Ad

திங்கள், 6 டிசம்பர், 2021

`அபார்ஷன் பண்றதுக்கு முன்னாடி இந்த விஷயங்களையும் யோசிங்க!' - `பேச்சுலர்'கள் கவனத்துக்கு

`பேச்சுலர்' - ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம். அதில் ஹீரோவும் ஹீரோயினும் `லிவ் இன் ரிலேஷன்ஷிப்'பில் இருக்கிறார்கள். உடலுறவில் எப்போதும் உஷாராவே இருப்பவர்கள், ஏதோ ஒரு நேரத்தில் கவனமிழக்க... கர்ப்பமாகிறார் கதாநாயகி. ``கமிட்மென்ட்ஸ் இல்லாத ரிலேஷன்ஷிப்புல இதெல்லாம் எதுக்கு? கலைச்சுடலாம்" என முடிவெடுக்கும் இருவரும் மருத்துவரிடம் போகிறார்கள்.

Bachelor

தன் வயிற்றில் வளரும் `ட்வின்ஸ்' குழந்தைகளின் ஹார்ட் பீட்ஸை கேட்டு உருகிப்போகிற ஹீரோயின், ``இதெல்லாம் யாருக்கும் கிடைக்காதுடா.. நம்மளே வளர்த்துடலாம்டா.." எனக் கெஞ்ச, உச்சபட்ச கோபத்தில் கத்திவிட்டுப் போகிறார் ஹீரோ. `குழந்தையைக் கலைக்கலன்னா தன் குடும்பத்தோட மானம் மரியாதை கலைஞ்சிடும்' எனச் சொல்லி அபார்ஷன் செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார். `ஒரு மாத்திரை.. உடனே அபார்ஷன்.. இதுக்கு ஏன் இவ்ளோ பண்ற?' என்கிற ரேஞ்சில் இருக்கின்றன ஹீரோவின் வற்புறுத்தல்கள் அனைத்தும். அதன் பிறகு நடந்தது என்ன? ஹீரோயின் என்ன முடிவெடுத்தார்... என்பது படத்தின் மீதிக்கதை.

இப்போது நாம் கான்செப்டுக்கு வருவோம்... `பேச்சுலர்' படத்தில் காட்டியிருப்பதுபோல, திருமணத்துக்கு முன்பு எத்தனையோ பேர் அபார்ஷன் செய்வதற்காக தினந்தினம் மருத்துவமனைக்கு வருவதாகச் சொல்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள். இந்த `அபார்ஷன்' லிஸ்ட்டில் திருமணமான தம்பதியரும் இருக்கிறார்கள்.

pregnancy

`வேலை, படிப்பு, வெளிநாட்டுப் பயணம், ஆண் குழந்தைதான் வேணும்' - இது மாதிரி எத்தனையோ காரணங்களுக்காக `அபார்ஷன்' செய்துகொள்கிறார்கள். கையில வளரும் தேவையில்லாத நகத்தை வெட்டுகிற மாதிரி, வயிற்றில் வளரு; குழந்தையைக் கலைப்பது அவ்வளவு ஈஸியான விஷயமா..?

`அபார்ஷன்' ஏன் ஆபத்தான விஷயம்... அதனால பெண்களுக்கு ஏற்படுகிற பாதிப்புகள் என்னென்ன? - விளக்கிச் சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் கனிமொழி.

மகப்பேறு மருத்துவர் கனிமொழி

``அபார்ஷன் பண்ற முடிவோட மகப்பேறு மருத்துவர்களை நாடி வர்ற திருமணமாகாத கப்புள்ஸ் அதிகம். அதேமாதிரி திருமணமான தம்பதிகளோட வருகையும் இப்போ அதிகரிச்சிக்கிட்டு இருக்கு. தங்களுக்கு உருவான முதல் குழந்தையைக் கலைக்கச் சொன்ன தம்பதிகள்கூட இருக்காங்க. கணவர், குடுபத்தாரோட வற்புறுத்தல் காரணமா கருவைக் கலைக்கச் சம்மதிக்கிற பெண்களும் இருக்காங்க. `கருவைக் கலைச்சா பொண்ணோட உயிருக்கு ஆபத்து; முடியாது'னு என் கணவர்கிட்ட சொல்லிடுங்க டாக்டர்'னு பர்சனலா சொல்ற சில பெண்களையும் பார்த்திருக்கேன்.

அபார்ஷன் முடிவோட வர்ற தம்பதிகள்ல 100-க்கு 5 பேர்தான் எங்க ஆலோசனைக்குப் பிறகு குழந்தையைப் பெற்றுக்கலாம்னு முடிவெடுக்குறாங்க. மீதமுள்ள 95 பேர் அபார்ஷன் பண்ற முடிவுல உறுதியா இருக்காங்க. வேலை, படிப்பு உள்ளிட்ட இன்னும் பல விஷயங்களை அபார்ஷனுக்கான காரணங்களாகச் சொன்னாலும், சம்பந்தப்பட்டவங்களோட அலட்சியம்தான் இதுக்கு முக்கியமான காரணமா இருக்கு. ஒரு கரு உருவாகுறதுல ஆண்-பெண் இருவரும் சம்பந்தப்பட்டிருந்தாலும் அதை `அபார்ஷன்' பண்ணும்போது ஏற்படுற உடல் ரீதியிலான பாதிப்புகளைப் பெண்கள் மட்டுமே அனுபவிக்கிறாங்க. இதை தன் துணையை அபார்ஷனுக்கு வற்புறுத்துற ஒவ்வோர் ஆணும் உணரணும்.

Pregnancy

Also Read: உயிரையே பறிக்குமா கருக்கலைப்பு மாத்திரைகள்? சென்னை அதிர்ச்சி சம்பவமும் எச்சரிக்கையும்!

கருவைக் கலைக்கும்போது அது முழுவதுமாக வெளிவராமல் கருப்பையிலேயே தங்கிவிட வாய்ப்பிருக்கு. இதனால் அந்தப் பெண் அடுத்த முறை கருவுறுவதில் பிரச்னை ஏற்படலாம். சிலருக்கு அதிக ரத்தபோக்கு, தாங்கமுடியாத வலி, கர்ப்பப்பையில் தொற்று ஏற்படலாம். சட்டத்திற்குப் புறம்பான வகையில் கருக்கலைப்பு செய்ய நினைக்கிற சில தவறான மருத்துவர்கள்கிட்டபோய் மாட்டிக்கவும் வாய்ப்பிருக்கு. சரியான, பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்யப்படாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணின் உயிருக்கே கூட ஆபத்து ஏற்படலாம்.

வயித்துல வளர்ற குழந்தைக்கு இதயத்துடிப்பு குறைவா இருக்கு, மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்னை இருக்கு, சரிசெய்யவே முடியாத உடல்நல பாதிப்பு இருக்கு என்னும் பட்சத்தில் தாராளமாகக் கருக்கலைப்பை மேற்கொள்ளலாம். இந்தக் காரணங்கள் கூட 24 வாரங்களுக்கு உட்பட்ட கருவுக்கு மட்டுமே பொருந்தும். 24 வாரங்களுக்கு மேற்பட்ட கருவைக் கலைக்கிறது சட்டப்படி குற்றம். குழந்தைக்குச் சரி செய்ய முடியாத பிரச்னை இருக்குறது 24-வது வாரத்திற்கு மேலதான் தெரிய வருது என்னும் பட்சத்துல, சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் உரிய சான்றிதழ்களை வாங்கி கருக்கலைப்பை மேற்கொள்ளலாம்.

Pregnancy (Representational Image)

குழந்தை வேண்டாம், செக்ஸ் மட்டும் போதும்னு முடிவெடுக்குறவங்க அதுக்கான முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள்ல கவனமா இருக்கணும். கருத்தடை சாதனங்களை உபயோகப்படுத்தும் பட்சத்தில் தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்க்கலாம். உடலுறவு மேற்கொள்ளும்போது ஆணுறை கிழிந்துவிட்டால் அதன் வழியே விந்து வெளியேறி கரு உருவாக வாய்ப்பிருக்கு. இப்படி ஆகும் பட்சத்தில் கரு உருவாவதைத் தவிர்க்க அடுத்த 24 மணிநேரத்தில் ஒரு மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்." என்று முடிக்கிறார் மருத்துவர் கனிமொழி.

அபார்ஷனுக்குப் பிறகு பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள். இதெல்லாம் `பேச்சுலர்' ரக ஆண்களுக்கு புரிவதே இல்லை!



source https://www.vikatan.com/health/healthy/gynaecologist-explains-about-health-risks-of-abortion

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக