Ad

புதன், 7 அக்டோபர், 2020

`கேரள தலைமைச் செயலகத் தீவிபத்துக்கு மின்கசிவு காரணம் அல்ல!' - ஃபாரன்சிக் ரிப்போர்ட்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உதவியதாக சிவசங்கரனிடம் சுங்கத்துறை, என்.ஐ.ஏ உள்ளிட்டவை விசாரணை நடத்தி வருகின்றன. சிவசங்கரன், கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராக இருந்தவர் என்பதால் தலைமைச் செயலகத்தில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது தலைமைச் செயலகத்தில் உள்ள சில ஃபைல்களையும் என்.ஐ.ஏ கேட்டுள்ளது. இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள மாநில தலைமைச்செயலகத்தின் பொதுப்பிரிவு கட்டடத்தில் உள்ள புரோட்டோக்கால் அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ விபத்தில் தங்கம் கடத்தல் வழக்கு சம்பந்தப்பட்ட பைல்கள் எரிந்து நாசமானதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும், இது விபத்து அல்ல திட்டமிட்டு ஃபைல்கள் எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சியினர் குற்றம்சாட்டினர். இது சம்மந்தமாக எதிர்க்கட்சிகள் போராட்டங்களையும் நடத்தின.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

தங்கம் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட ஃபைல்கள் அழிக்கப்பட்டு இருப்பதாகவும் சில மீடியாக்களில் தகவல்கள் வெளியானது. இதற்கிடையில் சில மீடியாக்கள் வேண்டுமென்றே அரசுக்கு எதிராக உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்பியதாக பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் புகார் அளிப்பதென முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டது. மேலும், மீடியாக்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதுகுறித்து ஆலோசிப்பதாகவும் பினராயி விஜயன் தெரிவித்தார்

Also Read: கேரளா: பினராயி விஜயன் சேர்மனாக இருக்கும் `லைஃப் மிஷன்' திட்டத்தில் கமிஷன் அடித்த ஸ்வப்னா?

தலைமைச் செயலகத்தில் தீபத்து ஏற்பட மின்கசிவுதான் காரணம் என அரசு நியமித்த நிபுணர் குழுவினர் ஆய்வு செய்து அறிவித்தனர். இந்த நிலையில் தடயவியல் பரிசோதனையில் தீ விபத்துக்கு மின் கசிவு காரணம் அல்ல என கூறப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஃபாரன்சிக் லேபில் உள்ள இயற்பியல் துறை சி.ஜே.எம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இந்த தகவல் இருப்பதாகவும், அதே ஃபைல்களின் காப்பி விசாரணை நடத்தும் காவல்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கேரள காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா

தீ விபத்து ஏற்பட்ட அன்று மாவட்ட தடயவியல்துறை அதிகாரி தலைமையிலான குழு தலைமைச் செயலகம் சென்றது. தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து 24 வகையான சாம்பிள்களை சேகரித்துள்ளது. இதில், சாம்பல் உள்ளிட்டவைகளும் அடக்கம். இவற்றை ஆய்வு செய்ததில் தலைமைச் செயலகத்தில் தீப்பிடிக்க ஷார்ட் சர்க்யூட் காரணம் என்று கண்டுபிடிக்க எந்த சாம்பிளுகளிலும் ஆதாரம் கிடைக்கவில்லை என்றும், ஃபைல்கள் மட்டுமே எரிந்துள்ளன, சானிடைசர் உள்ளிட்ட வேறு பொருட்கள் எரியாததால் ஷார்ட் சர்க்கியூட் காரணமாக இருக்க வாய்பு இல்லை எனவும் ரிசல்ட் வந்துள்ளது.

இதுகுறித்து கேரள காங்கிரஸ் எதிர்கட்சித்தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில், "உண்மையை மறைத்து வைக்கும் அரசின் மற்றொரு முயற்சியும் தோல்வியடைந்தது. தீ எரிந்தது குறித்து நீதி விசாரணை வேண்டும்" என்றார்.

Also Read: கேரள தலைமைச் செயலகத்தில் தீ; தங்கக் கடத்தல் வழக்கு ஆவணம் எரிந்ததா? - கொதிக்கும் எதிர்கட்சிகள்

இதுபற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ``ஃபாரன்சிக் ரிப்போர்ட் குறித்து தெரியவில்லை. சீல் செய்த கவரில் ரிப்போர்ட் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/forensic-report-ruled-out-short-circuit-behind-kerala-secretariat-fire-accident

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக