''கடந்த 10 ஆண்டு காலத்தில் அ.தி.மு.க அரசு இலங்கைத் தமிழருக்காக எந்த நன்மையும் செய்யவில்லை. அவர்களைப் பற்றிக் கவலையும் படவில்லை. இந்த நிலையில், தி.மு.க அரசு பொறுப்பேற்றவுடன் இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுத் திட்டங்களை மீண்டும் தொடங்கியிருக்கிறோம். அவர்கள் அகதிகள் அல்ல. அநாதைகளும் அல்ல. அவர்களுக்கு நாம் இருக்கிறோம்'' என தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியது தமிழக அரசியல் களத்தில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே மிகப்பெரிய விவாதமாக வெடித்துள்ளது.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு துறை சார்ந்தும் சமூகத்தில் பலதரப்பட்ட மக்களைக் கவனத்தில்கொண்டும் பல திட்டங்களை அறிவித்து வருகிறார். அந்தவகையில், முகாமில் வாழும் ஈழத் தமிழர்களுக்காக 317 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்களை அவர் அறிவித்தார். இலங்கை அகதிகள் முகாம் என்றிருந்ததை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் எனப் பெயர் மாற்றினார்.
முதல்வர் அறிவித்த திட்டங்களில், 'முகாம்களில், மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7 ஆயிரத்து 469 வீடுகள், 231 கோடியே 54 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டித்தரப்படும். அதில் முதற்கட்டமாக 3 ஆயிரத்து 510 புதிய வீடுகள் கட்டுவதற்கு, நடப்பு நிதி ஆண்டில் 108 கோடியே 81 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்' என்கிற அறிவிப்பு முதன்மையானது. அந்தவகையில், தமிழகம் முழுவதும் உள்ள 106 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டும் திட்டத்தின் தொடக்க விழா வேலூரை அடுத்த மேல்மொணவூரில் நடைபெற்றது. அங்கு, 220 இலங்கை தமிழர் குடும்பங்கள் உள்பட 3,510 பேருக்கு குடியிருப்பு வீடுகள் கட்டும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது அதிமுக குறித்து முதல்வர் தெரிவித்த கருத்துதான், தற்போது மிகப்பெரிய விவாதமாக உருவெடுத்துள்ளது.
முதல்வரின் கருத்துக்கு உடனடியாக, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நான்கு பக்கத்தில் பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ''1980-களில் தனி ஈழத்துக்காக நடைபெற்ற போர் உச்சத்தில் இருந்தபோது, அதிமுகவும் எம்ஜிஆரும் இலங்கைத் தமிழர்களுக்கு பல வழிகளில் உறுதுணையாக இருந்தது உலகுக்குத் தெரியும். அந்த நேரத்தில், டெசோ, டெலோ போன்ற அமைப்புகளை நிறுவி, இலங்கைத் தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தியது யார் என்பதையும் மக்கள் நன்கறிவார்கள். இலங்கையில் இருந்து தமிழர்கள் தமிழகத்துக்கு அகதிகளாக வந்தபோது, அவர்களைப் பாதுகாத்தது எம்ஜிஆர் அரசும், தொடர்ந்து ஜெயலலிதா அரசும்தான் என்பதை முதல்வர் மறைத்துவிட முடியாது. திமுக ஆட்சியில் இருந்தபோதெல்லாம், இலங்கைத் தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லை. 2009-ல் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி, 7 மணி நேர உண்ணாவிரதம் நடத்தினார். அவர் கூறியதை நம்பி பதுங்கு குழிகளில் இருந்து வெளியில் வந்த இலங்கைத் தமிழர்களை, சிங்களராணுவத்தினர் கொன்று குவித்ததை யாரும் மறக்க முடியாது.
இலங்கை தமிழ்ப் போராளியின் தாயாரை விமானத்தில் இருந்து இறங்க விடாமல் திருப்பியனுப்பிய திமுக அரசையும் அக்கட்சித் தலைவரையும் மக்கள் மறக்கவில்லை. அதிமுக ஆட்சியில், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசின் உதவிகளுடன் தமிழக மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. தமிழக மாணவர்கள் போன்றே இலங்கைத் தமிழ் மாணவர்களுக்கும் பிளஸ்-2 வரை இலவசக் கல்வி மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. மேலும், பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றபோது, பிரதமரிடம் அளித்த கோரிக்கையில், இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக்குடியுரிமை வழங்குமாறு வலியுறுத்தி கடிதம் வழங்கினார். நான் முதல்வரான பின்னர், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்தேன். இலங்கைத் தமிழர் பிரச்னையில அதிமுக அரசு ஆக்கப்பூர்வமான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது ஆளும் திமுகவைப்போல என்றுமே இரட்டை வேடம் போட்டதில்லை'' எனத் தெரிவித்திருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவரின் திமுக மீதான விமர்சனங்கள் குறித்து, அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்,
'' 1983-ல் இலங்கைத் தமிழர் பிரச்னையை சர்வதேச அளவில் கொண்டு சென்றது திமுக. அதை யாராலும் மறுக்க முடியாது. 1984-ல் இலங்கைத் தமிழர்களுக்காக முதன்முதலில் உயிர்நீத்த உதயசூரியன் திமுகவைச் சேர்ந்தவர். டெசோ அமைப்பு குறித்த வரலாறு தெரியாமல் எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருக்கிறார். இலங்கைத் தமிழர்களுக்காக திமுக ஒருங்கிணைத்த மாநாட்டில், அடல்பிகாரி வாஜ்பாய் முதல் ஜார்ஜ் பெர்ணான்டஸ் வரை பல தலைவர்கள் கலந்துகொண்டனர். நான்கு மாநில முதலவர்கள் கலந்துகொண்டனர். அப்போதுதான், இலங்கைத் தமிழர் விவகாரம் இந்திய அளவில் கவனம் பெற்றது. பார்வதி அம்மாவின் சிகிச்சை குறித்து, முதல்வராக இருந்தவர் இப்படிப் பேசுவது அதிர்ச்சியாக இருக்கிறது.
பார்வதி அம்மா இங்கே சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதியளிக்க வேண்டியது ஒன்றிய அரசு. அவர்கள் மறுத்ததுக்கும் ஜெயலலிதாதான் காரணம். ஆன்டன் பாலசிங்கம் இங்கே சிகிச்சை எடுத்துக்கொள்ள கேட்டபோது ஜெயலலிதா அனுமதிக்காமல் மறுத்துவிட்டார். அதைக் காரணம் காட்டித்தான் பார்வதி அம்மாவுக்கு அனுமதி மறுத்தது ஒன்றிய அரசு. ஆனால், விஷயம் கேள்விப்பட்டவுடன் உடனடியாக கலைஞர் அதற்கான முயற்சிகளை எடுத்தார். ஆனால், அதற்குள்ளாக அவரை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள். இதுதான் நடந்த வரலாறு. அதேபோல இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக ஆட்சியை இழந்தது திமுகதான். ஆனால், இலங்கைலியிருந்து பிரபாகரனைக் கொண்டுவந்து இங்கே தூக்கில் போடவேண்டும் எனப் பேசியவர், தீர்மானம் நிறைவேற்றியவர் ஜெயலலிதா. திமுக இதுவரைக்கும் அதுபோன்ற தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறதா?
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் துரோகம் இழைத்தது ஜெயலலிதாவும் எடப்பாடி பழனிசாமியும்தான்'' என்கிறார் அவர்.
முதல்வரின் விமர்சனம், எடப்பாடி பழனிசாமியின் பதிலடி குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாமிடம் பேசினோம்,
'' ஈழத்தமிழர்களுக்கு அதிமுக எதுவுமே செய்யவில்லை என்று சொல்வதை ஏற்கமுடியாது. காரணம், அதிமுகவின் செயல்பாடுகளை நாம் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து பார்க்கவேண்டும். 1986-லேயே போராளிக் குழுவுக்கு நான்கு கோடி ரூபாயை தந்தவர் எம்.ஜி.ஆர். அவர்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்வதற்கு இடம் கொடுத்தார். ராஜீவ் மரணத்துக்குப் பின் ஜெயலலிதா ஒரு நிலைப்பாட்டில் இருந்தார். ஆனால், 2009-க்குப் பிறகு அவர் முற்றிலுமாக ஆதரவான நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டார். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பல்வேறு விஷயங்களைச் செய்திருக்கின்றனர்.
அதேபோல, அகில இந்தியத் தலைவர்களை அழைத்து டெசோ மாநாடு நடத்தி, தேசிய அளவில் ஈழத்தமிழர் பிரச்னையை எடுத்துச் சென்றதில் கலைஞரின் பங்கு முதன்மையானது. ஆனால், 1990-ல் சென்னையில் நிகழ்ந்த பத்மநாபா படுகொலை கலைஞருக்கு நெருக்கடியையும் வருத்தத்தையும் கொடுத்தது. தொடர்ந்து, திமுக ஆட்சி கலைக்கப்பட்டதற்கும் விடுதலைப் புலிகளின் நடமாட்டமே காரணமாகச் சொல்லப்பட்டது. 1989-ல் வைகோவின் ஈழப்பயணமும் கலைஞருக்கு சங்கடத்தைக் கொடுத்தது. அதற்கடுத்து, 1991-ல் ராஜீவ் கொலையின் காரணமாகவே திமுக படுதோல்வியைச் சந்தித்தது. இந்த சம்பவங்கள்தான் திமுகவுக்கு இந்த விவகாரம் 'ஹாட் கேக்'காக மாறிப்போனது. ஈழத்தமிழர் விவகாரத்தை இரண்டு கட்சிகளும் அணுகியதை முழுமையாக சரி, தவறு என்கிற முடிவுக்கு வரமுடியாது. அதேவேளை,அதிமுக எதுவுமே செய்யவில்லை என்பதை ஏற்கமுடியாது'' என்கிறார் அவர்.
இந்த விவகாரம் தொடர்பாக, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகுவிடம் பேசினோம்,
'' தனிநபர், கட்சி, அரசாங்கம் என மூன்று வகைகளில் நாம் ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்த இரண்டு அமைப்புகளின் செயல்பாடுகளைப் பார்க்கவேண்டும். தனிப்பட்ட முறையில் எம்.ஜி.ஆர் நிறையச் செய்திருக்கிறார். கலைஞர், ஜெயலலிதா அந்தளவுக்கு உரிமை கொண்டாட முடியாது. கட்சி அடைப்படையில் பார்த்தால், அமைதிப்படை காலத்தில் அதை எதிர்த்து நின்றது கலைஞரின் முக்கியமான சாதனை. எம்.ஜி.ஆர் தனிப்பட்ட முறையில் ஆதரித்தாலும், கட்சியை அதில் ஈடுபடுத்தியதில்லை. தமீழீழத்துக்கு ஆதரவாக ஒரு போராட்டத்தையோ மாநாட்டையோ அவர் நடத்தியது இல்லை. எந்தக் காலத்திலும் அதிமுக சார்பில் ஒரு தீர்மானம்கூட வந்ததில்லை. அதேபோல, காளிமுத்து வேகமாக ஏதாவது கருத்துச் சொன்னாலும், அது அவரின் சொந்தக் கருத்து என எம்.ஜி.ஆர் சொல்லிவிடுவார். ஆனால்,வைகோ தீவிரமாக பேசியபோது கலைஞர் அவரின் தனிப்பட்ட கருத்து எனச் சொன்னதில்லை. இரண்டு கட்சிகளின் அரசாங்கங்களைப் பொறுத்தவரை கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவரும் ஈழ ஆதரவு சக்திகளை ஒடுக்கியதில் ஒரே மாதிரிதான் நடந்துகொண்டனர். பலரைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர்.
அதேவேளை, கொள்கை அளவில் போருக்கு எதிராக தமிழர்களுக்கு ஆதரவாக கருத்துக்களைத் திரட்டியதில் இரண்டு அரசுகளுக்கும் பங்கு இருக்கிறது. 2008-09 போர்க்காலத்தில் போருக்கு எதிரான தீர்மானங்களை மூன்று முறை சட்டமன்றத்தில் கலைஞர் நிறைவேற்றினார். மத்திய அரசிலும் அப்போது பங்கு வகித்தார் அது வேறு செய்தி. அதேபோல, ஜெயலலிதாவும் ஆட்சிக்கு வந்தபிறகு சட்டமன்றத்தில் ஈழத்துக்கு ஆதரவாக தீர்மானங்களைக் கொண்டு வந்தார். 'இலங்கைமீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவேண்டும்' என்றார். அதேபோல, முகாம்களில் இருப்பவர்களுக்கும் வீடு கட்டிக்கொடுப்பது போன்ற விஷயங்களைத்தான் இரண்டு அரசுகளும் செய்கிறார்களே தவிர அவர்களின் படிப்புக்கு உரிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. அவர்களுக்குப் போராடும் உரிமை என்பது இல்லை. கலைஞர் சிறப்பு முகாமை ஆரம்பித்தார், அதிமுகவும் அதை மூடவில்லை. ஈழத் தமிழர் விவகாரத்தில், ஒரு நாணயத்தின் இருபக்கம்போல நன்மை, தீமை என இரண்டையும் இரண்டு கட்சிகளும் செய்திருக்கின்றன என்பதே சரி'' என்கிறார் அவர்.
Also Read: `ஈழத்தமிழர்' துரோகம், பிண அரசியல்... எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தி.மு.கவின் பதில் என்ன?
ஆட்சிக்கு வந்தபிறகு முதல்வர் ஸ்டாலின் முகாமில் வாழ்ந்துவரும் ஈழத்தமிழர் சார்ந்து எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து, இறுதி யுத்தத்தின்போது தமிழகத்தில் தஞ்சமடைந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் பேசும்போது,
''தமிழக அரசு அகதிகள் முகாம் என்பதை மறுவாழ்வு முகாம் என்று பெயர் மாற்றியிருப்பதும் பல புதிய திட்டங்களை அறிவித்திருப்பதும் பாராட்டுக்குரியது. அகதிகளின் சிக்கலைப் புதிய கண்ணோட்டத்துடன் இந்த அரசு அணுகுவதை இந்த அறிவிப்புகள் உணர்த்துகின்றன. அகதிகளுக்கான வாழ்வாதாரத் தேவைகளைப் போலவே எமது மனித உரிமை மற்றும் சிவில் உரிமைகளை உறுதி செய்வதும் முக்கியத்துவம் உடையது.. ஈழத் தமிழர்களை சிறப்பு முகாம்களில் அடைத்து வைக்கும் கொள்கையைக் கைவிட வேண்டும். மறுவாழ்வு முகாம்களின் நிர்வாகத்தை முழுக்கமுழுக்க மறுவாழ்வுத் துறைதான் நடத்த வேண்டும். உளவுப் பிரிவின் கட்டுப்பாடுகளை முற்றாக விலக்க வேண்டும், அது மட்டுமே எம்மக்களுக்கு ஆசுவாசத்தைக் கொடுக்கும்'' என்கிறார் அவர்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/who-did-the-most-for-eelam-tamils-dmk-vs-aiadmk-clash-and-some-reminder
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக