கிரிப்டோ கரன்சிகளின் மீதான மோகம் மக்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. புதிதாக ஒரு கிரிப்டோ கரன்சி உருவாகியிருக்கிறது என்றால் அதில் லட்சங்களைக் கொட்டவும் தயாராக இருக்கிறார்கள். காரணம் பிட்காயினின் பத்தாண்டுக்கால வளர்ச்சி. 2011-ல் வெறும் ஒரு அமெரிக்க டாலராக இருந்த பிட்காயினின் மதிப்பு இன்றைக்கு 62,000 அமெரிக்க டாலர். இவ்வளவு வளர்ச்சி வேறு எதிலுமே பார்க்க முடியாது.
2011-ல் ஒரே ஒரு பிட்காயின் வாங்கியிருந்தால்கூட இன்றைக்குப் பல லட்சங்கள் கிடைத்திருக்குமே என்ற எதிர்பார்ப்பு இல்லாத நபர்களே இல்லை. எனவே, புதிதாக ஒரு கிரிப்டோகரன்சி என்றால் உடனே எந்த ஒரு முன்யோசனையும் இன்றி வாங்கிக் குவித்துவிடுகிறார்கள். ஆனால், அவை எல்லாமே முறையானதுதான் எனக் கூற முடியாது. சில சந்தர்ப்பங்களில் அவை மோசடிகளாகக்கூட இருக்கலாம். அப்படியான ஒரு பெரிய கிரிப்டோ மோசடிதான் தற்போது நடந்துள்ளது.
'ஸ்க்விட் கேம்ஸ்' கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கடந்த செப்டம்பர் மாதம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிய ஒரு கொரியத் தொடர். வெளியான சில வாரங்களிலேயே உலகமெங்கும் ஹிட்டடித்தது ஸ்க்விட் கேம்ஸ். எந்த அளவிற்கு ஹிட் என்றால், நெட்ஃபிளிக்ஸில் ஒரே மாதத்தில் அதிகம் பேர் பார்த்த தொடராக அது மாறியது. அந்தத் தொடரில் நடித்த நடிகர்கள், அந்தத் தொடரை இயக்கிய இயக்குநர் என அனைவருமே ஓவர் நைட் சூப்பர்ஸ்டாரானார்கள். நடிகர்கள் மட்டுமல்லாது, அந்தத் தொடரில் ஒரு இடத்தில் 'டல்கோனா கேண்டி' என்ற ஒரு வகை இனிப்பை வைத்து கேம் ஒன்றை ஆடியிருப்பார்கள். அந்த டல்கோனா கேண்டிக்கு உலகமெங்குமிருக்கும் ஸ்க்விட் கேம் ரசிகர்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது. டல்கோனா கேண்டி கடைக்காரர்களுக்குப் பெரும் லாபம்தான்.
இவற்றையெல்லாம் தொடர்ந்து, இந்த ஸ்க்விட் கேம்ஸை அடிப்படையாகக் கொண்டு உருவானது என்ற பெயரில் வெளிவந்தது ஸ்க்விட் (SQUID) கிரிப்டோ கரன்சி. கடந்த அக்டோபர் 20-ம் தேதி ஸ்க்விட் என்ற கிரிப்டோ காயின்களை முன் விற்பனை செய்வதாக அறிவித்தது ஒரு குழு. விற்பனை தொடங்கிய ஒரு நொடியிலேயே அத்தனை காயின்களும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும் அறிவித்தது அந்தக் குழு.
ஸ்க்விட் கேம்ஸ் தொடரில் வருவதுபோலவே ஒரு விளையாட்டை நவம்பர் மாதம் வெளியிடவிருக்கிறோம். அந்தத் தொடரில் விளையாட இந்த ஸ்க்விட் கிரிப்டோ கரன்சியைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவித்திருக்கிறார்கள். வெளியான 24 மணி நேரத்திலேயே 2,400 மடங்கு அதன் விலை உயர்ந்து 2.22 அமெரிக்க டாலர் விலையில் கிரிப்டோ மார்க்கெட்டில் வர்த்தகமாகியிருக்கிறது இந்த ஸ்க்விட் கிரப்டோ.
ஸ்க்விட்டை வாங்கியவர்களால் மீண்டும் அதனை கிரிப்டோ மார்க்கெட்டில் விற்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததாக காயின் மார்க்கெட் கேப் என்ற கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை மணியையும் அடித்திருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டிற்கு 'ஸ்க்விட் கிரிப்டோவில் ஆன்ட்டி-டம்ப்பிங்' (Anti-Dumping) தொழில்நுட்பத்தைக் கையாள்கிறோம். எனவே, சரியான காரணம் இல்லாமல் ஸ்க்விட்டை விற்று விலையைத் தனிநபர்கள் ஏற்றி இறக்க முடியாது என ஸ்க்விட் கிரிப்டோவுக்காக உருவாக்கப்பட்ட வலைப்பக்கத்தில் காரணம் சொல்லியிருக்கிறது இந்தப் புதிய கிரிப்டோவை உருவாக்கிய குழு. கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வந்த இதன் விலை இரண்டு நாள்களுக்கு முன் 2,860 அமெரிக்க டாலர் விலைக்கு வர்த்தகமாகி அடுத்த சில நிமிடங்களிலேயே ஸ்க்விட் கிரிப்டோவின் மதிப்பு பூஜ்யத்தைத் தொட்டிருக்கிறது.
இதை உருவாக்கியவர்களும் மாயமாக மறைந்துவிட்டார்கள். ஸ்க்விட் கிரிப்டோவிற்காக உருவாக்கப்பட்டிருந்த இணையதளம், சமூக வலைதளப் பக்கங்கள் எதுவுமே இப்போது இல்லை. ஒரே நாளில் பல கோடி ரூபாய் மாயமாய் மறைந்திருக்கிறது. இந்தப் புதிய கிரிப்டோவில் முதலீடு செய்தவர்கள் தற்போது போட்ட பணத்தை எப்படி மீட்பது எனத் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு விஷயத்தில் முதலீடு செய்வதற்கு முன் அதன் தன்மையைப் பற்றி யோசிக்காமல், அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை அறியாமல் முதலீடு செய்யக்கூடாது என்பதைத்தான் இந்தக் கிரிப்டோ மோசடி சுட்டிக் காட்டுகிறது. இந்த ஸ்க்விட் கிரிப்டோவில் முதலீடு செய்தவர்கள் சிலர் கூறும்போது, தன் வாழ்நாளில் சேர்த்து வைத்த மொத்தப் பணத்தையும் இந்த ஸ்க்விட் கிரிப்டோவில் முதலீடு செய்ததாகக் கூறியிருக்கிறார்கள்.
இதுபோல டிஜிட்டல் மோசடிகள் அரங்கேறுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னரும் பல மோசடிகள் இதேபோல் நிகழ்ந்திருக்கின்றன. டிஸ்னியின் ஸ்டார் வார்ஸ் படத்தில் வரும் மான்டலோரியன் கதாபாத்திரத்தை முன்வைத்து மான்டோ என்ற டிஜிட்டல் காயின் ஒன்று இந்த வருடத்தின் தொடக்கத்தில் வெளியானது. ஆனால், இந்த விஷயத்தைக் குறித்து உடனடியாக சுதாரித்த டிஸ்னி நிறுவனம், அந்தக் டிஜிட்டல் காயினுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும், முதலீட்டாளர்களைக் கவனமாக இருக்கக் கோரியும் எச்சரிக்கை செய்தது.
கிரிப்டோவில் எது உண்மையானது, எது மோசடி எனப் பிரித்துக் கூறுவது கடினம். எனவே, மக்கள் கவனமாக இருக்கவே பலரும் அறிவுறுத்துகிறார்கள். முக்கியமாக ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை என்றால் அவற்றில் இருந்து விலகி இருப்பதே சிறப்பு.
source https://www.vikatan.com/technology/tech-news/investors-lost-crores-in-new-squid-game-crypto-scam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக