Ad

ஞாயிறு, 12 டிசம்பர், 2021

தற்கொலைக்கு தூண்டியதாக போராட்டம்; காரில் 36 மடிக்கணினிகள்! -தலைமை ஆசிரியையை தடுத்து நிறுத்திய மக்கள்

ஆசிரியரை தூக்கமாத்திரை சாப்பிட்டு  தற்கொலை முயற்சிக்கு தூண்டியதாக கூறி, தலைமையாசிரியரை இடமாற்றம் செய்யக் கோரி ஆசிரியர்கள்  உள்ளிருப்பு போராட்டம் செய்துவருகின்றனர். இந்த வேளையில், தலைமை ஆசிரியர் தனது காரில் 36 அரசு மடிக்கணினிகளை எடுத்துக் கொண்டு தப்ப முயன்றதாக தடுத்து நிறுத்தி பெற்றோர்கள் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

36 மடிக்கணினிகள்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கோமல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1,084 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 34 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். கடந்த 7-ம் தேதி அப்பள்ளியின் தலைமை ஆசிரியை சித்ரா, ஆசிரியர் செந்தில் என்பவரை மாணவர்கள் மத்தியில்  அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பள்ளியிலேயே தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டார் ஆசிரியர் செந்தில். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் தற்போது நலமுடன்  வீடு திரும்பியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் மனு அளித்தனர். புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததோடு, தலைமை ஆசிரியர்  சித்ரா மீண்டும் அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிக்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த  20 -க்கும் மேற்பட்ட ஆசியர்கள், வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போடாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் நடுவே தலைமை ஆசிரியை சித்ரா தனது காரில் பள்ளியை விட்டு வெளியேற முயற்சித்தபோது, பெற்றோர், ஆசிரியர் சங்கத்தினர் காரை வழிமறித்தனர்.

Also Read: பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் தற்கொலை முயற்சி - போலீஸ் விசாரணை!

அப்போது, கடந்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 36 மடிக்கணினிகள் அந்த காரில் இருந்ததால், பொதுமக்கள்  அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பள்ளி வளாகத்தின் வாசல் கதவை அடைத்து பூட்டினர். தகவலறிந்து வந்த பாலையூர் காவல் ஆய்வாளர்  விசித்ராமேரி மற்றும் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆசிரியர் தற்கொலை முயற்சி

மடிக்கணினிகள் திரும்ப பள்ளியில் ஒப்படைக்கப்பட்டது. 3 மணி போராட்டத்திற்கு பிறகு  'தலைமை ஆசிரியர் மீது விசாரணை நடத்தி துறைரீதியான நடவடிக்கை எடுக்க கல்வித்துறைக்கு பரிந்துரைக்கப்படும்' என காவல்துறையினர் அளித்த உத்தரவாதத்தை தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/education/the-headmistress-who-carried-36-laptops-in-the-car-stopped-by-the-public

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக