Ad

ஞாயிறு, 9 மே, 2021

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்: 'சிங்கப்பூரில் வங்கியின் எம்.டி; தமிழக அரசின் கடனை சமாளிப்பாரா?!'

புதிதாக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு கொரோனா பெருந்தொற்றை ஒழிப்பதற்கான சவால் எந்தளவுக்கு இருக்கிறதோ, அதே மாதிரியான ஒரு சவால் நிதிச்சிக்கலிலும் இருக்கிறது.

பி.டி.ஆர்.தியாகராஜன்

தமிழக அரசின் கடன்சுமை ரூ. 5.70 லட்சம் கோடியாக இருக்கிறது. இதுபோக, தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பெயர்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் வாங்கப்பட்டிருக்கிறது. இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவது, அதற்கான வட்டியைச் செலுத்துவது என்பது தமிழக அரசுக்கு மிகப்பெரிய சவாலான ஒன்று. மேலும், தமிழக அரசின் வருவாய் என்பது பெட்ரோலியப் பொருள்கள் மற்றும் மது விற்பனை மூலமாகக் கிடைக்கும் வரி வருவாய் மட்டுமே. மற்ற அனைத்தும் ஜி.எஸ்.டி என்ற பெயரில் மத்திய அரசுக்குப் போய்விட்டது.

ஜி.எஸ்.டி-யை அமல்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசு ஈடுகட்டும் என்று மத்திய பா.ஜ.க அரசு உறுதிமொழி அளித்தது. அதன் அடிப்படையில்தான், ஜி.எஸ்.டி-யை அமல்படுத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு ஜி.எஸ்.டி-க்கு ஆதரவாக கையெழுத்திட்டது. ஆனால், மத்திய அரசு ஒப்புக்கொண்டபடி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத்தொகையை சரிவர வழங்கவில்லை.

இத்தகைய சூழலில், புதிதாக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முக்கியமான ஐந்து வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றுகிறது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், அந்த ஐந்துக்கும் கையெழுத்திட்டிருக்கிறார். இதனாலும் தமிழக அரசுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும்.

ஸ்டாலின்

இந்த நிலையில்தான், நிதியமைச்சராக மதுரை மத்தி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பொறுப்பேற்றிருக்கிறார். பல புதிய முகங்கள் அமைச்சரவையில் இடம்பெற்றபோதும், அதிக கவனம் பெற்ற அமைச்சர்களில் ஒருவராக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இருக்கிறார். ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் ஐந்து உத்தரவுகளில் கையெழுத்திடப்பட்டன. முதல் நான்கு கையெழுத்துகளை இட்டவர் முதல்வர் ஸ்டாலின். ஐந்தாவது கையெழுத்தை இட்டவர் நிதித்துறை அமைச்சரான பழனிவேல் தியாகராஜன். கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் அரசு காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக சிகிச்சை பெறலாம் என்பதற்கான கையெழுத்துதான் அது.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் முக்கியமான அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். நீதிக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வருமான பி.டி.ராஜனின் பேரன் இவர். இவரின் தந்தையான பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், 2006-ம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றார்.

மீனாட்சியம்மன் கோயில்

திருச்சி என்.ஐ.டி-யில் பொறியியல் பட்டம்பெற்ற பழனிவேல் தியாகராஜன், 1989-ம் ஆண்டு மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்றார். அங்கு, நியூயார்க் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டம்பெற்றார். பிறகு, அங்கு மிகப்பெரிய நிறுவனம் ஒன்றில் பணியிலும் சேர்ந்தார். தன் வகுப்பத் தோழியான அமெரிக்கப் பெண் மார்க்கரெட்டை மணம் முடித்தார். 2011-ல் சிங்கப்பூரில் அமைந்துள்ள ஒரு வங்கியில் உயர் அதிகாரியாகப் பணியாற்றினார். பிறகு, 2015-ம் ஆண்டு தாய்நாடு திரும்பிய அவர், 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மதுரை மத்தி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் செயல்படக்கூடிய ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். தன் செயல்பாடுகள் குறித்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரிப்போர்ட் கார்டு வெளியிட்டுவந்தார். தி.மு.க-வின் ஐ.டி பிரிவின் பொறுப்பாளராகவும் செயல்பாட்டார். இந்த முறை, அதே மதுரை மத்தி தொகுதியில் 34,176 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார்.

தன் தொகுதி மக்களுக்கு மூன்று வாக்குறுதிகளை இந்த முறை அவர் கொடுத்திருக்கிறார். ஒருங்கிணைந்த குடிநீர்த் திட்டம், ஒருங்கிணைந்த கழிவுநீர்த் திட்டம் மற்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலைப் புதுப்பிப்பது ஆகியவைதான் அந்த மூன்று வாக்குறுதிகள்.

மனைவியுடன் பி.டி.ஆர்.தியாகராஜன்

நாத்திகக்கொள்கை மேலோங்கிய தி.மு.க-வைச் சேர்ந்த பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனும் சரி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும் சரி, இருவருமே மதுரை மீனாட்சியம்மனின் தீவிரமான பக்தர்கள். மீனாட்சியம்மன் கோயிலுக்கு 1963-ம் ஆண்டு பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் குடமுழுக்கு நடத்தினார். 2006-ம் ஆண்டு தந்தை இறந்த பிறகு, வாரத்துக்கு ஒரு முறை அல்லது மாதத்துக்கு ஒரு முறை மீனாட்சியம்மன் கோயிலுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும், நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மீனாட்சியம்மன் கோயிலை புதுப்பிக்க வேண்டுமென்பதில் மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறார். மதுரை மத்தி தொகுதியை அவர் கேட்டு வாங்கியதே அங்கு மீனாட்சியம்மன் கோயில் அமைந்திருக்கிறது என்பதால்தான்.

Also Read: மநீம நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா... கமல்ஹாசனின் சர்வாதிகாரம்தான் காரணமா?

தற்போது அவருக்கு துறை சார்ந்த சாவல்கள் நிறையவே இருக்கின்றன. சர்வதேச நிதியியல் மற்றும் மனிதவளப் பிரிவுகளில் உயர் பொறுப்புகளில் 20 ஆண்டுகள் செயல்பட்ட அனுபவம் வாய்ந்தவர் என்பதால், இந்த சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வார் என்ற நம்பிக்கையில், அவரை நிதியமைச்சராக்கியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.22,226 கோடி என்று கடந்த பட்ஜெட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. இந்த நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசுக்கு கூடுதல் நிதி வேண்டும். கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு நிறைய நிதி தேவைப்படும். கொரோனா பொதுமுடக்கம் காரணமாக ஏற்படும் பொருளாதார இழப்புகளை ஈடுசெய்ய வேண்டும்.

தந்தையுடன் பி.டி.ஆர்.தியாகராஜன்

இவை போக, மத்திய அரசிடமிருந்து ஜி.எஸ்.டி பாக்கித்தொகையை வாங்க வேண்டும், இதற்கு மத்தியில் தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட, வளர்ச்சியை நோக்கியப் பொருளாதாரமாக தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மாற்றுவது என்ற முக்கிய இலக்கை நோக்கி நகர வேண்டும். இவையெல்லாம் நிதியமைச்சர் பி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் முன்பாக இருக்கும் மிகப்பெரிய சவால்கள். எனவேதான், இந்த சவால்களை எல்லாம் எப்படி சமாளிக்கப்போகிறார் என்ற கேள்வியுடன் அனைவரின் கவனமும் புதிய நிதியமைச்சரை நோக்கித் திரும்பியிருக்கிறது. இந்த சிக்கல்களைப் பற்றிய நல்ல புரிதல் அவருக்கு இருக்கிறது. கடந்த முறை எம்.எல்.ஏ-வாக இருந்தபோதே நிதிப் பிரச்னைகள் குறித்து தொடர்ந்து பல இடங்களில் அவர் பேசிவந்திருக்கிறார். இப்போது, அவரது செயல்பாடு எப்படி இருக்கப்போகிறது என்பதை இவர் தாக்கல் செய்யவிருக்கும் முதல் நிதிநிலை அறிக்கையில் தெரிந்துவிடும்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/political-journey-of-finance-minister-palanivel-thiyagarajan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக