பாலின சமத்துவம், பெண் சுதந்திரம், பெண் கல்வி குறித்த பேச்சு எழும்போது எல்லாம், `நீங்க எந்தக் காலத்தில் இருக்கீங்க? அனைத்து துறைகளிலும் பெண்கள் இருக்கிறார்கள். ஆண்களுக்குதான் சுதந்திரம் தேவையாக இருக்கிறது. எப்பவோ நடந்ததைக் குறித்து இப்போது பேசாதீர்கள்' என ஆண்கள் சற்றே எரிச்சலுடன் கூறுவதைக் கேட்க முடியும்.
ஆனால், நிஜத்தில் இன்னும் பல துறைகளில் பெண்கள் நுழையவே முடியவில்லை என்பதுடன், மேலும் பல துறைகளில் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் பணியில் இல்லை என்பதுதான் உண்மை. அதிலும் அரசியல், காவல்துறை உள்ளிட்ட துறைகளில் அரசால் பரிந்துரைக்கப்பட்ட 33 சதவிகிதம் என்பதே இன்னும் எட்டப்படவில்லை. பாலின சமத்துவமான 50 சதவிகிதம் என்பதை எட்ட, இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமோ தெரியவில்லை.
இந்தியாவில், 1948-ம் ஆண்டு காவல்துறையில் முதன்முதலாக ஒரு பெண் நியமிக்கப்பட்டாலும், தமிழகத்தில் முதன்முறையாக 1974-ம் ஆண்டு, தி.மு.க ஆட்சிக்காலத்தில்தான், சென்னை மாநகரக் காவல்துறையில் காவலர்களாக பெண்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து 1992-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில்தான், பெண்களின் நலனை கருத்தில் கொண்டு நாட்டுக்கே முன்னோடியான அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் தொடங்கப்பட்டு, பின்னர், அது படிப்படியாக மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.
இன்று ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் காவல் நிலையங்கள் இருந்தாலும், காவல் துறையின் பல பிரிவுகளில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் தொடங்கி காவலர்கள் வரை பெண்கள் பணியாற்றி வந்தாலும், ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் எண்ணிக்கை குறைவான விகிதாசாரத்தில்தான் இருந்து வருகிறது.
இந்தியாவில், தமிழகத்தில்தான் அதிக காவல் நிலையங்கள் உள்ளன. அதேபோல காவல்துறையில் பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம்தான். இன்னும் சொல்லப்போனால் இந்தியாவின் தலைநகர் டெல்லியைக் காட்டிலும் தமிழகத்தில்தான் காவல்துறையில் பெண்கள் அதிகம் என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அப்படியான மாநிலத்திலேயே 33 சதவிகிதத்தை இன்றளவும் எட்ட முடியவில்லை என்றால், மற்ற மாநிலங்களின் நிலை பற்றி சொல்லவே தேவையில்லை.
2014-ம் ஆண்டு மத்திய அரசு, அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் காவலர்களாகப் பெண்கள் 33 சதவிகிதம் அளவில் நியமிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி கடிதம் அனுப்பியது. அதன் பின்னர், காவலர் பணியில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தாலும், மொத்த காவலர்கள் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இல்லை. மொத்தமாக பத்து சதவிகிதம் அளவுக்கே அதிகரித்துள்ளது.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு (2000 ஆண்டு) வரை, காவலர் பணியில் 3.3 சதவிகிதமாக இருந்த பெண்களின் எண்ணிக்கை தற்போது தான் 10.5 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது. காவலர் பணியில் ஆண், பெண் விகிதம் முறையே 10:1 என்ற அளவில்தான் உள்ளது. இதன் அடிப்படையில் கணக்கிட்டால் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 33 சதவிகிதத்தை அடைய இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் எனத் தெரியவில்லை.
பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்து வரும் நிலையில், காவல்துறையில் அதிக அளவில் ஈடுபாடு காட்டவில்லையா? ஒன்றிரண்டு உயர் அதிகாரிகள் தவிர இந்தத் துறையில் பெண்கள் அதிகம் பேசப்படாததன் காரணம் என்ன? ஏன் பெண்கள் அதிக அளவில் காவல்துறைக்குள் வர முடியவில்லை? கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக முயன்றும் 33 சதவிகிதம் இலக்கை ஏன் எட்டமுடியவில்லை? காவல்துறையில் பெண்கள் இணைவதில் இருக்கும் சிக்கல்கள் என்னவென்று பார்த்தால் தேர்வு முறையில் ஆரம்பித்து, பணி நேரம், விடுப்பு உள்ளிட்ட அடிப்படை வசதி வரை பலவற்றில் பிரச்னைகள் இன்றளவும் நீடிப்பதுதான் காரணம் எனக் கூறப்படுகிறது.
காவல்துறையில் உள்ள கலாசாரம் இயல்பாகவே ஆணாதிக்கம் சார்ந்தது, ஆண்களின் அந்த எண்ணங்களை அகற்றவே பெண்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கிறது. ஆய்வு ஒன்றில், காவல்துறையில் உள்ள ஆண்கள் பலருக்கு பெண்கள் சிறப்பாகச் செயல்பட முடியாது என்ற எதிர்மறை எண்ணமும், தங்களால் தான் சிறப்பாகச் செயல்பட முடியும் என்ற எண்ணமும் இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.
அத்துடன் பணியிடத்தில் நிலவும் பாலியல் துன்புறுத்தல், ஆணாதிக்க போக்கு ஆகியவை இந்த நூற்றாண்டிலும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு இருக்கிறது. CHRI நடத்திய ஃபோகஸ் குரூப் நேர்காணலில், கேரளா மற்றும் ஹரியானாவில் பதிலளித்தவர்களில் 7.5 % பேர், அவர்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களைப் பற்றி பேசி, அதிர வைத்தனர்.
ராஜஸ்தானில் உள்ள புதிய போலீஸ் தலைமையகக் கட்டடத்தில் ஐபிஎஸ் கேடர் அதிகாரிகளின் பயன்பாட்டுக்காக மட்டுமே பெண்கள் கழிப்பறைகள் உள்ளன. மாநில காவல்படையின் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், இந்திய அரசு பிப்ரவரி 2013-ல் வழிகாட்டுதல்களை வெளியிட்டது. காவலர் பணியில் உள்ள பெண்களுக்கான கழிப்பறைகள், ஓய்வறைகள் ஆகியவற்றை வழங்குமாறு மாநில அரசாங்கங்களைக் கேட்டுக்கொண்டது.
ஆனால், மாநிலம் முழுவதிலும் அவை முழுவதுமாக இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இன்றும் காவல்துறை பெண்கள் தங்கள் அடிப்படை வசதிகளுக்குக் குரல் எழுப்பிய வண்ணமே உள்ளனர்.
காவல்துறை பணி என்பது அலுவலகப் பணி போல, காலை 9 – மாலை 5 வரையிலான வேலை நேரம் கிடையாது. அதனால் பணி நேரமும் பெண்களுக்கு உகந்ததாக இல்லை. BPRD அமைப்பால் வழங்கப்பட்ட ஓர் ஆய்வு, ``90% காவல் நிலைய ஊழியர்கள், மாநிலங்கள் முழுவதும், ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்துக்கும் மேலாக வேலை செய்கிறார்கள்" என்று தெரிவிக்கிறது. பெண்கள் பெரும்பாலும் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கும் மேலாக வேலை செய்வதாகத் தெரிவிக்கிறது.
அத்துடன் காவல் துறைகளில் பதவி உயர்வு என்பது, துறை சார்ந்த உள் விவகாரங்களில் சிக்கித் தவிக்கும் அதே வேளையில், கீழ் நிலையில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி கேடர் அமைப்பு நடைமுறையில் இருப்பது அவர்களின் கரியர் வளர்ச்சியைத் தடுக்கிறது. ஹெட் கான்ஸ்டபிள், சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் ஆகிய பதவிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணியிடங்கள் மட்டுமே பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், இவர்களுக்குப் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது. இதனால் மிகக் குறைவான பெண்கள் மட்டுமே காவலர் பணியில் இருந்து பதவி உயர்வு பெறுவதால், இருக்கும் குறைவான சதவிகித பெண்களும் கான்ஸ்டபிள் மற்றும் தலைமைக் காவலர் பதவிகளில்தான் அதிகம் பணிபுரிகின்றனர்.
பெண்கள் இப்போதுதான் ஒவ்வொரு துறையிலும் கோலோச்ச ஆரம்பித்துள்ளனர். பலகாலமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததால், தான் ஏற்றிருக்கும் பணியில் தான் யார் என்பதை நிரூபிக்கும் வேகத்துடன்தான் பெரும்பாலான பெண்கள் செயல்படுகிறார்கள். இதன் காரணமாகவே அவர்கள் பல சந்தர்ப்பங்களில் சென்சிட்டிவ்வாகவும் இருக்கிறார்கள். அந்த வகையில், தன்னை யாரும் எதுவும் சொல்லிவிடக் கூடாது என்பதில் அதிக கவனம் காட்டுவதால், அதீத மனஉளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.
ஐ.பி.எஸ், துணை கண்காணிப்பாளர், இன்ஸ்பெக்டர் கேடர் வரை பணிபுரியும் பெண்களுக்கு அடிப்படை பிரச்னைகள் பெரிதாக இருப்பதில்லை. தனித்தனி அறைகள் கிடைக்கும். உதவியாளர்கள் இருப்பார்கள். அறையிலேயே டாய்லெட் போன்ற வசதிகள் இருக்கும். வேலை விஷயமாகச் செல்லும் பொது இடங்களிலும் பெரிதாக பிரச்னைகள் இருக்காது. சில ஸ்டேஷன்களில் எஸ்.ஐ-களுக்குக் கூட அறைகள் கிடைப்பதுண்டு. ஆனால், காவலர்களாகப் பணிபுரியும் பெண்கள் நிலை இன்று வரை பெரிதாக மேம்படவில்லை. பந்தோபஸ்துக்காக, விசாரணைக்காக, கைது நடவடிக்கைகளுக்காக, கலவரத் தடுப்புக்காக என அவர்கள் செல்லும் இடங்கள் அனைத்திலும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.
வெயில், மழை பாராது பந்தோபஸ்து டியூட்டி பார்க்க வேண்டும். கழிவறை வசதி இல்லாத இடங்களில் பந்தோபஸ்து டியூட்டி பல பெண்களுக்கு நரகம் எனலாம். அதிலும் மாதவிடாய் காலங்களில் கழிவறை வசதி இல்லாத இடங்களில் பணி புரிய வேண்டி இருக்கும்போது இவர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. இதனால் ஆண்களைவிட திறமையானவர்களாக இருந்தாலும், காவல் துறையில் பணி புரியும் பெண்கள் சாதனைகளை அடைய, ஆண்களைவிட கூடுதல் சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. சமூகச் சிக்கல் என்று பார்த்தால், காவல்துறை பணிகளில் உள்ள பெண்களில் உயர் அதிகாரி அந்தஸ்தில் இருப்பவர்கள் தவிர காவலர்களைத் திருமணம் செய்துகொள்வதை பலர் விரும்புவதில்லை. இதனால் பல பெண்களுக்கு காவல்துறையில் பணிபுரியும் கனவு இருந்தாலும், குடும்பம் அவர்களின் கனவை ஏற்க மறுத்து வருகிறது.
காவல்துறையில் இன்றளவும் பல காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால், அவர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுப்புகூட பல நேரங்களில் சாத்தியமில்லை. உயர் அதிகாரிகளே விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதித்தாலும், ஆள் பற்றாக்குறை விடுப்பை எளிதாக்குவதில்லை. வேலைப்பளு, தூக்கமின்மை, உயர் அதிகாரிகளின் அழுத்தம், பணி சார்ந்த அழுத்தம், கிராமப் பகுதிகளில் பணி புரிபவர்கள் சந்திக்கும் சாதிய வன்மம் எனப் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ளும் இவர்களில் சிலர் விரக்தியடைந்து தற்கொலைகூட செய்துள்ளனர்.
பிற துறைகளில் எதிர்கொள்வதைக் காட்டிலும் காவல்துறையில் பெண்கள் அதிக அளவில் நெருக்கடிகளையும் பிரச்னைகளையும் எதிர்கொள்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. காவல் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு என்று வழிகாட்டு நெறிமுறைகளைத் தந்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அவற்றை நடைமுறைப்படுத்தினாலே பெண்களின் பணி இலகுவாகும்.
சமூகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாகி வரும் இன்றைய காலகட்டத்தில், காவலர் பணிகளில் பெண்களின் தேவையும் அதிகரித்துள்ளது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, சில வழக்குகளில் பெண்கள்தான் வாக்குமூலத்தைப் பதிவு செய்தாக வேண்டும். சாட்சிகளை பெண்கள்தான் விசாரிக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு தான் மத்திய அரசும் காவல்துறையில் 33 சதவிகிதம் பெண்கள் இருக்க அறிவுறுத்தியது. ஆனால், கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் ஆன பின்னரும், அந்த விகிதம் இந்தியாவில் 10 முதல் 12 சதவிகிதம் என்ற அளவைத் தாண்டவில்லை என்பது வருத்தத்துக்குரியது.
தமிழகத்தில் காவலர் பணிகளில் பெண்கள் அமர்த்தப்பட்டு 50 ஆண்டுகள் கடந்ததை முன்னிட்டு பொன்விழாவை கொண்டாடப்போகும் இந்தத் தருணத்தில், அவர்களுக்கான பிரச்னைகளைக் களைவதில் அரசு ஆர்வம் காட்ட வேண்டும். அத்துடன் பல விஷயங்களில் முன்னோடி மாநிலமாகத் திகழும் தமிழகம், காவல் துறையில் 33 சதவிகிதம் என்னும் இலக்கை அடைவதிலும் முன்னோடி மாநிலமாக இருக்க வேண்டும் என்பதே பல பெண்களின் கனவாக உள்ளது.
பெண்களை 33 சதவிகித அளவுக்கு காவல்துறையில் சேர்க்க வேண்டும்' என்று மத்திய அரசு சொல்லியிருப்பது, சீக்கிரமே 50 சதவிகிதமாக மாற வேண்டும். இது, காவல்துறையோடு நின்றுவிடாமல் அனைத்துத் துறைகளிலும் பரவ வேண்டும்.
மிக முக்கியமாக கால் நூற்றாண்டுக்கும் மேலாக பேசப்பட்டுவரும், `நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இடம்' என்பதை வெகுசீக்கிரமே உறுதிப்படுத்துவதோடு, அதையும் 50 சதவிகிதம் என்கிற அளவுக்கு உயர்த்த வேண்டும். 'சரிக்கு சரி பெண்கள்' என்கிற நிலை உருவாகும் நாள்தான், இந்திய பெண்களுக்கு ஓரளவுக்காவது சுதந்திரம் கிடைத்த நாளாக இருக்கும்!
- கமலி பன்னீர்செல்வம்
source https://www.vikatan.com/women/will-tamil-nadu-be-the-pioneer-state-in-achieving-33-percent-quota-for-women
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக