``பணம் சம்பாதிப்பது எளிது; ஆனால் செல்வந்தராகக் கடைசி வரை வாழ்வது கடினம்" என்கிறார் பேட்ரிக் ரஷ் என்னும் பொருளாதார ஆலோசகர்.
வெறும் பணக்காரார் ஆவதோடு நின்றுவிடாமல், கடைசி வரை வசதியாக வாழும் செல்வந்தர்களாக ஆவதே முக்கியம் என்பதே இன்று பொருளாதார ஆலோசகர்கள் வலியுறுத்தும் உண்மை.
காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்பது போல கையில் பணமும், உடலில் வலுவும் இருக்கும்போதே முழு வாழ்க்கைக்கும் தேவையான வசதிகளை தயார் செய்து கொள்வது செல்வந்தராவதற்கு அவசியமான ஒன்று. இது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் சிலர் மட்டும் அதை சீரியஸாக கடைப்பிடிப்பதும், இன்னும் சிலர் கிடைக்கும் வாய்ப்புகளைக் கோட்டை விட்டு வாழ்வின் ஏற்ற தாழ்வுகளில் சிக்கித் தவிப்பதும் நாம் தினம் பார்க்கும் ஒரு விஷயம். அவரவர் தலையெழுத்து என்று இதனைக் கடந்து போக முடியாது. ஏனெனில் இதன் பின்புலத்தில் பல உளவியல் சார்ந்த காரணங்கள் உள்ளன. இதனை ஆராய்வதை பிஹேவியரல் ஃபைனான்ஸ் என்றழைக்கிறார்கள்.
நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்!
இந்த பிஹேவியரல் ஃபைனான்ஸ் குறித்த ஆராய்ச்சி தற்சமயம் பிரபலமாகி வருகிறது. நம் முடிவுகள் உணர்ச்சிபூர்வமாக இருக்கும் பட்சத்தில் அறிவின் ஆற்றல் அங்கு மங்கி, தவறுகள் நேர்ந்து நாம் பணத்தை இழக்க நேர்கிறது. உலகில் யாரும் இதற்கு விதிவிலக்கில்லை.
உதாரணமாக பங்குச் சந்தையில் புதிதாக ஈடுபடுபவர்கள் சந்தை எழும்போது ஆவலாக முதலீடு செய்வதும், சந்தை இறங்கும்போது வரும் சிறிய நஷ்டங்களால் மனம் சோர்ந்து சந்தையை விட்டு விலகுவதும் வழக்கமாக நடக்கும் ஒன்று. அதேபோல், லாபம் பார்க்கும் ஆசையில் நல்ல பங்குகளை விற்பதும், நஷ்டம் தரும் பங்குகளை ஏன், எதற்கு என்று ஆராயாமல் போர்ட்ஃபோலியோவில் வைத்திருப்பதும் கூட நடக்கிறது. இவையெல்லாம் நம் போர்ட் ஃபோலியோவை சிதைக்க வல்லவை என்று அறிந்தும் அவற்றை செய்யத் தூண்டுபவை நம் உணர்வுகள்.
Also Read: `இவற்றையெல்லாம் செய்தால் ஓய்வுக்காலத்தை பயமின்றி கழிக்கலாம்!' - பணம் பண்ணலாம் வாங்க - 53
ஓருவன் மனது ஒன்பதடா; அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா!
மேற்கண்ட வரிகளின் உண்மையை நிறுவும் பல்வேறு மனப் பிழைகளை வல்லுநர்கள் கண்டறிந்து வருகிறார்கள். நாம் செய்த ஒரு முதலீடு தவறு என்று புரிந்தபின்னும் ஒப்புக் கொள்ள மனமின்றி பிடிவாதமாகத் தொடர்வது, எண்டோமென்ட் பயாஸ். நம் தவறைச் சுட்டிக்காட்டி நம் மனம் பிறாண்டும்போது, அதை அடக்க நமக்கு ஒத்துவரும் செய்திகளையே படித்து, நம்மைத் தவறென்று சுட்டும் செய்திகளை ஒதுக்குவது, காக்னிடிவ் டிசொனனஸ்.
இது போன்ற இருபத்தோரு மனப்பிழைகளை வல்லுநர்கள் பட்டியலிடுகிறார்கள். நிதி நிர்வாகத்தில் ஈடுபடும் அனைவருமே அன்றாடம் பல முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. அப்படி எடுக்கும் முடிவுகள் உணர்வுபூர்வமாக அல்லாமல், அறிவுபூர்வமாக அமைய பிஹேவியரல் ஃபைனான்ஸ் கை கொடுக்கிறது. நாம் ஒவ்வொருவருமே நமது போர்ட்ஃபோலியோவின் மேனேஜர் என்பதால் நம் மனப்பிழைகளை கண்டறிந்து களைவது சரியான முடிவுகளை எடுக்க உதவும்.
Also Read: ஓய்வுக்காலத்தை நெருங்குகிறீர்களா? உங்களுக்காகத்தான் இந்த யோசனைகள்! - 54
முடிவுரை
கடந்த 55 அத்தியாயங்களில் நம் வாழ்வை வளமாக்க பர்சனல் ஃபைனான்ஸ் எப்படி உதவுகிறது என்று பார்த்தோம். கடைசி வரை ஒருவர் செல்வந்தராக வாழ, சில நல்ல பழக்கங்கள் தேவை. அவை என்னென்ன?
-
பொருளாதாரத்தில் தேர்ந்தவர்களுடன் பழகுதல், விவாதித்தல் போன்ற செயல்களால் அறிவை விஸ்தரிக்க வேண்டும். ஆன்லைனிலும், யூட்யூபிலும் காணக் கிடைக்கும் பொருளாதார வகுப்புகள், படிப்புகள், செமினார்கள், விவாதங்கள் ஆகியவற்றில் பங்குபெற்று அறிவைச் செறிவாக்குதல் நல்லது.
-
நம் குறிக்கோள்களையும், அதற்கான வரவு செலவுத் திட்டங்களையும் முதலிலேயே தெளிவாக நிர்ணயித்து, அதை செயல்படுத்த முயலவேண்டும். தேவைப்பட்டால், பொருளாதார ஆலோசகர்களின் உதவியை நாடலாம்.
-
நல்ல வேலையில் இருந்து சம்பளம் வாங்குபவர்கள் கூட அதை மட்டுமே நம்பி இராமல், வருமானத்திற்கு இன்னொரு சிறிய வழியையும் ஏற்படுத்திக் கொள்ளலாம். அது அவரவர் மனதுக்குப் பிடித்த, பொழுதுபோக்கு சார்ந்த விஷயமாக இருந்தால் உற்சாகமாக ஈடுபட இயலும்.
4. பணத் தோட்டமும் ஒரு மலர்த் தோட்டம் போன்றதுதான். நட்ட செடியை அடிக்கடி பிடுங்கி வேரின் வளர்ச்சியை யாரும் கண்காணிப்பதில்லை. அதேபோல் நம் தேவைக்கேற்ப பணம் வளர்க்க சில வழிகளை நிர்ணயித்தபின், அவசரப்படுவதோ, அடிக்கடி வழிகளை மாற்றுவதோ தவறு. லாப நஷ்டம் பற்றிய குறுகிய கண்ணோட்டங்களைத் தவிர்த்து, ஒவ்வொரு சொத்தும் வளர்வதற்கான கால அவகாசங்களைத் தரவேண்டும்.
Also Read: எந்த சொத்துகளில் முதலீடு செய்வது உங்களுக்கு ஏற்றது? இந்த நான்கில் இருக்கிறது விடை! - 55
5. இன்றைய சூழலில் இந்தியரின் சராசரி வாழ்நாள் 76 வயதாக இருக்கிறது. ரிட்டயர் ஆனபின் இருபது வருட காலம் வருமானமின்றி கடத்த வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தவர்களும், வாழ்நாளின் எல்லை வரை இப்போதுள்ள வசதிகளுடன் வாழ விரும்புகிறவர்களும் கண்டிப்பாக தங்கள் முதலீட்டின் எல்லையையும் விஸ்தரிக்க வேண்டும்.
கடந்த பல வாரங்களாக உங்களுடன் பயணித்து மகிழும் வாய்ப்பை எனக்கு வழங்கிய நாணயம் விகடனுக்கும், அவ்வப்போது ஃபோனிலும், மெயிலிலும் தொடர்பு கொண்டு ஊக்கமளித்த நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு இந்தக் கட்டுரைத் தொடரை நிறைவு செய்கிறேன். இதைப் படித்த அனைவரும் பணக்காரராக மட்டுமின்றி செல்வந்தராகவும் ஆவதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
- தொடர் நிறைவடைந்தது
source https://www.vikatan.com/business/finance/important-financial-habits-which-makes-you-wealthy-panam-pannalam-vanga-series
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக