நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் கப்பலில் நடந்த போதைப்பொருள் பார்ட்டியில் கலந்துகொண்டபோது அவரும், அவரின் நண்பர்களும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்கள். அக்டோபர் இறுதியில் மும்பை உயர் நீதிமன்றம் ஆர்யன் கானுக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆர்யன் கான் விசாரணைக்காக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆர்யன் கானைக் கைதுசெய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே ஆர்யன் கானை விடுவிக்கப் பணப் பேரத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் இந்த வழக்கு விசாரணையிலிருந்து சமீர் வான்கடே விடுவிக்கப்பட்டதோடு, வழக்கு விசாரணை சிறப்பு விசாரணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆர்யன் கான் தனது ஜாமீன் நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும் என்று கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில் ஒவ்வொரு வாரமும் விசாரணைக்காக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையைத் தளர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். விசாரணை தற்போது சிறப்பு விசாரணைக்குழுவுக்கு மாற்றப்பட்டிருப்பதால் ஜாமீன் நிபந்தனையைத் தளர்த்த வேண்டும். ஒவ்வொரு முறையும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக செல்லும்போது போலீஸாரும் உடன் வரவேண்டியிருக்கிறது. இதனால் பத்திரிகையாளர்கள் அதிக அளவில் கூடுகின்றனர் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கிறது. இதில் நிபந்தனை தளர்த்தப்பட்டுவிட்டால் அடுத்தகட்டமாக ஆர்யன் கான் வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரி புதிய மனுவைத் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
source https://www.vikatan.com/news/india/exemption-from-appearing-for-trial-every-week-aryan-khan-petition-in-court
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக