முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரைத் தேக்கி வைக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் 137 அடியை எட்டியதுமே அண்மையில் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ``அணையில் தண்ணீர் திறப்பு குறித்து தமிழக அரசு தரப்பில் எவ்வித உத்தரவும் வழங்கப்படவில்லை. தேனி மாவட்ட ஆட்சியருக்கு கூட இந்தத் தகவல் தெரிவிக்கப்படவில்லை." என்று எதிர்க்கட்சிகளால் இந்த விவகாரம் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கேரள அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு - வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் தமிழக - கேரள மாநில எல்லையான குமுளி சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதற்காக வாகனங்களில் விவசாயிகள் தேனி மாவட்டம் கூடலூர் வழியாக எல்லையை நோக்கி வந்தனர்.
Also Read: ``முல்லை பெரியாறு அணையை தமிழக அரசு தாரை வார்த்துவிட்டது!" - கூட்டத்தைப் புறக்கணித்த விவசாயிகள்
அவர்களை உத்தமபாளையம் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தலைமையிலான போலீஸார் லோயர்கேம்ப் பகுதியில் தடுத்து நிறுத்தினர்.
இதனால் போலீஸாருடன், விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் உத்தமபாளையம் வட்டாட்சியர் அர்ஜூனனிடம் முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிட்டு வருவதற்கு அனுமதி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கேரள அரசை கண்டித்து ஐந்து மாவட்ட விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், `முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு, கட்டுப்பாடு, உரிமை அனைத்தும் தேனி மாவட்ட ஆட்சியர் வசம் வர வேண்டும். அணை பகுதிக்குள் கேரள எம்பிக்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் வரவேண்டும் என்றால், தேனி ஆட்சியரிடம் அனுமதி பெற்று வரவேண்டும். அத்துமீறி நுழைந்தால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக கட்டுப்பாட்டில் உள்ள அணையில் தண்ணீர் உரிமையைப் பறிக்கும் செயலுக்கு அரசு துணைபோகக்கூடாது. அணை விவகாரத்தில் கேரள அரசின் அத்துமீறல்கள் தொடர்பான அறிக்கையை தேனி ஆட்சியர் தமிழக அரசுக்கு அறிக்கையாக அனுப்ப வேண்டும்' எனக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Also Read: முல்லைப்பெரியாறு அணை: கேரளாவின் ஆய்வு, தொடர் கோரிக்கை... இரண்டு மதகுகள் வழியாக உபரிநீர் திறப்பு!
அப்போது ஐந்து மாவட்ட பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், ``முல்லைப் பெரியாறு அணையில் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க வருகின்ற நவம்பர் 12-ம் தேதி தேனியில் இருந்து முல்லைப்பெரியாறு அணை நோக்கி ஐந்து மாவட்ட விவசாயிகள் நீதி கேட்டு நடைபயணம் மேற்கொள்ள உள்ளோம். இதற்காக தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் என ஐந்து மாவட்டங்களில் இருந்தும் சுமார் 5,000 விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்'' என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/police-stopped-tn-farmers-protesting-near-kerala-border-regarding-mulla-periyar-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக