Ad

சனி, 11 டிசம்பர், 2021

மும்பையில் இரு தினங்களுக்கு 144 தடை உத்தரவு: ஒமைக்ரான் கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை!

உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஒமைக்ரான் கொரோனா, மகாராஷ்டிராவிலும் பரவிவருகிறது. நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் தொற்று அதிகமாக இருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து மும்பை வந்த ஆயிரக்கணக்கானோர் கண்டுபிடிக்க முடியாத அளவுக்குத் தலைமறைவாக இருக்கின்றனர் என்கிற அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளன. அவர்கள் மூலம் ஒமைக்ரான் கொரோனா பரவும் அபாயம் இருக்கிறது.

மகாராஷ்டிராவில் இதுவரை 17 பேருக்கு ஒமைக்ரான் பரவியிருக்கிறது. ஒரே நாளில் 3 வயது குழந்தை உட்பட ஏழு பேருக்கு ஒமைக்ரான் தொற்று பரவியிருக்கிறது. மும்பையில் மூன்று பேருக்கும், புனேயில் நான்கு பேருக்கும் இந்தத் தொற்று பரவியிருக்கிறது. மும்பையில் ஒமைக்ரான் தொற்று பரவிய மூன்று பேரில் இரண்டு பேர் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வந்தவர்கள். இதையடுத்து தொற்று மேற்கொண்டு பரவாமலிருக்க மும்பையில் இரண்டு நாள்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வார்டில் டாக்டர்கள்

சனி, ஞயிற்றுக்கிழமைகளில் மும்பையில் பொதுக்கூட்டம், பேரணி போன்றவை நடத்தத் தடைவிதிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின்போதும் மகாராஷ்டிராதான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. தற்போது ஒமைக்ரான் கொரோனா தொற்றும் மகாராஷ்டிராவில் வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது. நாடு முழுவதும் 32 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இவர்களில் 17 பேர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். எனவே, புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவது குறித்து அரசு பரிசீலித்துவருகிறது. வரும் 15-ம் தேதியிலிருந்து மகாராஷ்டிராவில் ஒன்று முதல் 7-ம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டிருந்தது. தற்போது புதிய தொற்று காரணமாக அரசு, பள்ளிகளைத் திறக்கும் முடிவை மறுபரிசீலனை செய்துவருகிறது.



source https://www.vikatan.com/news/india/144-restraining-orders-issued-in-mumbai-as-a-action-against-omicron

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக