Ad

புதன், 7 அக்டோபர், 2020

அ.தி.மு.க: வழிகாட்டும் குழுவில் `அந்த' 2 பேர்! - அறிக்கை கிளப்பிய அனல்!

`அ.தி.மு.க-வில் முதல்வர் வேட்பாளர் யார்?' என்ற ஒற்றைக் கேள்விக்கான விடை வெளியில் வந்துவிட்டது. `தேர்தலில் வேட்பாளர் தேர்வு, புதிய நியமனங்கள் உட்பட பல முக்கியமான முடிவுகளை வழிகாட்டுதல்குழுவே தீர்மானிக்கவிருக்கிறது. இந்தக் குழுவில் சீனியர்கள் பலரும் புறக்கணிக்கப்பட்டதால், கட்சிக்குள் கடும் அதிருப்தி நிலவுகிறது' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.

மதுசூதனனுடன் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்

`அ.தி.மு.க முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்படுவார்' எனத் தலைமைக் கழகத்தில் இன்று அறிவித்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். முன்னதாக, வழிகாட்டுதல்குழு தொடர்பான அறிவிப்பு வெளியானது. கடந்த சில நாள்களாக ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இடையே நடந்துவந்த மோதலில், `வழிகாட்டுதல்குழு' என்பது பிரதானமாகப் பேசப்பட்டது. `11 பேர் கொண்ட குழு அமைத்தால் மட்டுமே தீர்வு' என ஓ.பி.எஸ் தரப்பு பிடிவாதம் காட்டியது. இதையடுத்து, இன்று அறிக்கை வெளியானது.

இந்தக் குழுவில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் பா.மோகன், முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன், சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ மாணிக்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நியமனமும் கட்சிக்குள் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது. இது தொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாமல் நம்மிடம் பேசிய அ.தி.மு.க மாநில நிர்வாகி ஒருவர், `` பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்று வழிகாட்டும் குழுவை அமைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இனி கட்சிக்குள் முக்கிய முடிவுகளை இந்தக் குழு எடுக்கவிருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களை இந்தக் குழுவே தீர்மானிக்கவிருக்கிறது. இந்தக் குழுவின் இறுதி முடிவை முதல்வரும், துணை முதல்வரும் ஏற்றுக்கொள்வார்கள். இது தவிர, கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களைச் சேர்ப்பது, மாவட்ட செயலாளர்கள் நியமனம், புதிய நிர்வாகிகள் நியமனம் போன்றவற்றிலும் இந்தக் குழுவின் ஆதிக்கம் இருக்கும். இது தொடர்பான பணிகளில் ஏதேனும் சர்ச்சை ஏற்பட்டாலும் இந்தக் குழுவே அமர்ந்து பேசி முடிவெடுக்கும்.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்

வழிகாட்டுதல்குழுவிலுள்ள திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாகப் பார்க்கப்படுகிறவர்கள். ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் பா.மோகன், முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன், சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏமாணிக்கம் ஆகியோர் பன்னீர்செல்வம் தரப்பினராக இருக்கிறார்கள். இவர்கள், தங்கள் தரப்புக்கு எத்தனை இடங்களை ஒதுக்க வேண்டும், யாரெல்லாம் வேட்பாளர்கள் என்பதை முடிவு செய்யவிருக்கிறார்கள். இப்படியொரு குழுவை அமைப்பதற்கு முன்பாக சீனியர்கள் பலரிடமும் முதல்வர் தரப்பு பேசியிருக்கிறது. பண்ருட்டி ராமச்சந்திரன், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் உட்பட சீனியர்கள் பலரும் இந்தக் குழுவில் தங்கள் பெயரைச் சேர்ப்பார்கள் என எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

Also Read: அ.தி.மு.க முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டது பற்றி உங்கள் கருத்து? #VikatanPoll

`குழுவில் நீங்களும் இடம்பெறுவீர்கள்' எனச் சில சீனியர்களிடம் எடப்பாடி தரப்பு கூறிவந்திருக்கிறது. ஆனால், அதற்கு மாறான ஒரு பட்டியல் வெளியானதில் பலருக்கும் மனவருத்தம். குறிப்பாக, இந்தப் பட்டியலில் தங்கமணி, வேலுமணி ஆகியோரில் யாராவது ஒருவர் பெயர் இருந்திருந்தால் பரவாயில்லை. வழிகாட்டுதல்குழுவில் இவர்கள் இருவரும் இடம்பெற்றதைப் பலரும் ரசிக்கவில்லை. இந்தக் குமுறலை நேரடியாகவே காட்டத் தொடங்கிவிட்டனர். `சட்டமன்றத் தேர்தலில் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு சீட் கிடைக்காமல் போய்விடக் கூடாது' என்பதில் எச்சரிக்கையாக இருந்தார் ஓ.பி.எஸ். அதையொட்டியே தனக்கு நம்பிக்கையாக இருப்பவர்களைக் குழுவில் இடம்பெறச் செய்தார்" என்றார் விரிவாக.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்

அதேநேரம், வழிகாட்டுதல்குழு நியமனத்தில் நடந்த விவாதங்களை விவரித்த அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகிகள் சிலர், `` எடப்பாடியைத் தலைவராக முன்னிறுத்தக்கூடிய ஆறு பேர் குழுவில் இருக்கிறார்கள். அதேபோல், ஓ.பி.எஸ்-ஐ தலைவராக முன்னிறுத்தக்கூடிய ஐந்து பேர் குழுவில் இருக்கிறார்கள். மதுரையில் செல்லூர் ராஜூவைத் தவிர்த்துவிட்டு, கோபாலகிருஷ்ணனை குழுவில் இடம்பெறவைத்தார் ஓ.பி.எஸ். அண்மையில் சசிகலாவை ஆதரித்துப் பேசிய அன்வர் ராஜாவை நிராகரித்துவிட்டனர். காமராஜா அல்லது ஓ.எஸ்.மணியனா என ஆராய்ந்து பார்த்தபோது, காமராஜ் பெயரைக் குழுவுக்குள் கொண்டு வந்தார் எடப்பாடி. வேட்பாளர் தேர்வின்போது தனது ஆதரவாளர்களுக்குப் போதிய இடங்களை ஒதுக்க வேண்டும் என்பதை ஓ.பி.எஸ் தரப்பு பிரதான கோரிக்கையாக முன்வைத்தது. இந்தக் குழுவில் பெயர் இடம்பெறாத கடுப்பிலுள்ள சீனியர்கள், தங்கள் கோபத்தை வேறு வடிவில் காட்டுவதற்குத் தயாராகிவருகின்றனர்" என்றனர் விரிவாக.



source https://www.vikatan.com/government-and-politics/politics/11-members-steering-committee-irks-controversy-in-admk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக