கோவிட்டுக்குப் பின் இந்தியக் குடும்பங்களின் சராசரி கடன் விகிதம் ஜி.டி.பி-யில் 32.50 சதவிகிதத்திலிருந்து 37.30 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கடன் என்ற வார்த்தையைக் கண்டு நாம் அஞ்ச வேண்டியதில்லை. ஏனெனில், கடனில் நல்ல கடனும் உண்டு; கெடுக்கும் கடனும் உண்டு. ``என்ன... கடன் நல்லதா? அமெரிக்காவில் எடுத்த ஒரு சர்வே படி 63 சதவிகித மக்கள் கடன் தொல்லையால் இரவு தூக்கத்தைத் தொலைக்கிறார்களாம். அப்படியிருக்க கடன் நல்லது என்று எப்படிக் கூற முடியும்?” - இந்தக் கேள்வி உங்கள் மனதில் தோன்றுவது புரிகிறது.
Also Read: வங்கியை விட அதிக லாபம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்; இதில் உங்களுக்கேற்ற திட்டம் எது? - 34
கடனை ஒரு தவறான விஷயமாகப் பார்க்கும் பரம்பரை நாம். ஆனால் அம்பானி, அதானிகூட வங்கிகளில் கடன் வாங்கி சொத்துகள் வாங்கிக் குவிக்கும் காலம் இது. ஓ.பி.எம் (Other People’s Money) என்பது, நாம் சொத்து சேர்க்க சிறந்த வழி என்று பல புத்தகங்களும், பொருளாதார ஆலோசகர்களும் கூறிவருவது இத்தகைய கடன் பற்றித்தான். எதிர்காலத்தில் நம் வருவாயை உயர்த்தி, செல்வம் சேர்க்க உதவும் கடன்கள் நல்லவை. அவை பற்றி விரிவாகக் காண்போம்.
வீட்டுக்கடன்
நல்ல கடன்களுக்கு உதாரணமாக முதலில் வருவது வீட்டுக் கடன். முன்பே குறிப்பிட்டபடி, வீடு என்பது காலப்போக்கில் விலை ஏறக்கூடிய சொத்து மட்டுமல்ல; ``உணவு, உடை, இருப்பிடம்” என்ற மூன்று அடிப்படைத் தேவைகளில் ஒன்றும் கூட. மேலும் வாடகையாகத் தரும் பணத்தை இ.எம்.ஐ-யாகக் கட்டும்போது அது நமக்கே சொத்தாகச் சேர்கிறது. காலப் போக்கில் வீட்டு விலை ஏறும்போது நம் சேமிப்பின் மதிப்பும் பல மடங்கு உயர்கிறது.
Also Read: கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு; சரியான நேரமா இது? - பணம் பண்ணலாம் வாங்க - 33
இவற்றைக் கருத்தில் கொண்டே அரசும், ``அனைவருக்கும் வீடு” என்ற திட்டத்தை ஊக்குவிக்க வீட்டுக் கடன் வட்டியைக் குறைத்து வருகிறது. நாம் வீட்டுக் கடனுக்கு கட்டும் வட்டிக்கு வருமான வரி பிரிவு 24-ன் கீழ் இரண்டு லட்சம் ரூபாய் வரையும், அசலுக்கு பிரிவு 80சியின் கீழ் ஒன்றரை லட்சம் ரூபாய் வரையும் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.
இப்படி நமக்கு செலவுக் குறைப்பு, வருமானம், தலைமுறைக்கான சொத்து, வரிச்சலுகை அளிக்கும் கருவி என்று பலவித உருவங்களில் உதவக்கூடிய வீட்டை வாங்க நாம் பெறும் கடன் நல்ல கடன். அதை வாங்கும்போது நாம் கட்ட வேண்டிய இ.எம்.ஐ நம் மாத வருமானத்தில் 30 சதவிகிதத்துக்கு மிகாமல் பார்த்துக் கொண்டால் வீட்டுக் கடனை எண்ணிக் கவலை கொள்ளத் தேவையில்லை.
கல்விக்கடன்
`பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்னும்போது, `கடன் வாங்கினும் கற்கை இன்னும் நன்றே’ அல்லவா? கல்விக்கடனின் நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
-
கல்லூரிக் கல்விக்குப் பின் கிடைக்கும் வருமானம் பள்ளிக் கல்வி மட்டும் பெற்றவர்களின் வருமானத்தைவிட மிக அதிகம். அதைப் பெற கல்விக்கடன் உதவுகிறது.
-
கல்விக்கடனுக்கான வட்டி விகிதம் குறைவு.
-
வருமான வரி பிரிவு 80இயின் கீழ் வரி விலக்கு கிடைக்கிறது.
-
கல்வியை முடித்து வேலைக்குச் சென்றபின் கடனைக் கட்ட ஆரம்பிக்கலாம்.
-
அயல் நாடுகளில் கல்வி பெற உதவும் கடன்கள், கல்லூரிக் கட்டணங்களுடன் போக்குவரத்து செலவு, தங்கும் செலவு ஆகியவற்றுக்கும் உதவுகிறது.
Also Read: எஃப் அண்ட் ஓ; இளம் முதலீட்டாளர்களின் டார்லிங்காக மாறக் காரணம் என்ன? பணம் பண்ணலாம் வாங்க - 32
சிறுதொழில் கடன்
சிறு தொழில் முனைவோருக்கு முதல் இரண்டு வருடங்கள் இருக்கக்கூடிய தலைவலிகளில் முதன்மையானது பணப் பற்றாக்குறைதான். மூலப் பொருள்களை வாங்க, அதை சரக்காக மாற்ற, சந்தைப்படுத்த என்று பலவகைகளிலும் பணத்தேவை இருந்து கொண்டே இருக்கும். இதை உணர்ந்து அரசும் எம்.எஸ்.எம்.இ. (Micro, Small & Medium Enterprises) நிறுவனங்களுக்கு சகாய வட்டியில் நீண்டகாலக் கடன் கிடைக்க உதவுகிறது.
கடனைக் கட்ட உதவும் லாபத்தின் ஒரு பகுதிக்கு வரிவிலக்கும் அளிக்கிறது. ஆலமரமாக வளர்ந்து பலருக்கும் நிழல் அளிக்கக்கூடிய நிறுவனங்களாக இன்றிருக்கும் இன்ஃபோசிஸ் போன்றவைகூட ஆரம்பத்தில் கடன் வசதி பெற்றவைதான் என்னும்போது இது நல்ல கடன்தானே?
Also Read: அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு இந்தப் பங்குகளில் முதலீடு செய்யப்போகிறீர்களா? கவனம்! - 30
ஒருவருக்கு எவ்வளவு கடன் இருக்கலாம்?
மேற்கூறிய கடன்கள் நல்லவை என்றாலும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு அல்லவா? பொதுவாக நாம் கட்ட வேண்டிய இ.எம்.ஐ தொகை நம் மொத்த வருமானத்தில் 30% க்கு மிகாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் நமது பொருளாதார அடிப்படை ஆட்டம் காணாமல் இருக்கும்.
கோவிட்டின் கோரத் தாண்டவத்துக்குப் பின் கடனைத் திருப்பிக் கட்டுவதும் சவாலாகத்தான் உள்ளது. ஆனால், இந்த விஷயத்தில் ஏற்படும் தடுமாற்றம் நமது கிரெடிட் ஸ்கோரை பாதித்து பிற்காலத்தில் நம் கடன் பெறும் தகுதியையே பதம் பார்க்கும் என்பதை நினைவில் கொண்டு நல்ல கடனை மட்டும் வாங்குங்கள்; நல்ல கடனையும் அளவோடு வாங்குங்கள்; திருப்பிக் கட்ட முடிந்த அளவு மட்டுமே வாங்குங்கள்.
- அடுத்து திங்கள்கிழமை காலை 9 மணிக்கு சந்திப்போம்.
source https://www.vikatan.com/business/banking/how-can-we-sure-about-our-debts-are-good-debt-or-bed-debt
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக