Ad

ஞாயிறு, 11 அக்டோபர், 2020

சொத்து அட்டை: `இனி கிராம மக்களுக்கு எந்த வங்கியும் கடன் தர மறுக்க முடியாது!’- பிரதமர் மோடி

மத்திய அரசின் ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகள் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் தொடங்கிவைத்தார்.

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான ஏப்ரல் மாதம் 24-ம் தேதி, ஸ்வமித்வா (Svamitva - Survey of Villages And Mapping With Improvised Technology In Village Areas) என்ற திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் சொத்துவைத்திருப்பவர்களுக்கு, `சொத்து அட்டை’ வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஒருவரை குறிப்பிட்ட சொத்தின் உரிமையாளர் என அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் இந்தச் சொத்து அட்டைகளைப் பயன்படுத்தி, கிராம மக்கள் வங்கிகளில் கடன் வசதிகளைப் பெறலாம் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சொத்து அட்டை திட்டத்தை தொடங்கிவைத்த பிரதமர் மோடி

இந்தியாவில் மொத்தம் 6.62 லட்சம் கிராமங்கள் இருக்கின்றன. முதற்கட்டமாக உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தராகண்ட் உள்ளிட்ட ஆறு மாநிலங்களிலுள்ள 763 கிராமங்களில், சொத்து அட்டைத் திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. அடுத்த நான்கு ஆண்டுகளில் படிப்படியாக 6.62 லட்சம் கிராமங்களிலும் இந்தத் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 763 கிராமங்களைச் சேர்ந்த 1.32 லட்சம் மக்களுக்கு சொத்து விவர அட்டைகள் வழங்கப்படவிருக்கின்றன. இந்தத் திட்டத்தை பிரதமர் மோடி டெல்லியிலிருந்து தொடங்கி வைத்த பின்னர், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் சொத்து விவர அட்டைகளை வழங்கும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் கிராமங்களில் மாற்று சமூகத்தினரால் நிலங்கள் சுரண்டப்படுவது முற்றிலுமாக தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Also Read: `ஏழைகளின் நலனே முக்கியம்!' - அரசு நிர்வாகத்தின் தலைவராக தொடர்ந்து 20 ஆண்டுகள்; பிரதமர் மோடி உருக்கம்

இந்தச் சொத்து விவர அட்டைகள், கிராம மக்களின் வீடுகள் மற்றும் அவர்கள் வைத்திருக்கும் சுற்றியுள்ள பகுதிகளின் சொத்து விவரங்கள் அடங்கிய நகல்கள் போன்றவை. இது கிராமப்புறங்களில் சொத்துரிமை குறித்த தெளிவை உறுதி செய்யும் எனவும், வருவாய் சேகரிப்புக்கு உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ``ஒருவர் தங்கள் வீட்டின் அல்லது நிலத்தின் உரிமையாளராகும்போது, அவர்களின் சுய மரியாதை மீட்டெடுக்கப்படுகிறது. ஒருவர் பாதுகாப்பாகவும் வலுவாகவும் உணர்கிறார். சொத்து அட்டைகளின் விநியோகத்தைத் தொடங்குவது, தன்னம்பிக்கை இந்தியாவை நோக்கிய மற்றொரு வரலாற்று படி” என்றார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி, ``இனி ஸ்வாமித்வா திட்டத்தின் பயனாளிகளின் சொத்தை யாரும் அபகரிக்க முடியாது’’ என்றார்.

பிரதமர் மோடி

தொடர்ந்து பேசிய மோடி, ``இந்தத் திட்டம் கிராம மக்களுக்குக் கடன் பெறவும் உதவும். அவர்களிடம் நிலம் மற்றும் சொத்துகள் குறித்த சரியான ஆவணங்கள் இருந்தால், எந்தவொரு வங்கியும் அவர்களுக்குக் கடன்களை வழங்க மறுக்க முடியாது” என்றவர், ``உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மட்டுமே அவர்களின் சொத்தின் ஆவணங்கள் இருக்கின்றன. இப்போது இந்திய கிராமப்புற மக்களிடமும் அவை இருக்கும்” என்றார்.

Also Read: "காந்தியின் கொள்கைகள் நமக்கு வழிகாட்டுகின்றன!"- பிரதமர் மோடி... மக்கள் கருத்து? #VikatanPollResults



source https://www.vikatan.com/news/politics/pmmodi-inaugurates-svamitva-scheme

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக