Ad

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

பாதிக்கப்பட்டவர்களிடம் பாகுபாடு... பினராயி விஜயன் மீது குற்றச்சாட்டு!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் எனப் பல காரணங்களுக்காக பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு பாராட்டுகளைப் பெற்றது. கொரோனாவுக்கு முன்பாக, இரண்டு முறை பெருவெள்ளத்தில் மூழ்கியபோது கேரளா கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தது. அப்போதும் பினராயி விஜயன் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பாராட்டப்பட்டன. நிபா வைரஸ் கேரளாவைத் தாக்கியபோதும், அதை பினராயி விஜயன் அரசு வெற்றிகரமாக எதிர்கொண்டது என்றும் பலரின் பாராட்டுகளைப் பெற்றது. மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சிக்கக்கூடிய முதல்வராகவும் பினராயி விஜயன் இருக்கிறார்.

ஸ்வப்னா சுரேஷ்

இந்த நிலையில் தங்கக்கடத்தல், விமான விபத்து மற்றும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களிடம் பாகுபாடு என பினராயி விஜயனுக்கு எதிராக சமீபத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தங்கக் கடத்தல் விவகாரம் பினராயி விஜயன் அரசுக்கு எதிராகப் பெரும் புயலைக் கிளப்பியது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகத்தைப் பயன்படுத்தி கேரளாவுக்கு கடத்திவரப்பட்ட 30 கிலோ தங்கம் சுங்கத்துறையினரால் கடந்த ஜூலை 5-ம் தேதி பறிமுதல் செய்யப்பட்டது. அது தொடர்பாக, தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரீத்குமார் கைதுசெய்யப்பட்டார். பின்னர், அந்த வழக்கில் முக்கியக் குற்றவாளி என்று கூறப்படும் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை என்.ஐ.ஏ கைதுசெய்தது. மேலும் முதல்வரின் தனிப்பிரிவு செயலாளராகவும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராகவும் இருந்த சிவசங்கருக்கு தங்கக் கடத்தல் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தங்கக் கடத்தலில் முதல்வர் அலுவலகத்துக்கு நேரடியாகத் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

`தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வர் அலுவலகத்துக்குத் தொடர்பு உள்ளது. எனவே, முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பினராயி விஜயன் விசாரணையைச் சந்திக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ரமேஷ் சென்னிதலா வலியுறுத்தினார். ``தங்கக் கடத்தல் குறித்து தமக்கு எதுவுமே தெரியாது என்றார் முதல்வர் பினராயி விஜயன். தனது அலுவலகத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியாமலா முதல்வர் இருப்பார்? இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்வோம், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பினராயி கூறுகிறார். அப்படியென்றால், இந்த வழக்கில் பினராயி விஜயனையும் போலீஸ் விசாரிக்க வேண்டும்" என்றும் சென்னிதலா வேகம் காட்டினார்.

ரமேஷ் சென்னிதலா

இந்தக் குற்றச்சாட்டுகளை பினராயி விஜயன் மறுத்தார். ``விமான நிலையத்தில் தங்கத்தை சுங்கத்துறையினர் கண்டுபிடித்த செய்தி வந்தவுடன், ஓர் அரசியல் கட்சியைச் சேர்ந்த பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ஒருவர், அரசின் மீது குற்றம்சாட்டத் திட்டமிட்டார். மாநில அரசின் மீது பல்வேறு யூகக் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் உருவாக்குகிறார்கள். இடது ஜனநாயக முன்னணி அரசின் நற்பெயரைக் கெடுக்கும் பிரசாரம் இது" என்று பினராயி விஜயன் கூறினார். இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது.

தங்கக் கடத்தல் விவகாரத்தில் முதல்வருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் பரபரப்பு அடங்குவதற்குள், ``பாதிக்கப்பட்டவர்களிடம் பாகுபாடு காட்டுகிறார்" என்ற குற்றசாட்டுக்கு பினராயி விஜயன் ஆளாகியிருக்கிறார். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் நிறைய தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ளன. அங்கு ஏராளமான தமிழர்கள் தோட்டத் தொழிலாளர்கள் வேலைசெய்துவருகிறார்கள். இம்மாதம் 7-ம் தேதி இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்தது. அப்போது மூணாறு அருகே பெட்டிமுடி என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.

மூணாறு நிலச்சரிவு

அதில், பெட்டிமுடியில் உள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றில் பணியாற்றிவந்த தொழிலாளர்களின் வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. அந்த வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் மண்ணோடு மண்ணாக மடிந்துபோன பெரும் சோகம் நிகழ்ந்தது. 70 ஏழைத்தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து மரணடைந்தனர்.

மூணாறில் நிலச்சரிவு ஏற்பட்டு 70 பேர் மரணமடைந்த சம்பவம் நிகழ்ந்த அதே நாளில் துபாயிலிருந்து கேரளாவுக்கு வந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று, கோழிக்கோடு கரிப்பூர் விமானநிலையத்தில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானது. 190 பேரை ஏற்றிக்கொண்டுவந்த அந்த விமானம், ஓடு பாதையிலிருந்து விலகியதால், இரண்டு பாகங்களாக உடைந்தது. அதில், இரண்டு விமானிகள் உள்பட 18 பேர் மரணமடைந்தனர்.

கோழிக்கோடு விமான விபத்து

விமான விபத்து ஏற்பட்டவுடன் முதல்வர் பினராயி விஜயனும் அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் அறிவித்தார்.

நிலச்சரிவில் மரணமடைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் என்று பினராயி விஜயன் அறிவித்தார். அங்குதான் பிரச்னை எழுந்தது. விமான விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம், நிலச்சரியில் இறந்தவர்களுக்கு ரூ.5 லட்சமா என்ற கேள்வி எழுந்தது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ரமேஷ் சென்னிதலா, ``அனைத்து உயிர்களும் சமமானவை. உயிர்களில் உயர் தாழ்வு என்பது கிடையாது. ஏழை எஸ்டேட் தொழிலாளர்கள் மற்றும் விமானப் பயணிகள் இருவருக்கும் பாரபட்சம். எல்லா உயிர்களும் சமமான முக்கியத்துவம் கொண்டவை. இழப்பீட்டுத்தொகை என்பது இழந்த உயிருக்கு ஈடாகாது. கோழிக்கோடு சென்ற முதல்வர், மூணாறுக்கும் சென்றிருக்க வேண்டும். மூணாறில் உயிரிழந்தவர்களுக்கான நிவாரணமும் ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும்" என்றார்.

மூணாறில் பினராயி விஜயன்

``பாதிக்கப்பட்டவர்களில் பாரபட்சம் பார்க்கக் கூடாது. விமான விபத்து, நிலச்சரிவு என இரண்டு சம்பவங்களிலும் முதல்வர் பாரபட்சத்துடன் நடந்துகொண்டிருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களில் பாகுபாடு காட்டக்கூடாது" என்று பா.ஜ.க தலைவரும் மத்திய அமைச்சருமான முரளிதரன் குற்றம்சாட்டினார்.

அரசின் நடவடிக்கைகள், ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் மீது எதிர்க் கட்சித் தலைவர்கள் முன்வைக்கும் வழக்கமாக விமர்சனங்களாக இதைப் பார்க்க முடியவில்லை. கோழிக்கோட்டில் விமான விபத்து நிகழ்ந்தவுடன் நேரில் சென்று பார்வையிட்ட முதல்வர், மூணாறுக்கு ஏன் உடனடியாக செல்லவில்லை என்று எழுப்பப்படும் கேள்வி நியாயமானது. விமான விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம், நிலச்சரிவில் இறந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் என்பது என்ன நியாயம்? `விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதில், தமிழர்களுக்கு கேரள அரசு பாகுபாடு காட்டுகிறது’ என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

முதல்வர் காரை மறித்த பெண்

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பிறகு, சம்பவம் நிகழ்ந்து ஏழு நாள்கள் கழித்துத்தான், நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தார் முதல்வர் பினராயி விஜயன். அவருடன் கவர்னர் ஆரிஃப் முகமது கானும் சென்றிருந்தார். பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்துவிட்டு பினராயி விஜயன் திரும்பினார். அப்போது, தேயிலைத் தோட்டப் பெண் தொழிலாளர்கள் சார்பில் ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பின் தலைவியான கோமதி என்பவர் பினராயி விஜயனின் காரை மறித்தார். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை போலீஸார் கைதுசெய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். மூணாறில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் இருப்பிடங்கள் மோசமான நிலையில் இருப்பதாகவும், அவர்களுக்கு நிலம் வழங்க வேண்டும் என்பதும், சொந்தமாக வீடு கட்டிக்கொள்ள நிதி உதவி வழங்க வேண்டும் என்பதும் கோமதியின் முக்கியக் கோரிக்கை.

Also Read: `பிரசாந்த் பூஷண் குற்றவாளி’ என தீர்ப்பு... கருத்துரிமையை நெரிக்கிறதா உச்சநீதிமன்றம்?

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், தன் விளக்கத்தையும் பினராயி விஜயன் அளித்துள்ளார். ``மூணாறுக்கு ஹெலிகாப்டரில் செல்ல வேண்டும். ஆனால், அப்போதிருந்த காலநிலை காரணமாக உடனடியாக அங்கு செல்ல முடியவில்லை.

மூணாறில் கவர்னருடன் பினராயி விஜயன்

நிலச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதற்கட்ட நிதியுதவியை மட்டுமே அறிவித்துள்ளோம். மீட்புப்பணி நிறைவடைந்தவுடன் இழப்புகள் கணக்கிடப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படும்" என்றார் பினராயி விஜயன்.



source https://www.vikatan.com/government-and-politics/news/opposition-parties-slams-pinarayi-vijayan-regarding-munnar-landslide-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக