`பிசினஸ் லீடர்ஷிப் லீக்’ என்னும் தொழில் சார்ந்த அமைப்பின் `தமிழக மாநாடு 2023' கடந்த வாரம் சென்னையில் நடந்தது. ``5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி’’ என்கிற தலைப்பில் நடந்த இந்தக் கருத்தரங்கில் தொழில் துறையில் ‘அனைவருக்கும் வாய்ப்புகள் வழங்குதல், பொருளாதாரத்தில் சமத்துவம், இந்தியர் அனைவரின் வாழ்வையும் மேன்மைப்படுத்துதல்’ ஆகிய விஷயங்களைப் பற்றி விவாதிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் முற்பகலில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை நடத்தும் சில தொழில்முனைவோர்கள் தங்கள் வெற்றி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்டவர்கள், நரம்புத்தசை கோளாறால் கடுமையான பாதிப்பை சந்தித்தவர்களின் வாழ்வை மேம்படுத்த தொழில் துறையில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் அக்லூட் அறக்கட்டளையின் (Aclude Foundation) இயக்குனர் தனேஷ் கனகராஜைப் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. கருடா ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட்டின் முதலீட்டு ஆலோசகர் ஜி.என் மதுவின் தலைமையில் “5 டிரில்லியன் பொருளாதாரத்தில் சிறு தொழில்களுக்கான வாய்ப்புகள்” என்கிற தலைப்பில் குழு விவாதம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து டாக்டர் எனர்ஜி கன்சோடியம் நிறுவனத்தின் சி.இ.ஓ டாக்டர் நிகில் தாம்பே, நிசான் மோட்டார்ஸ் இந்தியாவின் நிறுவனத் துணைத் தலைவர் டாக்டர் தயாசங்கர் விஸ்வநாத், எஸ்.ஐ.சி.சி.ஐ நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டி.ரவி, இன்ஜினியரிங் எலக்ட்ரான் டெக்னாலஜி இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஆர். சிவப்பிரகாசம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்த மாநாட்டின் பிற்பகலில் பேசினார் கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனரான சி.கே.ரங்கநாதன். ‘‘பணியாளர்கள் தவறு செய்ய அனுமதிக்க வேண்டும் என்பது நிறுவனத்தின் அடிப்படையாக இருக்கவேண்டும். உங்கள் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் பொருள்களைத் தயாரிப்பதன் மூலமே நீங்கள் அதிகமான லாபத்தை சம்பாதிக்க முடியும்’’ என்று பேசினார்.
அடுத்து பேசிய பி.எஸ்.இ - எஸ்.எம்.இ மற்றும் ஸ்டார்ட் அப் -இன் தலைவர் அஜய் தாகூர், சிறு, குறுதொழிலில் நமக்கு இருக்கும் வாய்ப்புகளைப் பற்றி உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி-எம் பேராசிரியர் அசோக் ஜுன்ஜுன்வாலா, தனது வாழ்க்கைக் கதையை சுருக்கமாக எடுத்துச் சொன்னார். ‘‘நமது பொருளாதார வளர்ச்சிக்கு சிறு, குறுதொழில் நிறுவனங்கள் நிறைய பங்காற்ற முடியும்’’ என்று பேசினார். பின்பு தொழில் துறையின் சாதனையாளர்களின் வாழ்க்கையைத் தொகுத்து எழுதப்பட்ட புத்தகம் வெளியிடப்பட்டது.
source https://www.vikatan.com/personal-finance/business-conference-held-in-chennai-about-5-trillion-dollar-economy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக