திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்திய வழக்கு கடந்த ஆண்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்த யு.ஏ.இ தூதரக பார்சலை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அந்த பார்சலை பெறுவதற்காக யு.ஏ.இ தூதரக கடிதத்துடன் விமான நிலையம் சென்ற ஸரித் என்பவர் கைது செய்யப்பட்டார். தங்கம் வந்த பார்சலை விடுவிக்கும்படி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கேரளா தலைமைச் செயலகத்தில் இருந்தி போன் செய்தார் ஸ்வப்னா சுரேஷ்.
கேரளா முதல்வர் பினராயி விஜயனின் கட்டுப்பாட்டில் இருந்த ஐ.டி துறையில் தற்காலிக ஊழியராக, ஸ்பேஸ் பார்க் நிறுவனத்தில் பணி செய்து வந்தார் ஸ்வப்னா சுரேஷ். ஸ்வப்னா சுரேஷுடன் தொடர்பில் இருந்த பினராயி விஜயனின் செயலாளரான சிவசங்கரன், அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் பின்னணியில் பயங்கரவாதிகள் இருப்பதாக கூறப்பட்டது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சோலார் பேனல் மோசடி வழக்கில் சிக்கிய சரிதா நாயருக்கும், அன்றைய முதல்வர் உம்மன் சாண்டிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அதுபோல தங்கம் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. மேலும் அன்று சட்டசபை சபாநாயகராக இருந்த ஸ்ரீராமகிருஷ்ணனுக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. என்.ஐ.ஏ, சுங்கத்துறை, அமலாக்கத்துறை என ஒவ்வொரு ஏஜென்சிகளும் போட்ட வழக்கில் ஜாமீன் கேட்டு ஸ்வப்னா சுரேஷ் மனுத்தாக்கல் செய்திருந்தார். என்.ஐ.ஏ வழக்கில் மட்டும் ஜாமீன் பெற காலதாமதம் ஆனது.
இந்த நிலையில் ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனு செய்திருந்தார் ஸ்வப்னா சுரேஷ். கடந்த நவம்பர் 2-ம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது இது சாதாரண கடத்தல் வழக்குதான். பயங்கரவாதிகள் தொடர்பு இருப்பதாக போலியாக கட்டமைக்கப்பட்டுள்ளது என ஸ்வப்னா சுரேசின் வழக்கறிஞர் வாதிட்டார். இதைத் தொடர்ந்து ஸ்வப்னா சுரேஷுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது நீதிமன்றம். இரண்டு நாள்களாக நீதிமன்ற நடைமுறை மற்றும் விடுமுறை காரணங்களால் ஸ்வப்னா சுரேஷ் சிறையில் இருந்து விடுவிக்கப்படவில்லை. இதற்கிடையே ஸ்வப்னா சுரேஷ் சிறையில் இருந்து வெளியே வந்தால் செய்தியாளர்களைச் சந்திப்பார் என அவரின் அம்மா பிரபா சுரேஷ் கூறியிருந்தார். இந்த நிலையில் ஸ்வப்னா சுரேஷ் இன்று சிறையில் இருந்து வெளிவருகிறார் என்ற தகவல் அறிந்ததும் திருவனந்தபுரம் அட்டகுளங்கரை மகளிர் சிறையின் முன்பு செய்தியாளர்கள் கூடினர். தாய் பிரபா சுரேஷின் கைகளை பிடித்தவாறு இன்று காலை 11.30 மணியளவில் ஸ்வப்னா சுரேஷ் சிறையில் இருந்தி வெளியே வந்தார்.
2020 ஜூலை மாதம் கைதுசெய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், ஒரு வருடம் நான்கு மாதங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். ஸ்வப்னா சுரேஷ் வெளியே வரும்போது, செய்தியாளர்கள், `எதாவது சொல்ல விரும்புகிறீர்களா?’ எனக் கேட்டனர். அதற்கு ஸ்வப்னாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. பின்னர் அவர் காரில் ஏறி பாலராமபுரத்தில் உள்ள அவரின் வீட்டுக்குச் சென்றார். ஸ்வப்னா சுரேசின் தாய் பிரபா சுரேஷ் கூறும்போது, "ஸ்வப்னாவுக்கு ஓய்வு தேவைப்படுவதால் அவர் இப்போது மீடியாக்களை சந்திக்கவில்லை. விரைவில் அவர் மீடியாக்களை சந்தித்து சில விஷயங்களை பேசுவார்" என்றார். வழக்கறிஞரை சந்தித்தபிறகு ஸ்வப்னா சுரேஷ் மீடியாக்களிடம் பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
source https://www.vikatan.com/government-and-politics/crime/in-kerala-gold-smuggling-case-swapna-suresh-was-released-in-bail
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக