வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, நேற்றைய தினம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் காய்திரி கிருஷ்ணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன், திருவாரூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, கூட்டம் முடிந்த பின்னர், அமைச்சர் சக்கரபாணி பத்திரிகையாளர்களைச் சந்திக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதனால் பத்திரிகையாளர்களும் அமைச்சரைச் சந்திக்கச் சென்றிருக்கின்றனர். அப்போது, மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ-வும் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனுமான டி.ஆர்.பி.ராஜா, ``பத்திரிகையாளர்கள் அனைவரும் ஆட்சியர் அலுவலகத்தை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும்'' என கறார் குரலில், மிரட்டல் தொனியில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
பத்திரிகையாளர்களை அவமானப்படுத்திய டி.ஆர்.பி ராஜா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப் பத்திரிகையாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குப் புகார் மனுக்களை அனுப்பிவருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக நம்மிடம் பேசிய திருவாரூர் பத்திரிகையாளர்கள், ``நேற்று காலை அமைச்சர் சக்கரபாணி, கமலாலய குளத்தைப் பார்வையிட வந்திருந்தார். அப்போது, பத்திரிகையாளர் சந்திப்பு இருக்கிறதா என்று கேட்டோம். மதியம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடக்கிறது. அங்குச் சந்திப்போம் என்றார். மதியம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் சக்கரபாணி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதைப் பதிவு செய்தோம். பின்னர், ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மன்னார்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா, மைக்கை எடுத்து, மிகவும் கடுமையான குரலில், `பத்திரிகையாளர்கள் எல்லாம் உடனடியாக, கலெக்டர் ஆஃபிஸ் கேம்பஸை விட்டு வெளியே போங்க' என்றார். நாங்கள் முதலில் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், அதையே தொடர்ந்து சொல்லி எங்களை அவமானப்படுத்தும் வகையில் நடந்துகொண்டார். பத்திரிகையாளர்களை வெளியில் அனுப்பவோ, போகச் சொல்லவோ அவருக்கு எந்த அதிகாரமும், உரிமையும் கிடையாது. டி.ஆர்.பி. ராஜா சாதாரணமான குரலில் சொல்லியிருந்தால் கூட, இதை நாங்கள் பெரிதுபடுத்தியிருக்க மாட்டோம். மைக்கில் மிரட்டல் தொனியில் கூறினார்.
பல துறை அதிகாரிகள் கூடியிருந்த இடத்தில் எம்.எல்.ஏ எங்கள் அனைவரையும் அவமானப்படுத்திவிட்டார். அதைக் கண்டித்து, மாவட்ட ஆட்சியர் வளாகத்தை விட்டு வெளியில் வந்து, தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோம். அடுத்த சில நிமிடங்களில், மக்கள் தொடர்பு அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள், எங்களைச் சமாதானப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றார்கள்.
Also Read: திருவாரூர்: அதிகரித்த லஞ்சப் புகார்! - ஆர்.டி.ஓ அலுவலகத்துக்குக் குறிவைத்த லஞ்ச ஒழிப்புத்துறை
பின்னர், அமைச்சர் சக்கரபாணி வெளியில் வந்து, எங்களைச் சந்தித்து சமாதானமாகப் பேசினார். அப்போது கூட ராஜா எங்களிடம் கடுகடுத்துக் கொண்டே தான் இருந்தார். அமைச்சர் சக்கரபாணிதான் அவரை அமைதிப்படுத்தினார். எம்.எல்.ஏ ராஜாவின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. திமுக-வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான டி.ஆர்.பாலுவின் மகன் இவர். கட்சியில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டியவர், இப்படிச் செய்வது வேதனை அளிக்கிறது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இது தொடர்பாகப் புகார்களை அனுப்பிக் கொண்டிருக்கிறோம்" என்றனர்.
source https://www.vikatan.com/news/politics/did-mannarkudi-mla-raja-insults-media-people
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக