Ad

சனி, 6 நவம்பர், 2021

தொடர் மழை: தரைப்பாலத்தை மூழ்கடித்த காட்டாற்று வெள்ளம்! - தவிப்பில் கல்வராயன் மலைக் கிராம மக்கள்

கடந்த சில தினங்களாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக, பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இதனால் எதிர்வரும் நாள்களில் தண்ணீர் பற்றாக்குறை ஓரளவுக்குக் குறையும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், கனமழையால் பலபகுதிகளில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கால் விவசாயிகளும், தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் ஏராளமான மக்கள் பரிதவிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

Also Read: வடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்?

அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் தொரடிபட்டு தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுச் சேதமடைந்திருக்கிறது. இதனால், சுமார் 20-க்கும் மேற்பட்ட மலைக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், அடிப்படைத் தேவைகளுக்காக ஆபத்தான நிலையில் ஆற்றைக் கடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

ஆற்று வெள்ளத்தில் வாகனத்தை தூக்கி வரும் கிராம மக்கள்

இது தொடர்பாகத் தமிழ்நாடு விவசாயச் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் கஜேந்திரனிடம் பேசினோம்.``கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலைப்பகுதிக்கு 'வெள்ளிமலை' தான் மையப்பகுதி. கள்ளக்குறிச்சியில் இருந்து வெள்ளிமலை வரை மட்டும்தான் போக்குவரத்து வசதி இருக்கிறது. இந்த தொரடிப்பட்டு கிராமத்தைப் போல, வெள்ளிமலையிலிருந்து சுமார் 15 முதல் 20 கிலோ மீட்டர் வரை உள்ள பல கிராமங்களுக்குப் போக்குவரத்து வசதி என்பது கிடையாது. ஏதாவது தேவை என்றாலும், மக்கள் நடந்து தான் செல்லவேண்டும். இல்லையென்றால் இருசக்கர வாகனத்தில் தான் சென்றாக வேண்டும். இந்த கிராமங்களில் போக்குவரத்து வசதியோ, சாலை வசதியோ பெரிய அளவில் கிடையாது. வருடாவருடம் மழை பொழியும் போதெல்லாம் காட்டாற்றில் வெள்ளம் அதிகரித்து இந்த தொரடிப்பட்டு பாலம் வழியே அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் பாய்ந்தோடும்.

இந்த தொரடிப்பட்டு பாலத்துக்கு அடுத்த பகுதியில் சுமார் 20 சிறு கிராமங்கள் இருக்கின்றன. அந்த மக்களின் இயல்பு வாழ்க்கை, இது போன்ற சமயங்களில் எல்லாம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இது வருடா வருடம் நடக்கும் ஒரு விஷயமாக மாறிவிட்டது. இந்த வருடமும் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளத்தில் இந்த தொரடிப்பட்டு தரைப்பாலம் மூழ்கிச் சேதமடைந்திருக்கிறது. இதுவரையிலும் மாவட்ட நிர்வாகமோ, பொதுத்துறை அதிகாரிகளோ எந்தவிதமான முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

கல்படை ஆறு தரைப்பாலம்

வெள்ளம் ஏற்பட்ட பின்னும் எந்தவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லை. தொரடிப்பட்டு போன்ற தரைப்பாலங்கள் உள்ள இடங்களில் மேம்பாலங்கள் கட்டித்தரப்பட வேண்டும் என்பது எங்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருக்கிறது" என்றார் கஜேந்திரன் ஆதங்கத்துடன்.

இதுதொடர்பாக விளக்கம் கேட்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரிடம் பேசினோம். ``விசாரித்துவிட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்கிறேன்'' என்றார்.

Also Read: குமரி: மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு! - அடித்துச் செல்லப்பட்ட பாலம்



source https://www.vikatan.com/news/tamilnadu/the-cross-bridge-on-kalvarayan-hills-was-swept-away-by-the-flood

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக