''மாரிதாஸ் கருத்து கோட்பாடுகளில் முழுமையாக முரண்படுகிறேன். ஆனால், தம்பி மாரிதாஸின் கைதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். ஒரு ஜனநாயக நாட்டில் எதையுமே பேசக்கூடாது என்று மாரிதாஸ் சார்ந்திருக்கும் பாஜக சொல்வதையும் ஏற்க முடியாது. திமுக எடுக்கும் முடிவையும் ஆதரிக்க முடியாது. கருத்து சுதந்திரத்துக்கு எதிராகக் கைது செய்தால் நாங்கள் என்னதான் பேசுவது?'' என யூ டியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், சீமான் கருத்துத் தெரிவித்திருப்பது மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே, தமிழக பாஜக முன்னாள் நிர்வாகி கே.டி.ராகவன் விவகாரத்திலும், `உலகத்தில் நடக்காத ஒன்றையா ராகவன் செய்துவிட்டார்? என அவர் பேசியது சர்ச்சையான நிலையில், தற்போது மாரிதாஸ் கைது குறித்து அவர் தெரிவித்த கருத்தும் சர்ச்சையாகியிருக்கிறது.
மதுரை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிதாஸ். பா.ஜ.க. ஆதரவாளரான இவர் 'Maridhas Answers' என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்திவருகிறார். ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் தீவிரமாக பா.ஜ.க. ஆதரவு கருத்துகளைத் தெரிவித்து வருவதோடு மட்டுமல்லாமல் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை மிகக் கடுமையாக விமர்சித்தும் பதிவுகளை வெளியிடுவார். இவர் வெளியிடும் வீடியோக்கள் பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கியிருக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ம் தேதியன்று மாரிதாஸ் தனது யு டியூப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், கொரோனா பரவலுக்கு ஒரு குறிப்பிட்ட மதத்தினரே காரணம் என்று கூறியிருந்தார். இது தொடர்பாக அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அளித்த புகாரில், திருநெல்வேலி மேலப்பாளையம் காவல் நிலையத்தில் மாரிதாஸ் மீது 292ஏ, 295ஏ, 505(2), 67பி ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில், முப்படைத் தளபதி பிபின் ராவத் மரணம் தொடர்பாக, அவர் பதிவிட்ட ட்வீட் ஒன்று தற்போது சர்ச்சையானது. தொடர்ந்து அவர்மீது, 153 A (ஜாதி, மத, இனங்களுக்குள் முரண்பாடு ஏற்படுத்தும் வகையில் பேச்சாலும் எழுத்தாலும் செய்கையாலும் தூண்டி விடுதல்) , 504 (தனது கருத்தால் அல்லது பதிவால் சமூகத்தில் பிரச்னை ஏற்படும் என தெரிந்தே பதிவிடுதல்), 505 ( ii ) (ஜாதி, மத, இன வேறுபாடு ஏற்படுத்தி பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் தூண்டி விடுதல்), 505 ( i ) ( b ) (பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மதுரை மாநகரக் காவல்துறை அவரைக் கைது செய்திருக்கிறது.
இந்தநிலையில், மாரிதாஸின் கைது குறித்து, ஒரு தனியார் ஊடகத்தில் சீமானிடம் கேள்வியெழுப்ப, அதற்கு சீமான் மேற்கண்டவாறு பதிலளித்திருப்பதுதான் பல்வேறு விவாதங்களை உண்டாக்கியிருக்கிறது. 'இவ்வளவு நாள் மறைமுகமாக பா.ஜ.கவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தார் சீமான். அதனால்தான் அவரை பா.ஜ.கவின் பி.டீம் என்றோம். ஆனால், கே.டி.ராகவன் விவகாரத்திலும் சரி, தற்போது மாரிதாஸ் விவகாரத்திலும் சரி வெளிப்படையாக ஆதரித்து தான் பா.ஜ.கவின் ஆள்தான் என நிரூபிக்கிறார்' என எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்தநிலையில், இதுகுறித்து நாம் தமிழர் வட்டாரத்தில் பேசினோம்,
'' தி.மு.க சொல்கின்ற கருத்தைத்தான் அனைவரும் சொல்ல வேண்டும். மாற்றுக் கருத்தை முன்வைக்கவே கூடாது என்றால் நாங்கள் ஏன் தனியாகக் கட்சி நடத்தவேண்டும். ஒவ்வொரு விஷயத்திலும், எங்கள் கட்சிக்கென்று ஒரு கருத்து, நிலைப்பாடு இருக்கிறது. அதை நாங்கள் சொல்லத்தான் செய்வோம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் ஆளும் தரப்புக்கு எதிராக கருத்துச் சொன்னால், உடனே ஏதாவது ஒரு கட்சியின் பி டீம் என பட்டம் சூட்டிவிடுகின்றனர். எங்கள் அளவுக்கு தி.மு.க உள்ளிட்ட எந்தக் கட்சியும் பா.ஜ.கவை அவ்வளவு வலுவாக எதிர்க்கவில்லை. புதிய கல்விக்கொள்கையில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்வோம் என தி.மு.க அமைச்சர்தான் பேசுகிறாரே தவிர நாம் தமிழர் கட்சி பேசவில்லை. பா.ஜ.கவின் கொள்கைகளுக்கு எதிராக ஆயிரம் கருத்துகள் எங்களுக்கும்தான் இருக்கின்றன.
ஏதோ ஒரு விஷயத்தில் எங்களுடைய கருத்து அவர்களுக்கு ஆதரவாக இருப்பதால், நாங்கள் பா.ஜ.கவுக்கு ஆதரவானவர்கள் என்று அர்த்தம் கிடையாது. மாறாக, மனித உரிமைக்கு ஆதரவாகவும் கருத்துரிமைக்கு ஆதரவான கருத்தாகவும்தான் இதை நீங்கள் பார்க்கவேண்டும். மாரிதாஸின் கருத்தில் உங்களுக்கு முரண்பாடு இருந்தால் அதை நீங்கள் கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டும். வலுவாக உங்கள் எதிர்க்குரலை முன்வைக்கலாம். மாறாக, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் செயல்படுவதைப்போல தமிழகத்திலும் செயல்படக்கூடாது. ஒரு அதிகாரமிக்க அரசாங்கத்துக்கு எதிராக ஒரு டியூபர் கலவரத்தை உண்டாக்கிவிட முடியுமா சொல்லுங்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் யார், யாரைக் கைது செய்யவேண்டும் என ஏற்கெனவே பட்டியல் தயார் செய்து வைத்திருக்கின்றனர். அவர்கள் ஏதாவது பேசியதும், உடனே அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி கைது செய்துவிடுகிறார்கள்.
Also Read: மாரிதாஸ், மதன் ரவிச்சந்திரன், கிஷோர் கே ஸ்வாமி மீதான நடவடிக்கைகளுக்குப் பின்னால் இருப்பது தி.மு.கவா?
இப்போது மட்டுமல்ல, ராகவன் விஷயத்திலும்கூட அண்ணன் அவரை ஆதரித்து எதுவும் பேசவில்லை. 'ஊரில் நடக்காத விஷயமா, அதையே எவ்வளவு நாள்கள் பேசிக்கொண்டிருப்பீர்கள், வேறு முக்கியமான விஷயங்களைப் பேசுங்கள்' என்றுதான் கேட்டார். உடனே, ராகவனுக்கு ஆதரவாகப் பேசுகிறார் சீமான் என கதைகட்டி விட்டார்கள். தற்போது மாரிதாஸுக்கு ஆதரவாகப் பேசுகிறார் என கதைகட்டி விடுகிறார்கள். நாங்கள் மாரிதாஸை, மாரிதாஸின் அனைத்துக் கருத்துகளையும் ஆதரிக்கவில்லை. அவரின் கைதைக் கண்டிக்கிறோம். அவ்வளவுதான்'' என்கிறார்கள்.
திமுக மீதான குற்றச்சாடுகள் குறித்து, அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்,
'' இந்த அரசு மீது விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு நான் பதில் சொல்வதைவிட, 'ஒரு முதல்வரால் எவ்வளவு முடியுமோ அதை விட முதல்வர் ஸ்டாலின் வேலை செய்கிறார்' என உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி மிகத் தெளிவாகப் பதில் சொல்லிவிட்டார். கருத்துக்கும் அவதூறுக்கும் வித்தியாசம் தெரியாமல் நாம் தமிழர் கட்சியினர் பேசி வருகின்றனர். ஒரு கருத்து என்றால் அதில் அடிப்படையான உண்மை இருக்கவேண்டும். மாரிதாஸ் தற்போது செய்திருப்பது அப்பட்டமான அவதூறு. அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் எந்த அரசியலும் இல்லை. பட்டியல் போட்டு கைது செய்கிற அளவுக்கு இவர்கள் அவ்வளவு பெரிய ஆள்களும் இல்லை. இவர்களின் கருத்துகள் மக்கள் மத்தியில் அவ்வளவு பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த அரசு கருத்துரிமைக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும். அதேவேளை, அவதூறு செய்பவர்கள்மீது தக்க நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும். தமிழக மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள்'' என்கிறார் அவர்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/what-is-behind-the-voice-that-seaman-raises-for-maridhas
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக