆனால், சில போட்டிகளில் கன்சிஸ்டென்ட்டாக ஆடவில்லையென்று பெவனையே அணியில் இருந்து கழற்றிவிட்டது ஆஸ்திரேலிய அணி நிர்வாகம். மீண்டும் கம்பேக் கொடுத்தவரால் 2004-க்கு மேல் அணிக்குள் தாக்குப்பிடிக்கமுடியவில்லை. இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்திருக்கவேண்டியவர் ஆஸ்திரேலிய தேர்வாளர்களின் உக்கிர முடிவுகளால் வெளியேற்றப்பட்டார். அப்போதைய தேர்வாளர்கள் ஒன்றிரண்டு போட்டிகளில் சரியாக விளையாடவில்லையென்றால், அவர் பெரிய பிளேயராக இருந்தாலும் வெளியே அனுப்பினார்கள். அதில் பலிகடாவாக்கப்பட்டது மைக்கேல் பெவனின் கரியர்.

Also Read: ஜவகல் ஸ்ரீநாத்... கபில்தேவின் மாற்று, ஜாகிர்கானின் மென்டர்... ஆனால்?! அண்டர் ஆர்ம்ஸ் - 6

87 உலகக் கோப்பைக்குப் பிறகுதான் ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டிகளில் மிகப்பெரிய அணியாக உருவெடுத்தது. இதன் உருவாக்கத்தில் ஆலன் பார்டரின் பங்கு மிகப்பெரியது. அந்த ஆலன் பார்டரின் இடத்துக்கு வந்து 90'களில் ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கனவை நிறைவேற்றிக் கொடுத்தவர் மைக்கேல் பெவன். இன்றுவரை லோயர் மிடில் ஆர்டர் பேட்டிங்கிற்கு மைக்கேல் பெவனின் ஆட்டமே சிலபஸ். இவர் கரியரின் முதல் பாதி, அதாவது 2000-களின் தொடக்கம் வரை இவரது பேட்டிங் ஆவரேஜ் 60- ரன்களுக்கும் மேல். யாராலுமே நினைத்துப்பார்க்க முடியாத சாதனை.

சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, வக்கார், வாசிம், ஆம்புரோஸ், வால்ஷ் யுகத்தில், புதுப்பாணியில் ரன்களைத் திரட்டி, தனக்கென உலகம் முழுக்க தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய மைக்கேல் பெவனின் பெயர் எப்போதும் அழியாது!



source https://sports.vikatan.com/cricket/michael-bevan-the-best-finisher-in-the-cricket-history-under-arms-series-7

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக