Ad

செவ்வாய், 2 நவம்பர், 2021

`என் சாவுக்கு தலைமை ஆசிரியரே காரணம்’ - நண்பர்களுக்கு வீடியோ அனுப்பிவிட்டு மாணவன் தற்கொலை

கும்பகோணம் அருகே அரசு பள்ளியில் படித்து வந்த மாணவர் ஒருவர், தலைமையாசிரியர் திட்டியதாக கூறி தன் சாவுக்கு தலைமை ஆசிரியர் தான் காரணம் வேறு யாரும் கிடையாது என மொபைல் போனில் பேசி வீடியோ எடுத்து அதனை உடன் படிக்கும் நண்பர்களுக்கு அனுப்பி விட்டு, எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட மாணவன் விஷால்

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் காமராஜ் நகரை சேர்ந்தவர் லோகநாதன் (50), இவரின் மனைவி நிதா (45). பட்டியலின வகுப்பை சேர்ந்த இந்த தம்பதி, கட்டட கூலி தொழிலாளிகளாக வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு விஷ்வா, விஷால் என இரண்டு மகன்கள். விஷ்வா தனியார் கல்லூரி படித்து வருகிறார். விஷால் திருநாகேஸ்வரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் விஷால் படிப்பில் கவனம் செலுத்தாமல் வித்தியாச ஸ்டைலில் தலை முடியினை வெட்டிக் கொண்டு பள்ளிக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. பள்ளியின் தலைமை ஆசிரியரான சம்பத்குமார் இதனை பல முறை கண்டித்துள்ளாராம். முடியை ஒழுங்காக வெட்டி கொண்டு பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். எனினும் தொடர்ந்து முடியை வெட்டாமல் பள்ளிக்கு வந்த விஷாலிடம் உன் பெற்றோரரை அழைத்து வா என சம்பத் குமார் கூறியிருக்கிறார்.

தற்கொலை - Representational Image

அடுத்த நாளும் பெற்றோரை அழைக்காமல் சென்ற விஷாலை வகுப்பிற்குள் அனுமதிக்காமல் வெளியே நிற்க வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மன முடைந்த விஷால் கடைக்கு சென்று எலி பேஸ்ட் வாங்கி வந்ததுடன் தனது மொபைல் போனில், ``என்னை ஸ்கூலில் ரொம்ப கொடுமை படுத்துறாங்க நான் சாகப்போறேன் எனது சாவுக்கு ஹெட்மாஸ்டர் சார் மட்டும் தான் காரணம்” என கூறி வீடியோ பதிவு செய்து அதனை நண்பர்களுக்கு அனுப்பி விட்டு பள்ளி வளாகத்திலேயே எலி பேஸ்டை தின்று விட்டார்.

இந்நிலையில் விஷாலை தற்கொலைக்கு தூண்டிய தலைமையாசிரியர் சம்பத்குமாரை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமையில் பள்ளி அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் சின்னை.பாண்டியன், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜீவபாரதி, பக்கிரிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தனர்.

விஷால்

இது குறித்து மாணவர் உறவினர்கள் தரப்பில் பேசினோம், `விஷால் தலை முடியை வெட்டாமல் பள்ளிக்கு சென்று வந்தான். முடியை வெட்டி விட்டு வருமாறு தலைமை ஆசிரியர் கூறி வந்துள்ளார். அதனை செய்யாததால் பெற்றோரை அழைத்து வா என்றுள்ளார். விஷாலின் பெற்றோர் கட்டட வேலைக்கு செல்பவர்கள் என்பதால் விஷால் அவர்களை பள்ளிக்கு அழைத்து செல்ல முடியவில்லை. வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற விஷாலிடம் `பெற்றோரை ஏன் அழைத்து வரல’னு கேட்டதுடன் `நீ எந்த ஏரியா?’ என கேட்டுள்ளார்.

விஷால் தான் வசிக்கும் ஏரியாவை சொல்ல, `ஓ நீ அந்த தெருவா அதான் இப்படி நடந்துக்குற..’ என பேசியிருக்கிறார். இதனால் மனமுடைந்த மாணவன் விஷால் எலி பேஸ்டை தின்று தற்கொலை செய்து கொண்டு விட்டான். கட்டட வேலைக்கு போய் பிள்ளைகளை வளர்த்த விஷாலின் பெற்றோர், `உன்ன இந்த கோலத்துல பாக்கவா இவ்வளவு கஷ்டப்பட்டு வளத்தோம்’ என கதறியதை யாராலும் தாங்க முடியவில்லை” என்றனர்.

Also Read: ‘தூக்கிட்டு இறந்த மனைவி; அதிர்ச்சியில் கணவரும் தற்கொலை!’ -சேலம் புதுமணத் தம்பதியருக்கு நேர்ந்த சோகம்

பள்ளி நிர்வாகத்தின் தரப்பிலோ, `விஷால் ஒழுங்கா படிக்க மாட்டான். வித்யாசமான ஸ்டைலில் முடி வெட்டிக்கொண்டு பள்ளிக்கு வந்தான். முடியை ஒழுங்கா வெட்டிக் கொண்டு வா படிப்பில் கவனம் செலுத்து என கண்டித்ததால் விபரீதமான முடிவை எடுத்து விட்டதாக” கூறி வருகின்றனர். காவல்துறை முறையாக விசாரணை நடத்தி உண்மையை வெளி கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/student-suicide-after-teacher-warns-over-his-hair-cut

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக