Ad

திங்கள், 6 டிசம்பர், 2021

`நியூட் வீடியோ வெளியானால் பெண்தான் வெட்கப்பட வேண்டுமா?' - `என் உடம்பு' குறும்படம் பேசும் தீர்வு

`` `தன்னுடைய நிர்வாண காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியானதால் இளம் பெண் தற்கொலை' என்கிற செய்தியைக் கடக்கும்போதெல்லாம், யாரோ செஞ்ச தப்புக்காக தங்களோட உயிரை இழக்கிறாங்களே இந்தப் பொண்ணுங்கன்னு பரிதவிப்பா இருக்கும். என் உடம்பை என்னோட சம்மதமில்லாம எவனோ ஒருத்தன் வீடியோ எடுத்தா, அது அவனோட தப்பு. என் மேல எந்தத் தப்புமில்லை. அதனால, இந்த விஷயத்துல நான் அவமானப்படுறதுக்கு ஒண்ணுமே இல்லைங்கிற நிமிர்வு பெண்களுக்கு வந்தே ஆகணும். அப்படியொரு காலகட்டத்துலதான் பெண்கள் நாம வாழ்ந்துக்கிட்டிருக்கோம்'' என்று படபடக்கிற எர்த்லிங் கெளசல்யா இயக்கிய `என் உடம்பு' குறும்படம்தான், தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.

எர்த்லிங் கெளசல்யா

டிரையல் ரூமில் உள்ளாடை அணிந்து பார்க்கிறார் நாயகி. அதை இரண்டு பேர் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு நாயகியைப் பணம் கேட்டும், செக்ஸ் வைத்துக்கொள்ளவும் மிரட்டுவார்கள். ஆரம்பத்தில் பயந்து, அழுது, உடைந்துபோகும் நாயகி, கடைசியாக ஒரு முடிவெடுப்பாள். தன்னுடைய டிரையல் ரூம் வீடியோவை தானே சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி, நடந்தது அத்தனையும் சொல்லி, `என் உடம்பை எனக்கெதிரா பயன்படுத்துறீங்களா... த்தூ' என்று காறி உமிழ்வாள்.

இது நிஜத்தில் நிகழ இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டுமோ என்ற ஆதங்கத்துடனே `என் உடம்பு' இயக்குநர் எர்த்லிங் கெளசல்யாவிடம் பேசினோம்.

கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டிருக்கிற வார்த்தைகளைப் படபடத்தவர், ``நம்புங்க. `என் உடம்பு' குறும்படத்தோட முடிவு நம்ம சமூகத்திலும் கூடிய விரைவில் நடக்கும். இல்லைன்னா, இப்படி ஓர் ஐடியா எனக்குள் வந்திருக்காது. ஆனா, என் படத்தோட கிளைமாக்ஸ் நம் சமூகத்தில் எப்பவோ நிகழ்ந்திருக்கணும் தெரியுமா?'' என்றவர், தொடர்ந்தார்.

என் உடம்பு

Also Read: ``நிறைய படைப்பாளிகள் ஓ.டி.டி-யால் காப்பாற்றப்படுகிறார்கள்!" - `அஷ்வமித்ரா' இயக்குநர் கௌசல்யா

``ஒரு பெண்ணைப்பத்தி ரெண்டு ஆண்கள் பேசுறப்போ கவனிச்சீங்கன்னா, `அது வந்துச்சு', `அது சொல்லுச்சு'ன்னு அஃறிணையாகத்தான் பேசுவாங்க. பெண்ணை பொருளா பார்க்கிற மனப்பான்மை மொழியிலேயே தெரியுது பாருங்க. அதோட நீட்சிதான் `அது செம கட்டை'ங்கிற மாதிரியான கமென்ட்ஸ் எல்லாம். சகமனுஷியா பார்க்காம பொருளா பார்க்கிறப்போ, பெண்களுக்கு உணர்வுகள் இருக்குங்கிறதையே மறந்திடுறாங்க ஆண்கள். பெண்ணை மதிக்கணும்கிறது மொழியில இருந்தே மாறணும்.

சினிமாவுல காமெடிங்கிற பேர்ல பெண்ணோட உடம்பை கேலி செய்றது இன்னிக்கும் நடந்துக்கிட்டுதான் இருக்கு. ஒரு பொண்ணை யாராவது பாலியல் வன்கொடுமை செஞ்சிருப்பாங்க. அந்தப் பொண்ணு உடனே தற்கொலை செஞ்சுப்பாங்க, இல்லைன்னா மானம் போச்சுன்னு மூலையில உட்கார்ந்துட்டு அழ ஆரம்பிப்பாங்க. உடனே அந்தப்பொண்ணோட பெற்றோரோ, கூடப் பிறந்தவங்களோ அல்லது காதலனோ தப்பு செஞ்சவங்களைப் பழி வாங்குவான். பெண் மேல திணிக்கப்படுற இந்த அபத்தங்கள் மாறணும்னா திரைத்துறையில் பெண் எழுத்தாளர்களோட பங்களிப்பு அதிகமாகணும்.

'என் உடம்பு' குறும்படம்

Also Read: Doctor Vikatan: முதல் குழந்தை சிசேரியன்; 2-வது பிரசவமும் நிச்சயமாக சிசேரியனாகத்தான் இருக்குமா?

எவனோ ஒருத்தன் உங்க உடம்பைப் பார்த்துட்டான்கிறதுக்காக உங்களுடைய அழகு, அறிவு, திறமை, எதிர்காலம் எல்லாத்தையும் மறந்துட்டு உயிரை விடுறது அநாவசியம் பெண்களே... நம் உடம்பை நமக்கெதிரா பயன்படுத்துறவங்களுக்கு அந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்'' என்கிறார் எர்த்லிங் கெளசல்யா.

படத்தின் நாயகி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை செம்மலர் அன்னம், `` `என் உடம்பு' நாயகி மாதிரியே நானும் பயந்த சுபாவம் கொண்ட பொண்ணுதாங்க. என்னால சட்டுனு எதையும் எதிர்க்க முடியாது. கொஞ்சம் உடைஞ்சு, அதுக்கப்புறம்தான் தைரியமா முடிவெடுப்பேன். அது அப்படியே படத்தோட நாயகி கேரக்டருக்கு ஒத்துப்போயிடுச்சு. சினிமா ஃபெஸ்டிவல்ல நான் நடிச்ச `அம்மிணி' படம், `லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்' டாகுமென்ட்ரியைப் பார்த்துட்டுதான் என்னை அப்ரோச் பண்ணாங்க கெளசல்யா. பெண் இயக்குநர்களோட படங்கள்ல நடிக்கிறதுக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும்கிறதால உடனே ஓகே சொல்லிட்டேன். `என் உடம்பு' குறும்படத்தைப் பார்த்துட்டு பாதிக்கப்பட்ட எந்தப் பெண்ணாவது `என் உடம்பை எனக்கெதிரா திருப்ப நீ யாரு'ன்னு தைரியமா கேட்டா, அது எங்களுக்கான வெற்றி'' என்கிறார் அழுத்தமாக.



source https://www.vikatan.com/social-affairs/women/movie-director-earthling-koushalya-speaks-about-her-en-udambu-movie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக