Ad

வியாழன், 2 பிப்ரவரி, 2023

வெந்நீர்: ரத்த ஓட்டம், செரிமானம், சருமப் பொலிவு, எதிர்ப்பாற்றல்... இத்தனை நன்மைகளா?!

சளி, காய்ச்சல் என்றாலோ, உடல் எடையை குறைக்கவோதான் நம்மில் பெரும்பாலானோர் வெந்நீர் அருந்துகிறோம். ஆனால் உடல்நலனை பாதுகாக்க உதவுவதில் வெந்நீருக்கு முக்கியப் பங்கு உள்ளது.

காய்ச்சல் என்று வந்துவிட்டாலே, சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெந்நீர் குடிக்கும்படி மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். வெந்நீர், வெறும் நோய்க்கிருமிகளிடம் இருந்து மட்டும் நம்மை பாதுகாப்பதில்லை. இது, உணவு செரிமானம், சீரான ரத்த ஓட்டம், மலச்சிக்கல் பிரச்னை வரை நமக்கு தீர்வுகளைத் தருகிறது. தினமும் வெந்நீர் அருந்தினால் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களைக் காண முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். வெந்நீர் அருந்துவதால் உடல்நலன் எவ்வாறு மேம்படுகிறது என்பது குறித்து இயற்கை மருத்துவர் தீபா சொல்வதென்ன?

இயற்கை மருத்துவர் யோ. தீபா

`பொதுவாக தண்ணீர் நம் உடலுக்கு மிகவும் அத்தியாவசியமானது. வளர்சிதை மாற்றங்களில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. 18 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் தினமும் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதில் மூன்று லிட்டரை தண்ணீராகவும், மீதமுள்ள அரை லிட்டரை பழங்கள் அல்லது நீர் சார்ந்த உணவுப் பொருள்களாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஒருவர் நாள் முழுக்கத் தண்ணீர் அருந்தாமலோ அல்லது குறைந்தளவு மட்டுமே தண்ணீர் எடுத்துக்கொண்டாலோ அவருக்குக் கண்ணெரிச்சல், தலைவலி, தொண்டை வறட்சியில் தொடங்கி உடலில் நீர்ச்சத்து குறைந்து (Dehydration) மயக்கம் ஏற்பட்டு உடல்நிலை மோசமான கட்டத்திற்குச் செல்லக் கூடும்.

எனவே, தினமும் மூன்றரை லிட்டர் தண்ணீரை மறக்காமல், மறுக்காமல் குடிக்க வேண்டும். இத்தகைய நீரினை குளிர்ந்த நீராக எடுத்துக் கொள்வதைவிட, வெந்நீராக எடுத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் வெந்நீர் ஓர் உணவுப் பொருளாக இருப்பதைக் காட்டிலும் சிறந்த மருந்துப் பொருளாக இருக்கிறது. தினமும் காலையில் எழுந்தவுடன் 2 டம்ளர் வெந்நீர் குடிப்பது நல்லது. இதனை இயற்கை மருத்துவத்தில் `உஷா பானம்' என்பார்கள்.

Hot Water

காலை நேரத்தில் 5-7 மணியளவில் நம் பெருங்குடல் முழு இயக்கத்தில் இருக்கும். இந்த நேரத்தில் வெந்நீர் எடுத்துக்கொண்டால் செரிமானம் மற்றும் மலச்சிக்கல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படவே செய்யாது. மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு வெந்நீர் ஒரு அருமருந்து. மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் அதிகமான கழிவுப் பொருள்கள், நம் குடலில் தங்குவதுதான். இதனால், வயிற்று வலி, உப்புசம் முதலானவை உண்டாகி தொந்தரவு ஏற்படும். வெந்நீர் அருந்தும்போது, அது உணவுப் பொருள்களை எளிதில் செரிமானம் செய்து, வெளியேற்ற உதவுகிறது. இரவு தூங்கச் செல்வதற்கு முன்பும் ஒரு டம்ளர் வெந்நீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.

காலையில் குடிக்கும் வெந்நீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு கலந்து அதனுடன் சில துளிகள் தேனோ அல்லது சிறிதளவு சர்க்கரையோ கலந்து அருந்தினால் நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்-சியும், இரும்புச்சத்தும் கிடைக்கும். இதன் காரணமாக உடலின் நோய் எதிர்ப்புத்திறனும் மேம்படும்.

வெந்நீர் அருந்தும்போது, ரத்தக் குழாய்கள் விரிவுபடுத்தப்படும். இதனால், உடல் முழுக்க நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும். செல்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜன் சீராகக் கிடைக்கும். செல்கள் புத்துணர்வுடன் இருக்கும். இதனால் நம் உடல், பலவிதமான தீங்கு விளைவிக்கும் நோய்களிலிருந்தும் தன்னைத் தற்காத்துக்கொள்கிறது. போதுமான அளவு வெந்நீர் அருந்திவந்தால் சருமம் பொலிவடையும்.

hot water

வெந்நீர் அருந்துவதால் உணவுக்குழல், குடல்பகுதி விரிவடைந்து, நாம் உண்ணும் உணவுப் பொருள் எந்தவித சிக்கலும் இன்றி சுமுகமாக உள் செல்கிறது. நம் தொண்டை அல்லது உணவுக் குழலில் ஏதேனும் நோய்க் கிருமிகள் இருந்தால் அவற்றால் ஏற்படும் பாதிப்பின் தீவிரத்தன்மை வெந்நீர் அருந்துவதால் ஓரளவு குறைகிறது.

நன்றாகக் கொதிக்கவைக்கப்பட்ட வெந்நீரை அப்படியே சுடச்சுடக் குடிக்காமல், ஆறவைத்து, குடிக்கும் பதத்திற்கு வந்த பிறகே எடுத்துக்கொள்ள வேண்டும். கொதிக்கக் கொதிக்க இருக்கும் வெந்நீரை ஆற வைப்பதற்காக அதனுடன் கொதிக்கவைக்கப்படாத குளிர்ந்த நீரைச் சேர்க்கக் கூடாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வெந்நீர் அருந்தலாம். அதுவே ஆரோக்கியமானது, பாதுகாப்பானது" என்கிறார் மருத்துவர் தீபா.



source https://www.vikatan.com/health/hot-water-and-its-benefits

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக