Ad

வியாழன், 2 டிசம்பர், 2021

அதிமுக: `உட்கட்சி விதிகள் திருத்தம், ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல்!' - பலனடையப் போவது யார்?

அ.தி.மு.க-வின் தலைமையகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில், நேற்று நடந்த அந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில், மொத்தம் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், சிறப்புத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு தொடர்பான தீர்மானம்தான், தற்போது தமிழக அரசியல் அரங்கில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. இந்த நிலையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலும் வரும் 7-ம் தேதி அந்தக் கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்டிருப்பது இந்த விவகாரத்தை மேலும் சூடாக்கியிருக்கிறது.

சென்னை இராயப்பேட்டையிலிருக்கும் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நேற்று செயற்குழு கூட்டம் நடைபெற்றது. முதலில் அ.தி.மு.க-வின் தற்காலிக அவைத்தலைவராக, அனைத்துல எம்.ஜி.ஆர் மன்றப் பொறுப்பாளரான தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, அ.தி.மு.க பொன்விழவை எழுச்சியுடன் கொண்டாடுவது, தி.மு.க-வின் பொய்யான வாக்குறுதிகளுக்குக் கண்டனம் உள்ளிட்ட 11 பொதுத் தீர்மானங்களும், ஒரு இரங்கல் தீர்மானமும், ஒரு சிறப்புத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக செயற்குழு

சிறப்புத் தீர்மானம்:-

*விதி 20 பிரிவு 2 சட்டத் திருத்தம்:-

இதுவரை கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுவந்தனர். ஆனால், இனிவரும் காலங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டத் திருத்த விதிமுறைகளின்படி கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேற்படி கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரையும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை வாக்கின் மூலம் இணைந்தே தேர்வு செய்வார்கள்.

*விதி 43 சட்டத் திருத்தம்:-

இதுவரை கழக சட்ட விதிகளை இயற்றவும், திருத்தவும், நீக்கவும், பொதுக்குழு அதிகாரம் படைத்திருந்தது. இனிமேல் கழக சட்டதிட்ட விதிகளை இயற்றவும், திருத்தவும், நீக்கவும், பொதுக்குழு அதிகாரம் படைத்ததாகும். ஆனால், இந்தச் சட்டதிட்டங்களின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டிருக்கும் கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மட்டும் மாற்றுவதற்கும், திருத்துவதற்கும் முடியாது.

*விதி 45 சட்டத் திருத்தம்:

இதுவரை கழக திட்ட விதிகளில் மாற்றம் மேற்கொள்வதற்கும், விலக்கு அளிப்பதற்கும், கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு அதிகாரம் உண்டு. ஆனால், இனிவரும் காலங்களில் இந்தச் சட்டதிட்டங்களின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டிருக்கும் கழக இணை ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மட்டும் விலக்கு அளிப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை... உள்ளிட்ட விஷயங்கள் சிறப்பு தீர்மானத்தில் இடம்பெற்றிருந்தன.

இந்த சிறப்புத் தீர்மானமானது பல்வேறு குழப்பங்களையும், விவாதங்களையும் அரசியல் அரங்கில் உருவாக்கியிருக்கிறது. கட்சியின் பொதுச்செயலாளராகி கட்சியின் ஒற்றைத் தலைமையாக மிளிர வேண்டும் என்று நினைத்த எடப்பாடி பழனிசாமிக்கு வைக்கப்ப்ட்ட செக்கா, இல்லை சமீபமாக கட்சிக்குள் ஆதரவு பெருகிவரும் ஓ.பி.எஸ்-ஸின் வளர்ச்சிக்குப் போடப்பட்ட முட்டுக்கட்டையா, இல்லை அ.தி.மு.க-வைக் கைப்பற்ற வெளியிலிருந்து பல அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும், சசிகலாவின் என்ட்ரியைத் தடுப்பதற்கான ஏற்பாடா என பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கின்றன.

அதிமுக செயற்குழு

இந்தத் தீர்மானம் குறித்து அரசியல் விமர்சகர்களிடம் கேட்டபோது, ``அ.தி.மு.க-வின் ஒற்றைத் தலைமையாக ஆதிக்கம் செலுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி காய்களை நகர்த்தியது என்னமோ உண்மைதான். முதல்வர் வேட்பாளர் தொடங்கி, எதிர்க்கட்சித் தலைவர், கொறடா நியமனம் வரை அவரின் கைதான் ஓங்கியிருந்தது. ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வி, கொடநாடு விவகாரம் ஆகியவை கட்சியினர் மத்தியில் எடப்பாடிக்கு சற்று செல்வாக்கைக் குறைத்தது. இதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த ஓ.பன்னீர்செல்வமும், கட்சித் நிர்வாகிகளைச் சந்திப்பது, மாவட்டச் செயலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில், முதல் அதிகாரமிக்க நபராக தான் இருக்கவேண்டும் என்பதற்கான நடவடிக்கைகள் இறங்கி வந்தார். மறுபுறம் சசிகலாவும் சில அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

Also Read: ரத்தத்தில் கையெழுத்து; அரசுப் பேருந்து ஓட்டுநர் டு அதிமுக அவைத்தலைவர் - யார் இந்த தமிழ்மகன் உசேன்?

இந்த நேரத்தில், இந்தத் தீர்மானமானது நிச்சயமாக எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான ஒன்றுதான். எடப்பாடி பழனிசாமி செல்வாக்கோடு இருந்த நேரத்தில், இப்படியொரு தீர்மானம் வந்திருந்தால் நாம் அதை பன்னீரின் வெற்றியாகப் பார்க்கமுடியும். சசிகலாவை உள்ளே கொண்டு வந்தோ, இல்லை பன்னீருக்கு கட்சியில் பெருகிவரும் ஆதரவால் தன் இருப்புக்குப் பாதிப்பு வருமோ என எடப்பாடி பழனிசாமி கலங்கியிருந்த நேரத்தில் மிகச் சாதுர்யமாக இப்படியொரு காரியத்தைச் செய்திருக்கிறார். கட்சியில் பொதுக்குழு உறுப்பினர்களைத் தனக்கு ஆதரவாக, பன்னீர் அணித் திரட்டிக் கொண்டிருந்த நேரத்தில், பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யமுடியாது என்கிற தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதேவேளை அவைத்தலைவர் தேர்வில் இந்தமுறை எடப்பாடியின் கை ஓங்கவில்லை என்பதே உண்மை. பொன்னையன் போன்ற நபர்களை அவைத்தலைவராக்கி தனக்குச் சாதகமாக சில காரியங்களைச் சாதித்துக்கொள்ள நினைத்த நேரத்தில், பன்னீர் தரப்பு அந்த இடத்துக்கு செங்கோட்டையனைத் தயார் செய்து டஃப் பைட் கொடுத்தனர். அதன் காரணமாக, இரண்டு பேருக்கும் பொதுவான ஒரு நபராகவும் அன்வர்ராஜாவை நீக்கியதற்குப் பரிகாரமாகவும் தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், இந்தத் தீர்மானம் நிச்சயமாக சசிகலாவுக்கு வைக்கப்பட்ட செக்தான். பொதுக்குழுவைக் கூட்டியது செல்லாது என அவர் தொடுத்திருக்கும் வழக்கையும் இது முடித்துவைக்கும்.

அன்வர்ராஜா

அதேபோல, சசிகலாவை ஆதரித்துப் பேசினால் மூத்த தலைவர்களாக இருந்தாலும் என்ன நடக்கும் என்பதை அன்வர்ராஜா நீக்கம் மூலம் மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளருக்கு என்ன அதிகாரம் இருந்ததோ, பொதுச் செயலாளர் தேர்வு எப்படி நடந்ததோ அதை அப்படியே ஒருங்கிணைப்பாளர் தேர்வுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். தவிர, ஒருங்கிணைப்பாளர் தேர்தல் தேதியையும் அறிவித்திருக்கிறார்கள். இதன் மூலம் தாங்கள் முறையாக கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்பதையும் பதிவு செய்வார்கள். ஓ.பி.எஸ் இதற்கு எப்படிச் சம்மதித்தார் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது'' என்கிறார்கள்.

ஆனால், ஓ.பி.எஸ் தரப்போ, ``நிச்சயமாக இது எங்களுக்குக் கிடைத்த வெற்றி. கட்சியில் இனி ஒருங்கிணைப்பாளரின் கண்ணசைவு இல்லாமல் எதுவும் நடக்காது. அனைத்து மாவட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றச் சொல்லியிருக்கிறோம். இனி அந்த அறிக்கையில் கையெழுத்துப் போடுங்க, இந்த அறிக்கையில் கையெழுத்துப் போடுங்க என எடப்பாடி பழனிசாமி எந்த அழுத்தமும் கொடுக்கமுடியாது'' என விளக்கம் தருகிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/article-explaining-whats-happening-in-aiadmk-party

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக