Ad

வியாழன், 4 நவம்பர், 2021

AKS - 54: நட்பா, காதலா உணர்ச்சிப் போராட்டமும், காதலுக்கு ஆபத்தாக வரும் மூன்றாம் நபர்களும்!

கவிதா ராஜேஷுடன் பெங்களூரு சென்றிருக்கிறாள். அவனுடன் ஒரே அறையில் தங்கி இருந்தும் கவிதா பாண்டியனை பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறாள். கவிதாவுக்கு பாண்டியனை பிரிந்து இருப்பது மூச்சு முட்டுவது போல் இருப்பதாக உணர்கிறாள். பாண்டியனுக்கு நள்ளிரவில் கால் செய்து அதை சொல்லி அழுகிறாள். பாண்டியன் தானும் அதுபோல உணர்வதாக சொல்லி அழுகிறான். மற்ற நண்பர்களுக்கும் இதுபோலதான் இருக்குமா என்றும் நாம் இருவரும் நண்பர்கள் தானே என்றும் கவிதா பாண்டியனிடம் கேட்கிறாள். அவள் அப்படிக் கேட்டதும் பாண்டியன் தன் காதில் இருந்து செல்போனை எடுத்துவிட்டு அழும் காட்சியில் அவரின் (நடிகர் பிரபாகரன்) நடிப்பு அருமை!

கவிதாவிற்கு முதன்முறையாக தனக்கும் பாண்டியனுக்கும் உள்ள உறவு பற்றி மனதில் சந்தேகம் எழுகிறது. பாண்டியனை பிரிந்து ஒரு நாள்கூட இருக்க முடியாமல் அவள் தவிக்கும் உணர்வு அவளுக்கே புதியதாக இருக்கின்றது. இது காதலாக இருக்கும் என்று அவளுக்குச் சின்னதாக சந்தேகம் எழுகிறது. அந்தச் சந்தேகத்தை வெளிப்படையாக சொல்லும் தைரியம் கவிதாவுக்கு இல்லை.

AKS - 54

அதேசமயம் அந்தச் சந்தேகம் வெறும் சந்தேகமாக இல்லாமல் உண்மையாக இருக்க வேண்டும் என்றும் அவள் உள்ளுணர்வு சொல்கிறது. கவிதாவின் தவிப்புக்குக் காரணம் அதுதான். இதுவரை தான் நட்பு என்று நம்பிக் கொண்டிருந்த ஒன்று காதலாக இருக்கலாம் எனும்போது தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்று கவிதா நினைக்கிறாள்.

இரண்டில் எது சரி, எது தவறு என்கிற குழப்பத்தில் மாட்டிக்கொண்டு கவிதா தவிக்கிறாள். ஒரு முடிவுக்கு வரமுடியாமல் பாண்டியனிடம் நேரடியாகவே ’நாம் நண்பர்கள்தானே?’ என்று கேட்கிறாள். பாண்டியனுக்கும் தாங்கள் இருவரும் வெறும் நண்பர்கள் மட்டும் அல்ல என்பது கவிதா பிரிந்து சென்ற நொடியில் இருந்தே புரிந்திருக்கின்றது. ஆனால் பாண்டியனுக்கு கவிதா ராஜேஷை காதலிக்கிறாள் என்பதால் தன்னுடைய எண்ணத்தை வெளிக்காட்டாமல் இருக்கிறான்.

கவிதாவின் கேள்வி பாண்டியனுக்குள் ஏதோ ஒன்றை உடையச் செய்து அழுகை வருகிறது. தான் உணர்வதை கவிதாவும் உணர்ந்து இருக்கிறாள் என்கிற மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும், அதை பகிர்ந்து கொள்ள முடியாத சூழ்நிலை இருப்பதால் அவனுக்கு அழுகை வந்திருக்கலாம். கவிதா பாண்டியனுடன் பேசிக் கொண்டிருக்கையில் ராஜேஷ் அங்கு வருகிறான். இந்த நேரத்தில் பாண்டியனிடம் போனில் பேசி அவனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று ராஜேஷ் கூறுகிறான். பாண்டியனும் அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறான். தனக்கும் கவிதாவுக்கும் இடையில் இருக்கும் நட்பு ராஜேஷிற்கு தொந்தரவாக இருக்கிறது என்கிற விஷயம்தான் பாண்டியனை கவிதாவிடம் இருந்து விலகி இருக்கச் செய்கிறது.

AKS - 54
கவிதா ராஜேஷிடம் தன்னை சென்னைக்கு பேருந்தில் அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யுமாறு கூறுகிறாள். ராஜேஷ் கவிதாவை தனியாக அனுப்பமுடியாது என்றும் இரவு வரை காத்திருந்தால் இருவரும் சேர்ந்து சென்னை செல்லலாம் என்றும் கூறுகிறான். கவிதா தனக்கு உடனே பாண்டியனை பார்க்கவேண்டும் என்றும் அதற்கு மேல் ஒரு நிமிடம் கூட பெங்களூருவில் இருக்க முடியாது என்றும் சொல்கிறாள்.

காதல் இயல்பானது, யாருக்கும் எந்த நேரத்திலும் தோன்றலாம் என்றெல்லாம் பேசினாலும் கூட, இந்தச் சூழ்நிலையில் ராஜேஷை பார்த்து பரிதாபப்படத்தான் தோன்றுகிறது. ராஜேஷின் காதலை ஏற்றுக் கொண்டு கவிதா பழகினாலும், ராஜேஷுடன் உணவகங்கள் சென்றது முதல் பெங்களூரு வந்தது வரை பல விஷயங்கள் ராஜேஷின் மீதிருந்த காதலால் அல்லாமல் பாண்டியனை வெறுப்பேற்றுவதற்காக கவிதா செய்தவையே ஆகும். தன்னுடன் கவிதா பெங்களூரு வந்ததை ராஜேஷ் தங்களுடைய காதல் அடுத்த கட்டத்திற்குச் சென்றிருக்கிறது என்று நம்புகிறான். மேலும் ஒரே அறையில் தங்குவது அந்த நம்பிக்கையை வலுவானதாக ஆக்கும். அடுத்து உடனடியாக திருமணம் செய்து கொள்வோம் என்று ராஜேஷ் முடிவுக்கு வந்திருக்கலாம்.

இந்தச் சூழ்நிலையில் கவிதா முகத்திற்கு நேராக ராஜேஷிடம் தான் பாண்டியனை பற்றி நினைத்துக் கொண்டிருப்பதாகவும் பாண்டியனை மிஸ் செய்வதாகவும் சொல்வதோடு, உடனடியாக சென்னை சென்றே ஆக வேண்டும் என்றும் கவிதா சொல்கிறாள். ராஜேஷ் பற்றிய அக்கறை கவிதாவுக்கு துளியும் இல்லை. இதில் கவிதாவின் வெளிப்படைத்தன்மை, நேர்மையை பாராட்டலாம். ஆனால் அதனால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை பற்றியும் யோசிக்க வேண்டும்.

கிஷோருடன் மது அருந்த சென்ற இடத்தில் பரத் பாடியது மொக்கையாக இருக்கிறது என்று கிஷோர் சொன்னதற்கு பரத் கோபம் வந்து அங்கிருந்து கிளம்பி வந்துவிடுகிறான். புனிதா அதற்காக கிஷோரிடம் மன்னிப்பு கேட்கிறாள். அதேசமயம் பரத்தின் மீது தவறு என்று சொல்லி சண்டைக்கு செல்கிறாள். பரத்துக்கு தான் கிஷோருடன் பழகுவது பிடிக்கவில்லை என்றும் தன் மீது சந்தேகம் வந்துவிட்டது என்றும் புனிதா பரத்தின் மீது குற்றச்சாட்டு வைக்கிறாள்.

AKS - 54

பரத் பாடியதை கிஷோர் கேலி செய்யும்போது அதை பரத் சீரியசாக எடுத்துக் கொள்வான், அவனுக்குத் தாழ்வு மனப்பான்மை இருக்கிறது என்பது புனிதாவுக்குத் தெரிந்திருந்தும் வேண்டுமென்றே கிஷோருடன் சேர்ந்து கொண்டு பரத்தை கேலி செய்கிறாள். பரத்தின் இடத்தில் யார் இருந்தாலும் நிச்சயமாக கிஷோரின் நோக்கம் தெரியும்போது கோபம் வரத்தான் செய்யும். அதை வெறும் புனிதா மீது இருக்கும் சந்தேகமாக மட்டுமே புரிந்துகொள்ள முடியாது. தனக்கு கிஷோரை பார்த்து எரிச்சலாக இருப்பது உண்மைதான் என்றும் ஆனால் அது நிச்சயமாக புனிதாவின் மீது இருக்கும் சந்தேகம் இல்லை என்றும் பரத் சொல்கிறான்.

Also Read: AKS - 53: ஏற்றிவிடும் கிஷோர், பலிகடாவாகும் பரத்... பாண்டியன் - கவிதாவுக்கு இடையே இருப்பது என்ன?

கிஷோர் நல்லவன் என்றும் சாதாரணமாக அவன் புனிதாவை தொட்டு பேசுவது அவன் வளர்ந்த சூழலில் இருக்கும் பழக்கம் என்றும் புனிதா பரத்திடம் சொல்கிறாள். அது போக ஒரு ஆண் தவறான நோக்கத்துடன் பழகுகிறான் என்றால் பெண்ணின் உள்ளுணர்வு காட்டிக்கொடுத்து விடும் என்கிறாள். அப்படிப் பெண்ணுக்கு தெரியும் என்பது உண்மைதான் என்றாலும் அது தெரிந்திருந்தால் புனிதாவுக்கு கிஷோரை பற்றி முதல் சந்திப்பிலேயே தெரிந்திருக்க வேண்டும். அவன் புனிதாவிற்கும் பரத்துக்கும் இடையில் பிரச்னையை உண்டாக்க, வேண்டுமென்றே காரியங்கள் செய்தும், பரத் கோபப்பட்டும்கூட புனிதாவுக்கு அது புரியவே இல்லை.

AKS - 54

ஒருவேளை புனிதா இதுவெல்லாம் முற்போக்காக இருப்பது என்று நம்பிக் கொண்டிருக்கலாம் அல்லது கிஷோர் புனிதாவை அதிகமாக புகழ்வது அவளுக்குப் பிடித்து, அந்த மயக்கத்தில் அவனைத் தவறாக நினைக்காமல் இருக்கலாம். மொத்தத்தில் புனிதா இவ்வளவு நாள்களாக காதலிக்கும் பரத்தைத் தவறாக நினைத்துக் கொண்டு புதிதாக அறிமுகமான கிஷோரை நம்புவதால் தன்னுடைய காதல் வாழ்க்கையில்தானே குழப்பத்தை உண்டாக்குகிறாள்.

சிவா மீண்டும் மீண்டும் காயத்ரி தன்னைத் தவிர்ப்பதை பற்றி நினைத்துக் கொண்டு இருக்கிறான் அவனுக்கு காயத்ரியிடம் இருந்து விலகியிருக்க, தான் மாயாவுடன் மீண்டும் இணைவதுதான் சரி என்கிற எண்ணம் தோன்றுகிறது. சிவா யோசித்துக் கொண்டிருக்கும்போது புனிதா அங்கு வருகிறாள். அவளிடம் தன் எண்ணத்தை சிவா கூறுகிறான். காயத்ரியிடம் இருந்து விலகி இருப்பதற்காக மாயாவுடன் மீண்டும் இணைவது மாயாவின் மனதை மீண்டும் ஒருமுறை காயப்படுத்தும் என்று புனிதா சிவாவிற்கு எச்சரிக்கை செய்கிறாள். சிவா முதலில் யோசிக்கிறான், பிறகு புனிதாவிடம் தீர்க்கமாக தான் மாயாவுடன் மீண்டும் சேர்வது பற்றி மாயா பேசினாள் தான் ஏற்றுக் கொள்வேன் என்று சொல்கிறான்.

AKS - 54

ஏற்கெனவே சொன்னதுபோல பாண்டியனை வெறுப்பேற்ற கவிதா ராஜேஷை பயன்படுத்திக் கொண்டது எவ்வளவு தவறோ அதேபோல், சிவா மாயாவுடன் இணைவதற்குச் சொல்லும் காரணமும் தவறு. காதல் அப்படி வருவது அல்ல. சிவாவிற்கு மாயாவுடன் ஏற்கெனவே காதலில் இருந்தபோதும் அவள் மீது அவனுக்கு ஈர்ப்பு தானாக உருவாகவில்லை. மாயா சிவாவை காதலிப்பதாக சொல்லும்போது ஏற்றுக் கொண்டான். முன்பு அவனுக்கும் ஈர்ப்பு இருந்திருந்தால் இப்போது மீண்டும் அவளுடன் இணைவது சிவாவிற்கு எளிதானதாக இருந்திருக்கும்.

மாயாவைச் சந்திக்கும் சிவாவிற்குக் காத்திருக்கும் ‘சர்ப்ரைஸ்’ என்ன?
கவிதா - பாண்டியன் இணைவார்களா?

காத்திருப்போம்!



source https://cinema.vikatan.com/television/aks-54-the-friendship-vs-love-dilemma-and-how-the-arrival-of-a-third-person-spoils-a-relationship

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக