Ad

புதன், 3 நவம்பர், 2021

அரசுப்பள்ளி டு ஐ.ஐ.டி: கூலி வேலை செய்யும் குடும்பம்; வறுமையிலும் சாதித்த அருண் குமாரின் கதை!

ஐஐடி நுழைவுத் தேர்வான ஜேஇஇ மெயின் (JEE Main) தேர்வில் 98.24 சதவிகித மதிப்பெண்ணையும், அடுத்து நடந்த அட்வான்ஸ்டு தேர்வில் அகில இந்திய அளவில் 12,172-வது இடத்தையும் பிடித்து, ஐ.ஐ.டி சென்னையில் சேர்ந்திருக்கிறார் திருச்சியைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர் அருண் குமார். அவரை தமிழக முதலமைச்சர் பாராட்டியதுடன், அவரது கல்வி செலவு முழுவதையும் அரசே ஏற்று கொள்வதாக அறிவித்திருக்கிறார்.

மிக எளிய பின்னணி, விவசாயக் கூலி வேலை செய்யும் தந்தை, படிப்பு முழுவதும் ஆன்லைனில் மட்டுமே, பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்துடன் ஜேஇஇ தேர்வுக்கான பயிற்சி, தினமும் ஐந்து முதல் ஆறு மணி நேரமும், தேர்வு சமயத்தில் பன்னிரண்டு மணி நேரமும் படிப்பு என்று வெற்றிக்கோட்டை எட்டியிருக்கும் அருண்குமாரிடம் பேசினோம்.

அருண்குமாரின் வீடு

Also Read: நன்றி தெரிவிக்க நேரில் சந்திக்க ஆசைப்பட்ட மாணவி; இன்ப அதிர்ச்சி அளித்த ஸ்டாலின்!

``எங்க ஊர் திருச்சி மாவட்டத்துல துவரங்குறிச்சி பக்கத்துல இருக்குற கரடிப்பட்டி கிராமம். நான் தொடக்கக் கல்வியை பிரைவேட் ஸ்கூல்ல முடிச்சேன். அதுக்கு அப்பறம் எல்லாமே அரசுப் பள்ளிதான். சேவல்பட்டி அரசுப் பள்ளியில்தான் படிச்சேன். நல்லா படிப்பேன். பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுல பள்ளியில நான்தான் முதல் மாணவன். தினமும் நடத்துற பாடத்தை அன்னைக்கே படிச்சிடுவேன். அந்தப் பழக்கம்தான் என் இந்த வெற்றிக்குக் காரணம்னு நினைக்கிறேன்'' என்றார்.

தொடர்ந்து ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்றது குறித்துக் கூறியபோது, ``என் வெற்றியில என்னோட முயற்சி ஒருபுறம் இருந்தாலும், எனக்குப் பயிற்சியளித்த திருச்சி என்ஐடியை(NIT - National Institute of Technology) சேர்ந்த IGNITTE என்ற குழுவினரின் இலவசப் பயிற்சி ரொம்பவே முக்கியமானது. நான் 11-ம் வகுப்புப் படிக்கும்போது என் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜேஇஇ நுழைவுத் தேர்வு பற்றிச் சொல்லி, IGNITTE மூலமா பயிற்சி கொடுத்தாங்க. வாரத்துல ரெண்டு நாள் நடக்குற அந்தப் பயிற்சில கலந்துக்கிட்டேன். கொரோனா காலத்துல ஆன்லைன் பயிற்சி மூலமாவும், வீட்ல கொஞ்சம் நேரத்தை கூட வீணாக்காமலும் படிச்சிட்டு இருந்தேன். தினமும் அஞ்சு மணி நேரம் படிப்பேன். கடைசி ஆறு மாசத்துல அது 12 மணிநேரமா மாறிடுச்சு. வீட்லயும் ரொம்ப சப்போர்ட் பண்ணுனாங்க. இப்போ சென்னை ஐஐடியில சேர்ந்திருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு'' என்றார்.

அருண்குமாருக்குப் பயிற்சியளித்த IGNITTE குழுவினரிடம் பேசினோம். குழுவின் நிறுவனரான அருண் பிரசன்னா, ``IGNITTE என்ற எங்க குழு 2019-ல நான் உட்பட ஆறு மாணவர்களால ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான விதை 2016-ல போடப்பட்டது.

அருண் பிரசன்னா

அப்போ என்ஐடில நாங்க முதலாம் வருட மாணவர்கள். அந்த நேரம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அந்த மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜேஇஇ மற்றும் மற்ற நுழைவுத் தேர்வுகளுக்கு இலவசமா பயிற்சி கொடுக்க என்ஐடியை சேர்ந்த மாணவர்களுக்கு அழைப்புவிடுத்திருந்தார். அதனை ஏற்று நாங்க வார இறுதி நாள்கள்ல அங்க போய் பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சோம். சில மாதங்கள் பயிற்சிகள் கொடுத்த பின் ஆட்சியர் மாற்றம், அதன் பின்னான சில இடைஞ்சல்கள்னு அந்தப் பயிற்சி வகுப்பு அதோட முடிஞ்சிடுச்சி.

ஆனா எங்களோட கற்பித்தல் ஆர்வம் போகலை. அரசுப் பள்ளி மாணவர்களை நுழைவுத் தேர்வுகளுக்குத் தயார் செய்ய `IGNITTE' அமைப்பை நான், பிரேம்குமார், அரவிந்தன், சரண், சஞ்சீவ் மற்றும் ஆதர்ஷ் சேர்ந்து ஆரம்பிச்சோம். இதுக்கு எங்க என்ஐடி நிர்வாகமும் திருச்சி முதன்மை கல்வி அலுவலகமும் ரொம்பவே உதவி பண்ணுனாங்க. திருச்சி மாவட்ட அரசுப் பள்ளியில இருக்குற மாணவர்களைத் தேர்ந்தெடுக்குறது, அவங்களுக்கு தகுதித் தேர்வு நடத்தி எங்க பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்குறது அவங்களோட பங்கு ரொம்பவே அதிகம். இப்படி IGNITTE அமைப்பு மூலமா, முதல் வருட கல்லூரி மாணவர்கள்ல இருந்து இறுதியாண்டு மாணவர்கள்வரை பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி கொடுப்பாங்க.

பயிற்சி பெறும் மாணவர்கள்

அப்படி இதுவரை 30-க்கும் அதிகமான மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்திருக்கோம். அதுல கடந்த வருடம் நான்கு மாணவர்கள் பல நுழைவுத் தேர்வுகள்ல வெற்றி பெற்றிருங்தாங்க . இந்த வருடம் அருண்குமார் ஜேஇஇ-ல வெற்றி பெற்றிருக்காரு. அதுவும் முதலமைச்சர் அளவுக்கு அவரோட திறமை போய் சேர்ந்தது எங்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சி. இது எங்களுக்குப் புது உத்வேகத்தை கொடுத்திருக்கு. இன்னும் இது போல நிறைய அரசுப் பள்ளி மாணவர்களை இப்படி கொண்டுபோகணும்'' என்றவர், ``தற்போது IGNITTE கிளப்பில் 60 என்ஐடி மாணவர்கள் பயிற்றுநர்களா இருக்காங்க. அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சிக்கு வேண்டிய புத்தகங்களையும், மெட்டீரியல்களையும் தங்கள் நண்பர்களின் உதவியோட தயார் செய்து கொடுக்குறாங்க'' என்றார்.

முதல்வரால் பாராட்டப்பட்ட அருண்குமாருக்குப் பயிற்சி அளித்த என்ஐடி மாணவி அபிராமியிடம் பேசினோம்.
``அருண்குமாரோட வெற்றிக்கு அவரோட உழைப்பு ரொம்ப முக்கியக் காரணம். அதைப் பார்த்துட்டு அவருக்கு முழுநேரமா தனியா நேரத்தை ஒதுக்கி நாங்க கற்றுக் கொடுக்க ஆரம்பிச்சோம். அருண் ப்ளஸ் ஒன் படிக்கும் போதே IGNITTE பயிற்சிக்கு வந்துட்டார். அப்போ வாரத்துல ரெண்டு நாள் மட்டும், நேரடியா என்ஐடிக்கு வரவெச்சு ஹாஸ்டல், உணவு எல்லாம் ரெடி பண்ணி பயிற்சி கொடுத்தோம்.

வெற்றி பெற்ற மாணவர்கள்

Also Read: கோழி இறகு, மீன் செதில் மூலம் மாசுக்கட்டுப்பாடு; ஜனாதிபதி கையால் விருது பெறும் ஆந்திர மாணவி!

அப்புறம் கொரோனா சூழ்நிலையால எல்லாமே ஆன்லைன்தான். அருணோட வீட்ல அந்த சிரமத்துலயும் போன் வாங்கிக் கொடுத்தாங்க. மேலும், அரசு கொடுத்த லேப்டாப்லதான் படிக்கிறது, மாதிரி டெஸ்ட் எழுதுறதுனு எல்லாமே பண்ணுனார். அவரோட அந்த டெடிக்கேஷனாலதான் இந்த வெற்றி அவருக்குக் கிடைச்சிருக்கு. நாங்களும் எங்க படிப்போடு சேர்த்து கிட்டத்தட்ட 8 மணி நேரம் வரை கூட சில நேரங்கள்ல அவருக்கு கிளாஸ் எடுத்தோம். அதுக்கான பலன் இப்போ கிடைச்சிருக்கு. இது மாதிரி இன்னும் பல மாணவர்களை உருவாக்கணும் என்ற உத்வேகத்தைக் கொடுத்திருக்கு'' என்றார்.

தாங்கள் படித்தால் மட்டும் போதாது என பல மாணவர்களுக்கும் வழிகாட்டியாய் இருக்கும் இந்த மாணவர்களுக்கும், தனக்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தன்னை உயர்த்தி கொண்ட மாணவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.



source https://www.vikatan.com/news/education/trichy-govt-school-student-cracked-jee-to-study-in-iit-madras

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக