2Rகாஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பிரபலமான தனியார் செல்போன் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இங்கு தயாராகும் செல்போன்கள் நாடு முழுவதும் விநியோகம் செய்யப்படும். கடந்த சில தினங்களுக்கு முன், 12 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள், கன்டெய்னரில் ஏற்றப்பட்டு மும்பைக்கு சாலை வழியாக கொண்டுச் செல்லப்பட்டது. கன்டெய்னர் லாரியை உத்தரபிரதேசத்தை சேர்ந்த இர்பான் (40) என்பவர் ஓட்டிச்சென்றார். ஆந்திர மாநிலம் நகரி அருகே சென்ற கன்டெய்னர் லாரி மீது பின்னால் வந்த இன்னொரு லாரி மோதியது. அதனால் கன்டெய்னர் லாரியை இர்பான் நிறுத்தினார். இதையடுத்து பின்னால் வந்த லாரியிலிருந்து இறங்கியவர்கள் இர்பானிடம் தகராறு செய்தனர்.
இந்தச் சமயத்தில் துப்பாக்கியைக் காட்டி டிரைவர் இர்பானை 5 பேர் கொண்ட கும்பல் மிரட்டியது. அடுத்து இர்பானை சரமாரியாக தாக்கிய அந்தக் கும்பல், அவரின் கை, கால்களை கட்டிப்போட்டதோடு சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியை அடைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கன்டெய்னர் லாரியை கடத்திய கும்பல், அதிலிருந்த செல்போன் பாக்ஸ்களை தங்களின் லாரியில் ஏற்றியது. செல்போன் பாக்ஸ்கள் ஏற்றப்பட்டதும் கன்டெய்னர் லாரியை சாலைஓரத்தில் நிறுத்திவிட்டு கொள்ளை கும்பல் எஸ்கேப் ஆனது.
கன்டெய்னர் லாரியோடு டிரைவர் இர்பானையும் அங்கேகேயே விட்டுவிட்டு கொள்ளை கும்பல் சென்றது. செல்போன்கள் கொள்ளைபோனது தொடர்பாக டிரைவர் இர்பான், நகரி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மத்தய்யா வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலைத் தேடிவருகிறார். கொள்ளை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். அதன்அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.
டிரைவர் இர்பானுக்கு இந்தி மட்டுமே தெரிவதால் அவரிடம் என்ன நடந்தது என்று விசாரிக்க இந்தி தெரிந்த போலீஸார் மூலம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இதற்கிடையில் கொள்ளை சம்பவம் குறித்து தனியார் செல்போன் நிறுவன அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்றுள்ளனர். 12 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளைப்போனதாக செல்போன் நிறுவன அதிகாரிகள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆந்திர மாநில போலீஸார் கூறுகையில், ``கன்டெய்னர் லாரியை பின்தொடர்ந்து வந்த லாரியிலிருந்து இறங்கிய கொள்ளை கும்பல்தான் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக டிரைவர் இர்பான் தகவல் தெரிவித்துள்ளார். அதனால், கண்டெய்னர் லாரி சென்ற வழித்தடத்தில் உள்ள சோதனை சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகிறோம். இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் டிரைவர் இர்பான் மீதும் எங்களுக்கு சந்தேகம் உள்ளது.
Also Read: சென்னை: தம்பிக்காக அண்ணன் போட்ட சபதம்... கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞர் கொலை!
டிரைவர் இர்பான் சொல்லும் தகவல்படி பார்த்தால் சினிமா ஸ்டைலில் இந்தக் கொள்ளை நடந்துள்ளது. இந்த வழக்கில் சிசிடிவி கேமரா பதிவுகள் முக்கிய தடயமாக இருக்கும் என நம்புகிறோம். மேலும், செல்போன் சிக்னல்கள் அடிப்படையிலும் விசாரணை நடந்துவருகிறது. கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்களை யாராவது பயன்படுத்தினாலும் கொள்ளைக் கும்பல் எளிதில் சிக்கிக் கொள்ளும். ஏனெனில் ஐஎம்இஐ நம்பர்கள் மூலமாகவும் கொள்ளைக் கும்பலைத் தேடிவருகிறோம். கொள்ளைக் கும்பலைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன" என்றனர்.
நகரியில் 12 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/crime/andhra-container-hi-jacked-gang-steals-mobile-phones-worth-12-crore-rupees
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக