தீபாவளியன்று எனக்கு பீரியட்ஸ் வரும் நாள். இந்த வருடம் உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரும் சேர்ந்து கொண்டாட இருக்கிறோம். பீரியட்ஸை தள்ளிப்போட மாத்திரைகள் எடுக்கச் சொல்கிறாள் என் தோழி. அந்த மாத்திரைகள் பாதுகாப்பானவையா?
- துர்கா (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.
``இந்தக் கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன் பெண்களின் மாதவிலக்கு சுழற்சி எப்படி நடைபெறுகிறது என்பது பற்றி பார்ப்போம். முறையான மாதவிலக்கு சுழற்சியானது 28 முதல் 30 நாள்களுக்கொரு முறை நிகழ்கிறது. இதில் முதல் 15 நாள்கள் ஒரு ஹார்மோனின் ஆதிக்கத்திலும் அடுத்த 15 நாள்கள் மற்றொரு ஹார்மோனின் ஆதிக்கத்திலும் இருக்கின்றன. அதாவது முதல் 15 நாள்களில் ஈஸ்ட்ரோஜென் எனும் ஹார்மோன் சுரப்பு அதிகமிருக்கும். அதன் விளைவாக கர்ப்பப்பையின் உள்ளே இருக்கும் லைனிங் பகுதியான எண்டோமெட்ரியத்தில் சில மாற்றங்கள் நடக்கும். இரண்டாவது பகுதியில் புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன் சுரப்பு அதிகமிருப்பதால் அதன் தாக்கம் எண்டோமெட்ரியம் பகுதியில் அதிகமிருக்கும். 28 நாள்களை நெருங்கும்போது புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன் சுரப்பு குறைவதால் எண்டொமெட்ரியம் உதிர்ந்து வெளியேறுகிறது. அதைத்தான் நாம் மாதவிடாய் என்கிறோம்.
Also Read: Doctor Vikatan: பீரியட்ஸ் நாள்களில் ஏற்படும் சருமப் பிரச்னை; என்ன தீர்வு?
இயல்பான இந்தச் சுழற்சியைத் தள்ளிப்போட வேண்டும் என்றால் செயற்கையாக புரொஜெஸ்ட்ரானின் செயல்பாட்டைத் தாமதப்படுத்த வேண்டும். எண்டோமெட்ரியம் பகுதியானது உதிர்ந்து மாதவிடாயாக வெளியேறாமலிருக்க, செயற்கையாக நாம் புரொஜெஸ்ட்ரானை உடலுக்குக் கொடுக்க வேண்டியிருக்கும். இதற்கென பிரத்யேக மாத்திரைகள் உள்ளன. அவை மாதவிடாய் வருவதைத் தள்ளிப்போடக்கூடியவை.
மாதவிலக்கு சுழற்சி சரியாக உள்ளவர்கள், மாதவிலக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் தினத்துக்கு 2-3 நாள்கள் முன்னதாக இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். அதிகபட்சமாக 5 முதல் 10 நாள்கள் வரை எடுத்துக்கொள்ளலாம். மாத்திரைகளை நிறுத்திய 2-3 நாள்களில் பீரியட்ஸ் வந்துவிடும்.
சிலர் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொண்டிருக்கலாம். அவர்களுக்கும் மாதவிடாயைத் தள்ளிப்போட வேண்டிய நிர்பந்தம் வரலாம். கருத்தடை மாத்திரைகளில் 21 நாள்களுக்கானது, 28 நாள்களுக்கானது என இரண்டு விதமாகக் கிடைக்கின்றன. இதில் 21 நாள்களுக்கானதுதான் பலன்தரக்கூடியது. 21 நாள்களுக்கான மாத்திரைகளை எடுத்துக்கொண்டிருப்போர், மாத்திரை முடிந்ததும் பிரேக் இல்லாமல் மீண்டும் அதைத் தொடர்ந்து எடுக்க ஆரம்பித்தாலும் பீரியட்ஸ் தள்ளிப்போகும். இந்த மாத்திரைகளில் ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரான் இரண்டுமே இருக்கும்.
இந்த இரண்டு மாத்திரைகளையும் உங்கள் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையின்றி எடுக்கக்கூடாது. அடிக்கடியும் எடுக்கக்கூடாது. செயற்கையாக உள்ளே கொடுக்கப்படுகிற புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன்களின் விளைவால் சிலருக்கு மனநிலையில் தடுமாற்றங்கள், எரிச்சலுணவு, உடல் உப்புசம், பருக்கள், மார்பகங்களில் கனத்த உணர்வு போன்றவை வரலாம். நீங்கள் எந்தக் காரணத்துக்காக மாதவிடாயைத் தள்ளிப்போட நினைத்து இந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டீர்களோ, அவை ஏற்படுத்தும் இத்தகைய பக்க விளைவுகளால் உங்களால் அந்தப் பண்டிகையை சந்தோஷமாக அனுபவிக்க முடியாமல் போகும் நிலை வரலாம். அடுத்து வரப்போகிற பீரியட்ஸ் முறை தவறிப் போகலாம். மட்டுமன்றி அது நீண்ட நாள்கள் தள்ளிப்போகவோ, அதிக ப்ளீடிங் இருக்கவோ வாய்ப்புகள் உண்டு. அந்த ப்ளீடிங் 2-3 மாதங்கள்கூட நீடிக்கலாம்.
சிலர் ஒரு டோஸ் மாத்திரையை மறந்திருப்பார்கள். அதன் விளைவாக `பிரேக்த்ரூ ப்ளீடிங்' என்ற பெயரில் முக்கியமான உங்கள் கொண்டாட்ட நாளன்று ப்ளீடிங் ஆகலாம்.
உடல் பருமன் உள்ளவர்கள், த்ராம்போசிஸ் எனப்படும் ரத்தம் உறைதல் தொடர்பான பிரச்னை அல்லது குடும்பப் பின்னணி கொண்டவர்கள், ஏற்கெனவே `டீப் வெயின் த்ராம்போசிஸ்' எனப்படும் பாதிப்பை சந்தித்தவர்கள் இந்த மாத்திரைகளை எடுக்கக்கூடாது.
Also Read: Doctor Vikatan: பீரியட்ஸின் போது வலியை ஏற்படுத்தும் அடினோமயோசிஸ்; தீர்வு என்ன?
பீரியட்ஸை தள்ளிப்போடும் மாத்திரைகளை எடுப்பதற்கு முன் உங்கள் ரத்த அழுத்த அளவைப் பாருங்கள். மைக்ரேன் இருப்பவர்கள் இந்த மாத்திரைகளைத் தவிருங்கள். ஏனெனில் இந்த மாத்திரைகள் மைக்ரேன் பிரச்னையைத் தீவிரப்படுத்தக்கூடும்.
எனவே மிகவும் தவிர்க்க முடியாத தருணத்தில், மருத்துவரின் ஆலோசனையோடு இந்த மாத்திரைகளை எடுக்கலாமே தவிர, அடிக்கடியும் மருத்துவ ஆலோசனையின்றியும் எடுக்கவே கூடாது. கூடியவரையில் உங்கள் பீரியட்ஸ் சுழற்சியை அதன் இயல்பான போக்கில் வர அனுமதியுங்கள்."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
source https://www.vikatan.com/health/healthy/can-women-take-tablets-to-postpone-the-periods
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக