திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகிலிருக்கும் மருதுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவருக்குத் திருமணமாகி 13 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, சாந்தி கருத்து வேறுபாட்டின் காரணமாக, தன் கணவரைப் பிரிந்து விட்டார். அதனால், தன் தந்தையின் வீட்டில் வசித்து வந்தார்.
சாந்தி நன்னிலத்தல் இயங்கி வரும் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி ஒன்றில் முதல்வராக பணிபுரிந்து வந்தார். சாந்தியின் மகளும் அதே பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாள்களாகப் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்த சாந்தி, நேற்று முன் தினம் பள்ளிக்கூடம் சென்றிருக்கிறார். பின்னர், மதியம் 12 மணியளவில் பள்ளியிலேயே மயங்கி விழுந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்திருக்கிறார். இதனால் பதற்றமடைந்த சக ஆசிரியர்கள், அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு சாந்தியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் விஷம் அருந்தி இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து, சாந்தி தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன் தினம் அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாந்தியின் உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரின் தற்கொலைக்கான காரணம் உறுதி செய்யப்படாத நிலையில், இது சந்தேக மரணம் என பேரளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். தங்கள் மகள் சாந்தியின் தற்கொலைக்கு, பள்ளியின் தாளாளர் தான் காரணம் எனவும், அவர் சாந்திக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், குடும்பத்தினர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
மேலும், சாந்தி நிதி மோசடியில் ஈடுபட்டதாகவும், அதனால் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் பள்ளி நிர்வாகத்தினர் தவறான தகவல்களைப் பரப்பி, உண்மையான காரணத்தை திசைதிருப்புவதாகவும் குற்றம்சாட்டி, திருவாரூர்-மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் உள்ள பூந்தோட்டம் கடைத்தெருவில், அவரின் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், பேச்சுவார்த்தை நடத்தி, விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
சாந்தியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், போலீஸார் அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து, பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Also Read: தொடரும் படுகொலைகள்... திருவாரூர் திகில்!
source https://www.vikatan.com/news/crime/private-school-principal-commits-suicide-police-investigation-goes-on
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக