Ad

புதன், 7 அக்டோபர், 2020

திருச்சி: `அஞ்சு மாசமா பாலியல் தொல்லை கொடுக்கிறாங்க!'- டி.ஐ.ஜி-யிடம் கண்ணீர்விட்ட பெண்

`ஐந்து மாதங்களாக எனக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கிறார். நான் இயற்கை உபாதை கழிக்கச் சென்றாலும்கூட என்னைப் பின்தொடர்ந்து வந்து செல்போனில் படம் பிடிக்கிறார், அவரிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்' என்று பெண் ஒருவர் இளைஞர் ஒருவர் மீது திருச்சி டி.ஐ.ஜி-யிடம் புகாரளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரியா

பெரம்பலூர் மாவட்டம், தொண்டமாந்துறை பூஞ்சோலைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜோசப், அன்னமேரி தம்பதியர். இவர்கள் வயல்வெளியில் கூலித் தொழில் செய்துவருகின்றனர். இவருடைய மகள் பிரியா. பெங்களூரில் நர்ஸிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி கடந்த 7 மாதங்களாக வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கெனவே சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த செங்கோடன் - மல்லிகா ஆகியோரின் மகன்கள் பரத் மற்றும் சின்னண்ணன் ஆகியோர் இவர்களின் இடத்தை அபகரித்து பாதையினையும் அபகரித்ததாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே நீண்ட நாள்களாகப் பிரச்னை நீடித்து வருகிறது.

செங்கோடனின் இளையமகள் சின்னண்ணன், பிரியா பெங்களூருவில் இருக்கும் போதே அவருக்கு போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் சொந்த ஊருக்கு வந்ததும் அவரிடம் பலமுறை பேசமுயற்சி செய்திருக்கிறார் அதற்கு பிரியா இடம் கொடுக்கவில்லை. இந்நிலையில் அவரது வீடு காட்டுப் பகுதியில் இருப்பதால் அப்பகுதியில் கழிவறை கூட இல்லாத நிலையில், வெளியே செல்லும் இடங்களில் எல்லாம் செல்போன் கொண்டு புகைப்படம் எடுக்க முயற்சித்திருக்கிறார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பிரியாவுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

மனுக்கொடுக்க வந்த பிரியா

செய்வதறியாது தவித்த பிரியா தனது, அம்மாவை சத்தம் போட்டு அழைத்துள்ளார். அவர் குரல் கேட்டு வருவதை தெரிந்துக்கொண்ட சின்னண்ணன், அங்கிருந்து வெளியே ஓடியதாகக் கூறப்படுகிறது. இவ்விவகாரம் சின்னண்ணன் குடும்பத்திற்கு தெரிய வருவதற்குள், தன் குடும்பத்திடம் பிரியா தன்னை தவறான பாதைக்கு அழைக்கிறார் என்று தகவலை மாற்றி சொல்லியிருக்கிறார். அவர்களும் பிரியாவை கடுமையாக தாக்கி கொலை மிரட்டலும் விட்டிருக்கிறார்கள். அதில் காயமடைந்தவர், மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு, தனக்கும், குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டியும் திருச்சி டி.ஐ.ஜி ஆனி விஜயாவிடம் கண்ணீர் மல்கக் கோரிக்கை மனு கொடுத்தார்.

இதுகுறித்து வழக்கை விசாரித்து வரும் காவலர்களிடம் பேசினோம்.``சம்பவம் நடந்தது உண்மைதான். இரண்டு குடும்பத்திற்குள் இடம் தொடர்பான பிரச்னை நீண்டநாள்களாகவே இருந்து வருகிறது.

திருச்சி போலீஸார்

விசாரித்ததில், அந்த பையன் பலவிதத்தில் டார்ச்சர் கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. அந்த பெண்ணும் ஒரு சில விஷயங்களை மிகைப்படுத்திச் சொல்கிறார். இதுகுறித்து தற்போது விசாரிக்க தொடங்கியிருக்கிறோம். விசாரணையில்தான் முழுமையாக தகவல்கள் தெரியவரும்'' என்பதோடு முடித்துக்கொண்டனர்.



source https://www.vikatan.com/social-affairs/crime/trichy-woman-files-police-complaint-over-sexual-harassment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக