Ad

ஞாயிறு, 12 டிசம்பர், 2021

``காய்க்கும் மரமே கல்லடிபடும்’’ - ஹேக் செய்யப்பட்ட ட்விட்டர் கணக்கும் கதிர் ஆனந்தின் நகர்வுகளும்!

அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்தின் ட்விட்டர் கணக்கு `ஹேக்’ செய்யப்பட்டிருக்கிறது. கதிர் ஆனந்த் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ``என்னுடைய @dmkathiranand ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கணக்கில், பதிவிடப்படும் தகவல், செய்தி மற்றும் பதிவுகளுக்கும், எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. எனவே, எனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செய்திகளைப் பரப்புவோர்மீது சைபர் க்ரைம் பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து, சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார். தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும், இந்தத் தகவலை அவர் பகிர்ந்திருக்கிறார்.

செய்திக்குறிப்பு

சமூக வலைதளங்களில் கதிர் ஆனந்த் குறிவைக்கப்படுவது, இது முதன்முறை அல்ல... ‘கொரோனா’ தடுப்புப் பணிக்காக, 2020, மார்ச் 28-ம் தேதி, தனது தொகுதி நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயை ஒதுக்குவதாக அறிவித்திருந்தார் கதிர் ஆனந்த். இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களுக்குள் கதிர் ஆனந்த் பெயரிலிருந்த ‘ஃபேஸ்புக்’ பக்கத்திலிருந்து ஓர் அறிவிப்பு வெளியானது. அதில், ``தொகுதிக்கான முழு நிதியையும் பல்வேறு திட்டங்களுக்காக ஏற்கெனவே ஒதுக்கீடு செய்துவிட்டேன். எனவே, கொரோனா தடுப்புக்காக நிதியை ஒதுக்க முடியவில்லை’’ என்று பதிவிடப்பட்டிருந்தது.

அந்த ஃபேஸ்புக் பதிவு, பொதுத்தளத்தில் சர்ச்சையானது. கதிர் ஆனந்தின் அதிகாரபூர்வ பக்கத்திலிருந்து வெளியான தகவல் என நினைத்து பலரும் விமர்சிக்கத் தொடங்கினர். பதறிப்போன கதிர் ஆனந்த், ``அது, என் பதிவு இல்லை. போலி ஃபேஸ்புக் கணக்கு. கொரோனா தடுப்புப் பணிக்காக ஒரு கோடி ரூபாயை நான் ஒதுக்கிவிட்டேன்’’ என்று விளக்கமளித்திருந்தார். தன் பெயரிலான போலி ஃபேஸ்புக் கணக்கை காவல்துறை அதிகாரிகள் மூலம் முடக்கி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

எம்.பி கதிர் ஆனந்த்

அந்த சமயம், ‘ஜூனியர் விகடன்’ இதழுக்கு அவரிடம் எடுக்கப்பட்ட பேட்டியிலும், ``என் பெயரில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட போலி ஃபேஸ்புக் கணக்குகள் உள்ளன. என்னுடைய ஒரிஜினல் ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்கு எது என்று மக்களுக்குத் தெரியும். `காய்க்கின்ற மரமே கல்லடிபடும்‘ என்று நினைத்துக்கொண்டு கடந்துபோகிறேன்’’ எனக் கூறியிருந்தார். கடந்த ஆண்டு ஃபேஸ்புக், இப்போது ட்விட்டர் எனக் கடந்த இரண்டு ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் தன்னைக் குறிவைக்கும் நபர்களைக் கண்டுபிடிப்பதற்காக சைபர் க்ரைம் உதவியையும் நாடியிருக்கிறார் எம்.பி கதிர் ஆனந்த்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/twitter-account-has-been-hacked-mp-kathir-anand-seeks-cyber-crime-help

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக